ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும்.

இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன்.

முதல் தொடரிலே, நம் அமல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருளை ஒவ்வொருவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பார்த்தோம்.

ஒருவன் மிகுந்த சிரமங்களுக்கிடையில் செய்கின்ற தன்னுடைய ஒவ்வொரு அமலும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அவன் விரும்புவானானால் முதலில் தன்னுடைய ஏகத்துவக் கலிமாவின் நிலைப்பாட்டை சோதித்து அதன் உறுதித் தன்மையை அவன் சரிகாண வேண்டும்.  அதிலே அவன் உறுதியற்ற, ஸ்திரமற்ற தன்மையில் இருப்பானேயானால் இஸ்லாத்தின் உயிர்நாடியான அவனுடைய ஏகத்துவ நம்பிக்கை என்னும் அஸ்திவாரம் பலகீனமானதாகவே இருப்பதாகும்.

பலகீனமான ஒரு அஸ்திவாரத்தில் ஒருவன் பலமாடிக் கட்டிடத்தை எழுப்புவானாயின் அது எவ்வாறு பலனற்று விழுந்துவிடுமோ அவ்வாறே தவறான ஏகத்துவ நம்பிக்கை  எனும் பலகீனமான அஸ்திவாரத்தின் மீது அடுக்கடுக்காக செய்யப்படுகின்ற பல நூறு, ஆயிரம், இலட்சம், கோடிக் கணக்கக்கான நன்மைகளும் ‘அவனுடைய ஏகத்துவ நம்பிக்கை’ என்னும் அஸ்திவாரம் உறுதியற்று இருப்பதால் அவ்வனைத்து நன்மைகளும் பயனற்றுப் போய்விடுகின்றன. இதன் விபரங்களை இன்ஷா அல்லாஹ் இனி அடுத்தடுத்து வரக்கூடிய ஏகத்துவத்தைப் பற்றிய விளக்கங்களில் காணலாம்.

தவ்ஹீது – ஏகத்துவம் என்றால் என்ன?

தவ்ஹீது – (ஏகத்துவம்) என்றால் இறைவனை ஒருமைப்படுத்துல் என்பதாகும்.

அதாவது, ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ – அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ் – இறைவன்’ இல்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒருவர் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வை,

  1. அவனுடைய படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல்களில் அவனை ஒருமைப்படுத்துவது
  2. வணக்கவழிபாடுகளில் அவனை ஒருமைப்படுத்துவது மற்றும்
  3. அவனுடைய பண்புகளில், பெயர்களில் அவனை ஒருமைப்படுத்துவதாகும்.

முஸ்லிம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் முதலில் அவசியம் அறிந்துக் கொள்ளக் வேண்டியவைகள் இவைகளைப் பற்றித் தான். இஸ்லாத்தின் உயிர்நாடியான இந்த ஏகத்துவத்தைப் பற்றிப் புரிந்துக் கொண்டு செயலாற்றுவதில் தவறிழைப்பவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு வெளியேறியவர்களாக இறை நிராகரிப்பாளர்களாகவும், முஷ்ரிக்குகளாகவும் ஆகுகின்றனர்.

நமது ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் வரை எந்தெந்த சமுதாயங்களுக்கொல்லாம் நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் போதித்தது இந்த ஏகத்துவத்தைத் தான். இந்த ஏகத்துவத்தின் ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் விரிவாக விளக்க வேண்டும் என்றால் பல ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக எழுதினாலும் அவைகளை முடிக்க இயலாது. ஆயினும் நமக்குத் தேவையான அடிப்படையான விசயங்களை என்னால் இயன்ற அளவு சுருக்கமாக தருவதற்கு முயல்கின்றேன்.

1) படைத்துப்பரிபாலிக்கும் ஆற்றல்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

இதை ‘தவ்ஹீதுர் ருபூபிய்யத்’ என்றும் கூறுவர்.

தவ்ஹீது ருபூபிய்யா என்பது: –

  • அனைத்துப் பொருட்களையும் அவைகள் ஒன்றுமே இல்லாமலிருந்தபோது உருவாக்கியவன் அல்லாஹ்வே
  • அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் அவைகளிடமிருந்து எந்தவித தேவைகளுமில்லாமல் உணவளித்து பாதுகாத்து வருபவன்
  • அவனே இந்தப் பேரண்டத்திற்கும் மற்றும் அதிலுள்ள அனைவருக்கும் ஒரே இறைவன்
  • அவனுடைய ஆட்சியதிகாரத்தில் யாருக்கும் எவ்வித பங்குமில்லை
  • அனைத்துப் பொருட்களுமே அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டே இயங்குகிறது
  • அவன் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.

என்பன போன்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும்.

தவ்ஹீது ருபூபிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: –

“அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்” (39:62)

“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்” (37:96)

உலகிலுள்ள முஸ்லிம்களில், அவர்கள் எந்தப்பிரிவினர்களாக இருந்தாலும்  கிட்டத்தட்ட  அநேகர்களாலும்  ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வகை தவ்ஹீதை மாற்று மதத்தவர்களில் சிலர் கூட ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் கூட இவ்வகை தவ்ஹீதை ஏற்றுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள்! ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக” (10:31)

பிறிதொரு இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

23:84 ‘நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?’ என்று (நபியே!) நீர் கேட்பீராக!

23:85 ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள்! ‘(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?’ என்று கூறுவீராக!

23:86 ‘ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?’ என்றும் கேட்பீராக.

23:87 ‘அல்லாஹ்வே’ என்று அவர்கள் சொல்வார்கள்! ‘(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?’ என்று கூறுவீராக!

23:88 ‘எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)’ என்று கேட்பீராக.

23:89 அதற்கவர்கள் ‘(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)’ என்று கூறுவார்கள். (‘உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?’ என்று கேட்பீராக.

மேற்கண்டவாறு படைத்துப்பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று நம்பிக்கொண்டிருந்த மக்களிடையே தான் நபி (ஸல்) அவர்கள் போர் புரிந்தார்கள். அவர்களை சிறை பிடித்தார்கள்!

காரணம், தவ்ஹீது ருபூபிய்யாவை நம்பிக்கைக் கொண்டிருந்த மக்கத்து முஷ்ரிக்குகள், மற்ற இரு தவ்ஹீது வகைகளான வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது மற்றும் இறைவனின் பண்புகளில், பெயர்களில் இறைவனை ஒருமைப்படுத்துவது ஆகியவற்றில் தவறிழைத்து அவற்றில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்ததே ஆகும்.

எனவே இறைவனை ஒருமைப்படுத்துவதில் இவ்வகையை மட்டும் நம்பிக்கைக் கொண்டு ஏற்று செயல்படுத்தி மற்ற இருவகைகளில் இரண்டையுமோ அல்லது இம்மூன்றில் ஏதாவது ஒன்றை நிராகரித்தாலோ அவன் ஏகத்துவத்தில் தவறிழைத்தவனாக ஆகி அதன்மூலம் நஷ்டமடைந்தவனாகின்றான்.

‘வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது’ என்றால் என்ன? – இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed