நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்

பொருளாசை நிறைந்த இந்த உலகில் ஸதகா கொடுத்தல் என்பது மிக மிக அரிதாகி விட்டது. மனிதன் மரணிக்கும் போது எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட சேர்த்து வைப்பதில் தான் அதிக அக்கரை எடுத்துக் கொள்கிறான்.

அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றை அல்லாஹ் தனது திருமறையில்,

“நீங்கள் விரும்பும் பொருள்களிலில் இருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” (அல்-குர்ஆன் 3:92) என்று கூறுகிறான்.

இந்த உலகத்தில் மனிதன் விரும்பும் பிரதான பொருள் செல்வம். எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும.

மறுமை நாளில் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே! அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே என ஆதங்கப்படுவான். முஹம்மது (ஸல்) அவர்கள்

“பேரித்தம் பழத்தின் ஒரு கீற்றைக் கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்” என கூறியுள்ளார்கள். (புகாரி)

ஆகையால் பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றைத் தான தர்மம் செய்வதைக் கொண்டும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என தெரிய வருகிறது.நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம் இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் மனிதன் எண்ணிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அல்லாஹ் திருமறையில்,

“அவர்களுடைய செல்வத்தில் யாசிப்போருக்கும், வசதியற்றோருக்கும் (நாணம் காரணமாக கேட்காமலட இருப்போருக்கும்) உரிமையுண்டு” (அல்-குர்ஆன் 51:19)

என கூறுகிறான். ‘உரிமை உண்டு’ என்று கூறுவதன் மூலம் எவர் ஒருவர் தான தர்மம் செய்ய வில்லையோ அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளி என அறிய முடிகிறது.

நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்து விடுகிறது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அல்லாஹ் திருமறையில்,

“நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்” (அல்-குர்ஆன் 34:39)

என்று கூறுகிறான். நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டும் எனில், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள முடிகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,

“(கஷ்டத்திலிருப்போருக்கு) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கிறாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி, பன் மடங்காகச் செய்வான்” (அல்-குர்ஆன் 2:245)

என்று கூறுகிறான்.  ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பாவியாக உள்ளான். தங்களுக்கு தாங்களே பாவம் செய்து கொண்ட அடியார்கள் என்று தான் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். தங்களின் பாவங்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்று ஸதகா என்னும் தான தர்மம்.

நபி (ஸல்) அவர்கள் “நீரானது நெருப்பை அணைப்பது போல் ஸதகா பாவங்களை அழித்து விடுகிறது” என்று கூறியுள்ளார்கள். (அஹமது, திர்மிதி).

தான தர்மங்கள் செய்யும் போது ஏதோ கடமைக்கு செய்யாமல், நம்முடைய தகுதிக்கு முடிந்த வரையில் செய்ய வேண்டும். பள்ளிவாசலிலோ அல்லது வெளி இடங்களிலோ உதவி கேட்பவர்களிடமே நம்முடைய பணப்பையை திறந்து 500, 200, 100, 50, 20, 10 போன்ற நோட்டுக்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட்டு விட்டு எப்படியாவது தேடிப்பிடித்து ஒரு ரூபாய் அல்லது அதைவிடக் குறைவாக கொடுக்கக் கூடியவர்களாக உள்ளோம். அதற்காக எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாமே!.

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில்,

“குழந்தைகளும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைகளாகவே தரப்பட்டுள்ளது” (அல்-குர்ஆன் 8:28)

என்று சொல்கிறான். அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றி பெற வேண்டுமெனில், அந்தச் செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.

மேலும் தர்மம் செய்யும் போது, மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்தால் அது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

முஹம்மது (ஸல்) அவர்கள், “வேறு எந்த நிழழும் இல்லாத அந்த நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிருந்து நிழல் தருகிறான். வலது கை தருவதை இடது கை அறியாது மறைத்து தருபவர் அந்த ஏழு பேரில் ஒருவர்” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆனால் அதிகமான அறிஞர்களின் கருத்துப் படி, மற்ற செல்வந்தர்களை ஊக்கப்படுத்துவதற்காக, தான தர்மங்களை வெளிப்படையாகவும் செய்வது நன்மையான விஷயமாகவே கருதப்படுகிறது.

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்து விடுகிறார்கள். வசதியில்லாதவர்கள் தான தர்மங்கள் எவ்வாறு செய்வது என்று நினைக்கத் தோன்றும். முஹம்மது (ஸல்) அவர்கள்,

“தொழுகைக்காக எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முவல் பூப்பதும் ஸதகா!” என்று கூறியுள்ளார்கள்.

இங்கே சஹாபாக்களின் கொடுக்கும் தன்மையை கூறுவது சிறப்புக்குரியதாக இருக்கும் என எண்ணுகிறேன். அவர்களின் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்ளலாமே!

அபூபக்கர் (ரலி) அவர்களை குறித்து முஹம்மது (ஸல்) அவர்கள் “இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவியதில்லை” என்று கூறினார்கள்.

தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும். தபூக் யுத்தத்திற்காக முஹம்மது (ஸல்) அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் (ரலி) அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து, அபூபக்கர் (ரலி) அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது, முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களுடைய குடும்பத்தினருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேட்கிறார்கள். “சிலதை என்னுடைய குடும்பத்தினருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் கொடுத்து விட்டேன்” என பதில் அளிக்கிறார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கொடுத்த போது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தினருக்குப் போதுமானவர்களாக உள்ளனர்” என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியபோது, உமர் (ரலி) அவர்கள் “அபூபக்கர் (ரலி) அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்திவிட முடியாது” என்றார்கள். சஹாபாக்களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அவன் அளிக்க விருக்கும் பரதிபலன்களைப் பெற்று நற்பாக்கியம் பெற்றவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள வேண்டும் என பிரார்த்திப்போமாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed