அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-9

நீங்கள் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தின் உயர்ந்த படித்தரத்தையே கேளுங்கள்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி!”

என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன”

என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

துன்பம் நேரும் போது என்ன ஓத வேண்டும்?

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது,

‘லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்;

‘லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அரீம்;’

‘லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்’

என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்:

நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை;

மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை;

வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) (ஆதாரம்: புகாரி)

வானவர்கள் சாட்சி கூறும் ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுகை!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கிறார்கள்.

அவர்களிடம் அல்லாஹ், ‘என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?’ என்று – உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே – கேட்கிறான்.

‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்’ என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

மறுமையில் அல்லாஹ்வைக் காண வேண்டுமா? பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளை முறையாகப் பேணுங்கள்!

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள்.

‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)’

என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

நல்ல தூய்மையான, ஹலாலான பொருள்களையே தர்மம் செய்ய வேண்டும்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். – அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான்.”

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

பொய்ச்சத்தியத்தின் மூலம் பிறரின் சொத்துக்களை அபகரிப்பவரின் மறுமை நிலை!

‘பொய்ச் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை அவர் சந்திப்பார்’

என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு இதை உண்மைப்படுத்துகிற இறைவசனத்தை ஓதினார்கள்:

‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது; அவர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான்’ (திருக்குர்ஆன் 03:77)85′

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ் மறுமையில் பேசாத மூன்று நபர்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்.

‘ஒருவர் (தம்) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார்.’

மற்றொருவர், ‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்று கூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார்.’

வேறொருவர், ‘தம் தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்கருக்குத் தராமல்) தடுக்கிறார்.’

(அவரிடம்) அல்லாஹ் மறுமைநாளில், ‘நீ தேடிச் சம்பாதிக்காத பெருளை (-நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்’

என்று கூறுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

Hits: 70

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *