அல்லாஹ்வைப் பார்த்ததாக கூறும் பொய்யர்கள்!

அகிலங்களின் ஏக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது!

அல்-குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாமல், வழிகேடுகளையே மார்க்கமாகப் பின்பற்றுகின்ற பலர், பல மேடைகளிலும் அவர்களின் புத்தகங்களிலும் ‘அவுலியாக்களும் மஹான்களும் அல்லாஹ்வை நேரிடையாகப் பலமுறைப் பார்த்து உரையாடியிருப்பதாக’ பலவிதமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்! இது குறித்த தெளிவை அல்-குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் சான்றுகளின் அடிப்படையில் பார்ப்போம்!

அல்லாஹ் கூறுகிறான்:

“அவன்தான் அல்லாஹ் – உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் – இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன். பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.” (அல்-குர்ஆன் 6:102-103)

மேலே குறிப்பிடப்பட்ட திருமறை வசனத்தில் ‘பார்வைகள் அவனை அடைய முடியாது, ஆனால் அவனே எல்லாப் பார்வைகளையும் சுழ்ந்து அடைகின்றான்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே ‘அல்லாஹ்வை மனிதர்களில் யாருமே அவனைப் பார்த்ததில்லை’ என்றும் அறிய முடிகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவின் போது இறைவனைப் பார்த்தார்களா?

மஸ்ரூக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

“நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் முஃமின்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது.

‘மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார்.’

‘முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறினாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக),

“கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கின்றான்.” அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். எனும் (6:103 ஆவது) வசனத்தையும்,

“எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (42:51 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.

மேலும், ‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றை அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்’ என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக),

‘எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை’ எனும் (31:34 ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மேலும், ‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள், என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்’ என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக),

‘தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் இறைவன் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்’ எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மாறாக, ‘முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்’ என்று சொன்னார்கள்.”

ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்றுள்ள ஆதாரப் பூர்வமான இந்த ஹதீஸே ‘நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்க்க வில்லை’ என்பதைத் தெளிவு படுத்துகிறது.

மேலும்’

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்,

‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். நூல் முஸ்லிம் (291)

எனவே மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து ‘நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை’ என்றே அறியலாம்..

மூஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் இறைவனைப் பார்த்தார்களா?

மூஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதையும் ‘மூஸா (அலை) அவர்களால் அல்லாஹ்வைப் பார்க்க இயலாது’ என அல்லாஹ் அவருக்கு உணர்த்தியதையும் பின்வரும் வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது!

“நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா:

‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார்.

அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான்.

ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும்,

‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார்..” (அல்-குர்ஆன் 7:143)

மேற்கண்ட வசனமும் ஒரு சிறந்த நபிக்கு கூட இவ்வுலகில் அல்லாஹ்வை காணும் சக்தியில்லை என்பதை உணர்த்துகிறது!

எனவே மஹான்கள் பல முறை இறைவனைக் கண்டார்கள், அவனிடம் உரையாடினார்கள் என்றெல்லாம் சூஃபியாக்களின் போலிக் கொள்கைப் பரப்பு புத்தகங்களிலும் மத்ஹப்களின் பிக்ஹ் புத்தகங்களிலும் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.

மறுமையில் அல்லாஹ்வைக் காணலாம்!

அல்-குர்ஆனும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் மறுமையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அவனுடைய நல்லாடியார்களுக்கு அல்லாஹ் காட்சி தருவான் என்று கூறுகிறது.

“அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.” (அல்-குர்ஆன் 75:22-23)

மேலும் பல நபிமொழிகளும் இது குறித்து கூறுவதை அறியலாம்!

“இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள்.

நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள்.

மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கும் நபித்தோழர்கள், ‘இல்லை’என்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

காஃபிர்கள் மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா?

“(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.” (அல்-குர்ஆன் 83:15)

என அல்லாஹ் கூறுவதிலிருந்து காஃபிர்களால் மறுமையில் அல்லாஹ்வைக் காண இயலாது என்பதை அறிய முடிகிறது!

எனவே, அல்-குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றுகளுக்கு மாற்றமாக அவுலியாக்களும் மஹான்களும் அல்லாஹ்வை இவ்வுலகில் பார்த்ததாகப் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் வழிகேடர்களின் கூற்றுக்களைப் புறந்தள்ளிவிட்டு மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்கும் நற்பேறினைப் பெற்றிட அதற்குரிய நல்வழியில் சென்றிட அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாகவும்.

Hits: 47

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *