அத்தியாயங்களின் விளக்கம் – 91 முதல் 100 வரை

91) சூரத்துஸ் ஷம்ஸ் – சூரியன்

அத்தியாயம் 91

வசனங்கள் 15

சூரியன், சந்திரன், பகல், இரவு, வானம், பூமி மற்றும் ஆத்மாவின் மீதும், அதன் பிரதான பண்புகள் மீதும் தொடர்ந்து சத்தியம் செய்து மிக முக்கியமான செய்தி ஒன்றை மனித சமுதாயத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

“அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.” (91:8-10)

பின்னர் ஸமூது கூட்டத்தினர் தமக்கு அனுப்பட்ட நபியாகிய ஸாலிஹ் (அலை) அவர்களை பொய்ப்பித்தது தொடர்பாகவும் அந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட அழிவு தொடர்பாகவும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் தொடர்ந்து குறிப்பிடுகின்றான்.

92) சூரத்துல் லைய்ல் – இரவு

அத்தியாயம் 92

வசனங்கள் 21

‘தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக’ என்று இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து மேலும் பகல் மீதும் சத்தியம் செய்து பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.” (92:4-10)

93) சூரத்துல் லுஹா – முற்பகல்

அத்தியாயம் 93

வசனங்கள் 11

முற்பகல் மீதும், ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீதும் சத்தியம் செய்து அல்லாஹ் தன் அடியானாகிய நபி (ஸல்) அவர்களை கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை மேலும் இம்மையை விட மறுமை சிறந்தது என்று குறிப்பிட்டு அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருட் பாக்கியங்களை ஞாபகப்படுத்துகின்றான்.

“இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.” (93:5-8)

94) சூரத்துஸ் ஷரஹ் – விரிவாக்கம்

அத்தியாயம் 94

வசனங்கள் 8

நபியவர்களின் உள்ளத்தை சாந்தப்படுத்தும் வகையில் இவ்வத்தியாயத்தை இறக்கி அல்லாஹ் நபியவர்களுக்கு செய்த அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகின்றான்.

“நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

ஆகவே கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.” (94:1-5)

95) சூரத்துத் தீன் – அத்தி

அத்தியாயம் 95

வசனங்கள் 8

அத்தியின் மீதும், ஸெய்தூனின் மீதும், தூர்சினாய் மலையின் மீதும், அபயமளிக்கப்பட்ட மக்கா நகரின் மீதும் சத்தியம் செய்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

“திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர – (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.

எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?” (95: 4-8)

96) சூரத்துல் அலக் – இரத்தக்கட்டி

அத்தியாயம் 96

வசனங்கள் 19

நபியவர்கள் சாதாரன மனிதர் என்ற நிலையில் இருந்து இறைத்தூதர் என்ற உயரிய அந்தஸ்த்தை பெற்றுக் கொண்ட அல்-குர்ஆனின் முதல் 5 வசனங்கள் ஹிரா குகையில் தனிமையில் இருக்கும் போது ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து இறக்கி அருளினார்கள்.

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

‘அலக்’ என்ற (இரத்தக்கட்டி) நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96: 1-5)

97) சூரத்துல் கத்ர் – கண்ணியம்

அத்தியாயம் 97

வசனங்கள் 5

பூத்துக் குழுங்கும் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவில் மனித குலத்திற்கே வழிகாட்டியாக அல்-குர்ஆனை இறக்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

“நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

சாந்தி (நிலவியிருக்கும்) அது (அந்த இரவு) விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.” (97:1-5)

98) சூரத்துல் பய்யினா – தொளிவான ஆதாரம்

அத்தியாயம் 98

வசனங்கள் 8

இணைவைப்பவர்களையும், வேதம் கொடுக்கப்பட்ட யூத – கிறிஸ்தவர்களையும் பற்றி இந்த அத்தியாயம் பேசுகின்றது.

“வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.

(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).

அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.” (98: 1-4)

99) சூரத்துஸ் ஸில்ஸால் – அதிர்வு

அத்தியாயம் 99

வசனங்கள் 8

நாளை மறுமை நெருங்கும் போது இடம் பெரும் அடையாளங்களை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.

“பூமி மிகப்பலமாக அதிர்வுக்குள்ளாக்கப்படும் போது

இன்னும் பூமி தனது சுமைகளை வெளிப்படுத்தும் போது

‘அதற்கு என்ன நேர்ந்தது?’ என்று மனிதன் கேட்க்கும் போது

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் கட்டளையிட்டுள்ளான்.

அந்நாளில், மக்கள் தங்கள் செயல்கள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.” (99:1-8)

100) சூரத்துல் ஆதியாத் – விரைந்து செல்லும் குதிரைகள்

அத்தியாயம் 100

வசனங்கள் 11

முதல் ஐந்து வசனங்களில்

மூச்சிரைத்து விரைந்து ஓடும் குதிரைகள் மீதும்,

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமிட்டு

‘நிச்சயமாக மனிதன் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்’ என்பதை இந்த அத்தியாயத்தின் 6 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான். அதற்கு அவனே சட்சியாகவும் இருக்கின்றான் என்று சொல்லிவிட்டு மனிதன் செல்வத்தை கடுமையாக நேசிக்கின்றான் என்பதையும் இந்த அத்தியாயத்தின் 8 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed