இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு?

அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது!

நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்!

ஒருவரின் பாவச்சுமைக்கு மற்றவர் கூலி கொடுக்கப்படமாட்டார்! எனவே பள்ளிவாயிலில் தொழும் போது அதன் இமாம் இணைவைப்பவராக இருந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை!

நாங்கள் எங்களின் கொள்கையில் உறுதியாக இருப்பதால் அவர் இணை வைத்தால் அவர் தொழுகை தான் கூடாது! எங்களுடைய தெழுகைக்கு எவ்வித பங்கமும் இல்லை!

– நாங்களும் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் தவ்ஹீதுவாதிகள் எனக் கூறுபவர்கள் பலரின் வாதம் இது!

இதுபோன்று கூறுபவர்கள், தங்களைத் “தவ்ஹீதுவாதிகள்” எனக் கூறிக்கொண்டாலும் அவர்கள் தங்களின் ஏகத்துவக் கொள்கையை இன்னும் பட்டை தீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது!

காரணம் என்னவெனில், ஏகத்துவம் என்றால் என்னவென்று ஓரளவிற்கு அறிந்து வைத்திருக்கும் இவர்கள், இணை வைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள் யாவை? என்பதைப் பற்றி முழுமையாக அறியாததன் காரணமாகத் தான் அவர்களின் மேலே கூறிய இணை வைக்கும் இமாமின் பின் தொழுவது பற்றிய விளக்கம் அமைந்திருக்கிறது!

இணைவைக்கும் ஒருவர் அதிலிருந்து மீண்டு பாவமன்னிப்புக் கோராமல் அதே நிலையில் மரணித்தால்,

– அவர் இவ்வுலகில் செய்த அனைத்து நல்லறங்களும் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று ஆகி அவற்றுக்கு எவ்வித மதிப்பும் இல்லாமல் பாழ்பட்டுவிடும் எனவும் (பாக்கவும் 6:88)

– அவருக்கு சொர்க்கம் ஹராமாக்கப்பட்டுவிடும் எனவும் (பாக்கவும் 5:72)

– அவர் நிரந்தர நரகில் விழ நேரிடும் எனவும்

நீங்கள் அறிந்திருந்தால் பிறகு எப்படி அந்த நிரந்தர நரகத்திற்குரிய செயலை செய்கின்ற ஒருவரின் பின்னால் உங்களால் தொழ முடியும்?

கப்று வணக்கம் செய்தால் குறைந்த தண்டணையும் சிலை வணக்கம் செய்தால் அதிக தண்டணையும் கிடைக்கும் என்பது உங்களின் கணிப்பா?

அல்லது

சிலை வணக்கம் செய்பவர்கள் மட்டும் தான் முஷ்ரிக்குகள்! மாறாக கப்று வணக்கம் செய்பவர்கள் முஷ்ரிக்குகளல்லர்! என்பது உங்களின் எண்ணமா?

நீங்கள், ‘அந்த இமாம் கலிமா சொல்லியிருக்கிறார். அதனால் அவர் பின்னே நாம் தொழுகிறோம்’ என்று நீங்கள் கூறினால், மதுரை ஆதினம் கூட அடிக்கடி இந்தக் கலிமாவை கூறுவார்! ஏன் ஃபாத்திஹா சூராவைக் கூட அதன் மொழிபெயர்ப்புடன் அழகாக ஓதுவார்! அவர் பின்னாலும் தொழுவீர்களா?

அந்த ‘இணை வைக்கும் இமாம்கள் கலிமாவை மொழிந்ததனால் அவர் பின்னே தொழுகிறோம்’ என நீங்கள் கூறுவீர்களானால் உங்களுக்கும் ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருள் விளங்கவில்லை என்பதே அர்த்தம்!

(பார்க்கவும்: லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்! )

சிலைகளுக்கு பூஜை செய்யும் மாற்றுமத பூசாரியின் பின்னாள் தொழ மறுக்கும் நீங்கள், கப்று வணக்க பூசைகளைச் செய்யும் முஸ்லிம் இமாமின்??? பின்னால் தொழுவதை மட்டும் எப்படி சரிகாண்கிறீர்கள்?

இதிலிருந்து உங்களின் எண்ணத்தில் மிகைத்திருப்பது,

கப்று வணக்கம் வேறு! சிலை வணக்கம் வேறு!

சிலை வணக்கம் செய்து நிரந்த நரகம் செல்ல இருக்கின்றவர்களின் பின்னால் தொழக் கூடாது!

ஆனால்

கப்று வணக்கம் செய்து நிரந்தர நரகம் செல்ல இருக்கின்றவர்களின் பின்னால் தொழலாம்!

என்று தான் விளங்கமுடிகிறது!

உங்களுடைய ஆய்வு எத்தகைய விபரீதமானது என்பது உங்களுக்கு இன்னுமா விளங்கவில்லை?

சில தவ்ஹீதுவாதிகளிடம் நீங்கள் எங்கே தொழுகிறீர்கள்? எனக் கேட்டால், அவர் சூஃபிகளின் பள்ளியைக் காட்டுகிறார்கள்!

அது வழிகேடுகளை மார்க்கமாகப் பின்பற்றும் சூஃபிககளுடையதல்லவா?

எனக் கேட்கும் போது அவர்கள் கூறிய பதில்,

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு சூஃபிகள் எவ்வளவோ மேல்! அதனால் அவர்கள் பின்னே தொழுகிறோம்’ என்கிறார்கள்!

என்னே ஒரு அறியாமை!

ஹதீஸ்களை மறுப்பதாக நீங்கள் எண்ணுபவர்களின் பின்னால் உங்களை தொழுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை! ஆனால் சூஃபிகள் பின்னால் தொழுவதை ஆதரிக்கும் உங்களுக்கு சூஃபித்துவம் என்றால் என்ன? அவர்களின் கொள்கை என்னவென்றே தெரியவில்லை! என்று நாம் உறுதியாக கூற இயலும்!

சூஃபிகள் அல்லாஹ்வை மறுப்பவர்கள்! அல்லாஹ்வும் படைப்புகளும் ஒன்று தான் எனக் கூறும் வழிகெட்டக் கொள்கையுடையவர்கள்!

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்ற ஏகத்துவக் கொள்கைக்கு நேர்மாறாக

“‘இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு பொருளில்லை! அனைத்தும் அல்லாஹ்” என்ற வழிகேடான கொள்கையுடையவர்கள் தான் சூஃபிகள்!!

அவர்களின் கொள்கையை “பரவாயில்லை” எனக் கூறும் உங்களின் அறியாமையை என்னவென்பது?

இத்தகையவரின் பின்னால் நீங்கள் தொழுவதும் இறை நிராகரிப்பாளர்களின் பின்னால் தொழுவதும் ஒன்று தான்! வித்தியாசம் ஒன்றுமில்லை!

இன்னும் சிலர், ‘ஜமாஅத்துடன் தொழுவது அவசியமில்லையா? அதனால் தான் நாங்கள் அந்த இமாம்கள் இணைவைத்தாலும் அவர் பின்னே தொழுகிறோம்’ என்கிறார்கள்.

இதுவும் அர்த்தமற்ற வாதம்! மேலே நாம் விளக்கியவை தான் இதற்கும் பதில்!

ஏகத்துவவாதிகள் ஒன்று கூடி உங்களுக்குள் ஜமாஅத்தாக தொழ இயலாதா? இருவர் சேர்ந்தாலே ஜமாஅத்தாக தொழலாமே? ஏன் உங்களின் குடும்பத்தினர்களுடன் கூட ஜமாஅத்தாக தொழலாமே!

ஆண்கள் பள்ளியினுள் தொழுவது சிறந்ததாக இருக்கிறதால் ஏற்கனவே தவ்ஹீதுவாதிகள் தொழுமிடத்தில் அல்லது வேறு ஒரு இடத்தை தற்காலிகமாக தேர்வு செய்து அந்த இடத்தில் உங்களுக்குள் ஜமாஅத் வைத்து தொழலாமே!

அந்த இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழுவது, நீங்கள் அவர்களை அந்த இணைவைப்பில் நீடிப்பதற்கு ஒருவகையில் அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்!

நாம் வேறு ஒரு ஊருக்கு சென்றிருக்கிறோம்! பள்ளியினுள் இமாமாக இருப்பவர் இணைவைப்பவரா? இல்லையா? எனத் தெரியாது! என்று காரணம் கூறினால் கூட அதை ஏற்கலாம்! இதைக் கூட தற்காலத்தில் அந்தப் பள்ளி எத்தகைய நிலைப்பாடுடையது என்பதை எளிதில் கண்டறியலாம்.

ஆனால், சொந்த ஊரில் இருந்துக் கொண்டிருக்கும் போது, அந்த பள்ளியில் மார்க்கத்தை கேலிக்குள்ளாக்கும் அவுலியாக்களின் கந்தூரி விழாக்கள், ஷிர்க்கான மௌலூதுகள், அவுலியாக்களை அழைத்து உதவி தேடுதல் போன்ற பகிரங்கமான இணைவைப்புகளை அந்தப் பள்ளியின் இமாமே முன்னின்று நடத்தி அதன் மூலம் தான் ஒரு ‘இணைவைப்பாளன்’ என்று என்று ஊருக்கு பகிரங்கமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் அவர் பின்னால் தொழுதுகொண்டு ‘நானும் ஒரு தவ்ஹீதுவாதி தான்’ என்று கூறினால் அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும்!

Hits: 80

மற்றவர்களுக்கு அனுப்ப...

2 comments

 • basheer ahamed

  very excellent article and your have said in this article that “a polytheist he repented Allah for his sin of polytheism he will get forgive from Allah , i like to know how it possible , will Allah for give sin of polytheist {mushriq}

  • அன்பு சகோதரரே!

   இணைவைத்தவர் அதிலிருந்து மீண்டு ஏகத்துவத்தை ஏற்கும் போது அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்று கூறவருகிறீர்களா? உங்களின் கேள்வியில் தெளிவில்லை!

   இணைவைப்பு உட்பட எந்தவொரு பாவம் செய்பவராக இருந்தாலும் அவர் தன் மரணத்திற்கு முன்பாகவே அந்தப் பாவத்திலிருந்து மீண்டு தவ்பா செய்து அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்று அதன்படி செயலாற்றும் போது அவருடைய பாவங்களை மன்னித்துவிடுவதாக கூறுகின்றான்!

   இது தான் இஸ்லாத்தின் அடிப்படையும் கூட!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *