ஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.

ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.

ஆஷுரா நோன்பின் சிறப்பு: –

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அறிந்ததும் இது ஏன் என்று வினவினார்கள். அதற்கு யூதர்கள் “இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தான். எனவே அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். “மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு நான் உங்களை விட அதிக உரிமையுள்ளவன்” என்று கூறிவிட்டு அந்நாளில் நோன்பு நோற்குமாறு மக்களை ஏவினார்கள். (ஆதாரம்: புகாரி)

ஆஷுரா தினத்தன்று அண்ணலார் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதுடன் பிறரையும் நோற்குமாறு ஏவினார்கள். அப்போது தோழர்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினத்தை யூத கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்துகின்றனரே’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியாயின் அடுத்த ஆண்டு அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்போம்’ என்று கூறினார்கள்.

மற்றுமொரு அறிவிப்பின்படி, ‘அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வரு முன்பே மரணத்தைத் தழுவி விட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா நோன்பின் பலன்: –

ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பது, கடந்த ஆண்டு செய்த பாவங்களை அழித்து விடும் என்பது நபி மொழியாகும். (ஆதாரம்: முஸ்லிம்)

ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதன் நோக்கமாவது, பத்தாம் நாள் பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதுவே. பத்தாம் நாள் நோற்பதன் காரணம் அந்நாளில் நல்ல காரியங்கள் பல நடந்திருக்கின்றன. அதாவது அல்லாஹ் தன் நேசர்களான மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றி, அவர்களின் எதிரிகளான ஃபிர்அவ்னையும் அவனைச் சார்ந்தோரையும் கடலில் மூழ்கடித்தது இந்நாளில் தான்.

இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும். ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.

ஆஷுரா தினத்தன்று நடைபெறும் அனாச்சாரங்களில் சில: –

ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதுபவர்கள் அந்த வருடம் மரணிக்கப்படமாட்டார்கள் என நம்புவது

சாம்பிராணி புகையிட்டு அது பொறாமை, துவேஷம், சூனியம், முதலியவற்றை முறித்து விடும் என உண்ணுவது

வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்

புத்தாடை அணிதல்

ஆடம்பரமாக செலவழித்தல்

விஷேச தொழுகை ஏற்படுத்துதல்

துக்கம் அனுஷ்டித்தல்

ஆடைகளைக் கிழித்தல்

மண்ணறைகளையும் மஸ்ஜிதுகளையும் தரிசித்தல்

போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சத்திய பாதையில் வாழ்ந்து சத்தியவான்களாக மரணிக்க வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed