கருணையாளனிடம் கேட்போம், கவலையை மறப்போம்

“அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).)

“அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி))

“துஆ” நம் வணக்கத்தில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களும் கூட,

“பிரார்த்தனையே வணக்கமாகும்”

எனக் கூறியுள்ளார்கள். அந்த வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ் (ஜல்) தவிர வேறு யாருமில்லை. இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு மனக்கவலைகள், தேவைகள் நிறைவேறவேண்டுமென்ற ஏக்கங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. அல்லாஹ் மிக இரக்கமுடையவன். நாம் அவனிடம் கையேந்துவதை விரும்புபவன்.

பாவங்கள் செய்வது மனிதனின் இயல்பு. அதை திருத்திக்கொள்வதும் அத்துடன் அதற்காக தவ்பா செய்வது தான் அதற்கான சரியான தீர்வு. நான் பாவங்கள் செய்தவன் என்பதால் என் துஆ இறைவனிடன் அங்கீகரிக்கப்படாது என்று கருதுவது,  தனக்குதானே ஒருவன் தப்பிக்க தேடும் ஒரு தவறான வழியாகும். மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் செய்வது தான் தவ்பா. அப்படி செய்துவிட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே பாவத்தை செய்து விட்டால் அல்லாஹ்விடம் சத்தியத்தை மீறிய குற்றத்துக்கு ஆளாகிவிடுவோமே என்று நினைக்கிறான் மனிதன்.

வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான். அப்படியிருந்தும்  “நாங்கள் கேட்டால் கிடைக்காது அதனால் இறைவனின் நெருக்கத்தை பெற்றவர்களிடன் முறையிட்டு பெறுகிறோம் என்று சொல்வது”  அல்லாஹ்வின் கருணை மீது அவர் கொண்டுள்ள சந்தேகம் இல்லையா? யார் மற்றவருக்காக துஆச்செய்தாலும்,  தேவை உள்ளவர் அல்லாஹ்விடன் கொண்டுள்ள நெருக்கத்தை பொருத்துத்தான்  கொடுப்பதும் மறுப்பதும் அமையும்.

அதனால் அல்லாஹ்வின் அளவற்ற கருணைமீது நம்பிக்கை வைத்து கிடைக்கும் என்ற மன உறுதியுடன் அவனிடமே அனைத்தையும் கேட்போமாக.  ஐவேளை தொழுகைக்குப்பிறகும் நாம் துஆக்கேட்கிறோம். ஆனால் மனதை ஒருங்கினைத்து கேட்கிறோமா என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.  வழக்கமாக நாம் ஒரேமாதிரியான துஆக்களை கேட்பதால் நம் சிந்தனை இங்கே இல்லாவிட்டாலும் நம் நாவு அதை அடுக்காக கேட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை, அது சரியான முறையாகாது. மறதியில் கேட்பதை இறைவன் விரும்புவதில்லை. மனதை ஒன்றி, அவன் நம்மை கவனிக்கிறான் என்பதை மனதால் நினைத்து, நாம் என்ன கேட்கிறோமோ அந்த சூழ்நிலையை கண்முன் நிறுத்தி பனிவுடன் கேட்கவேண்டும். அவன் கண்டிப்பாக நம் துயரத்தை நீக்குவான் என்ற உறுதியோடு கேட்கவேண்டும்.

 இறைவன் நம்மை படைத்ததன் நோக்கம் அவனை நாம் வணங்கவே!. அதற்க்காக சன்னியாசத்தையும் அவன் விரும்பவில்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையே அவனின் இபாதத்தில் கழிக்கமுடியும். எப்படியென்றால், நாம் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் அனுமதித்த வகையில் செய்வதாகும். இஸ்லாத்தின் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றியும், பொய் சொல்லாமலும், பொறாமை கொள்ளாமலும், புறம் பேசாமலும், மற்றவருக்கு நாவினாலும், உடல் உறுப்பினாலும் தீங்கிழைக்காமலும், முடிந்தவரை மற்றவருக்கு உதவியாகவும், ஹலாலான வழியில் பொருளீட்டியும், நம்பிக்கை மோசடி செய்யாமலும், தர்மங்கள் செய்தும், முடியும்போது நபிலான வணக்கங்களை செய்தும், பயன் தராத காரியங்களில் நேரத்தை வீணாக்காமலும், முக்கியமாக நாம் ஒவ்வொரு நொடியும் இறைவனால் கண்கானிக்கப்படுகிறோம் என்பதை புரிந்தும், அவனுக்கு பயந்தும் வாழ்ந்தாலே நாம் ஒவ்வொரு நாளையும் அல்லாஹ்வின் பொருத்தத்துடன் கழித்த நல்லவர்களாகிவிடுகிறோம்.

சுருக்கமாக நம் வாழ்க்கையில் இறைவன் விரும்பாதவைகளை தவிர்த்தல் ஆகும். இவ்வாறு வாழ்ந்தால் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்காமல் அவனின் பொருத்தத்தை பெறலாம், அவனிடம் தயங்காமல் நம் தேவைகளையும் கேட்கலாம்.

சில குறிப்பிட்ட நேரங்களில் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்ற நமது கண்மணி நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பை இப்போது பார்ப்போம்.

துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

1) நோன்பாளி நோன்பு துறக்கும் வேளை.

2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கூறினார்கள்,

“மூவரின் துவாக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளர்; (அநியாயமாக)பாதிக்கப்பட்டவர்.” (அஹமத், அத்திர்மிதி)

3) ஜம் ஜம் நீர் குடிக்கும் போது.

 ஜாபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

“ஜம் ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது.” (அஹ்மத்:357, இப்னு மாஜா:3062)

இதன் பொருள் ஜம் ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.

கருணையுள்ள ரஹ்மான், இந்த ரமழான் மாதத்தை, நம்முடைய துஆக்களை அங்கீகரிக்கப்படக்கூடிய மாதமாக ஆக்கி அருள வேண்டியவனாக.

சகோதரர்,
அன்வர்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed