பித்அத்துல் ஹஸனா பற்றிய விளக்கம்

பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:புகாரி, முஸ்லிம்

மேலும் கூறினார்கள்: –

‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான்’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.

நபி (ஸல்) அவர்களின் வார்த்தையான ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்’ என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.

மேலும் ‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்’ என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)

எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில்,  ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும்.

இவர்கள் கூறக்கூடிய பித்அத்துல் ஹஸனாவிற்கு உமர் (ரலி) அவர்கள் தராவீஹ் தொழுகை குறித்து கூறிய வார்த்தையான ‘நல்ல பித்அத்’ என்பதைத் தவிர வேறு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. (ஸஹீஹூல் புகாரி). இவர்களின் மற்றுமொரு வாதம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்படாத அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைத் தொகுத்தல் போன்றவைகள் பித்அத்துல் ஹஸனா இல்லையா என்பது. இனி இவைகளுக்கான நமது விளக்கத்தைப் பார்ப்போம்.

நமது விளக்கம்: –

தராவீஹ் தொழுகை குறித்து உமர் (ரலி) அவர்கள் கூறியது, குர்ஆன் மற்றும் நபி மொழிகளைத் தொகுத்தது போன்றவற்றிற்கு இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரம் உள்ளது, இவைகள் பித்அத் அல்ல.

உமர் (ரலி) அவர்கள் பற்றிய ஹதீஸ்: –

உமர் (ரலி) அவர்கள் கூறிய ‘என்ன ஒரு நல்ல பித்அத்’ என்பது மொழி அடிப்படையிலான  வார்த்தையாகும். ஷரீஅத் வார்த்தை அல்ல. எனவே இந்த ஒன்றையும் பித்அத் என்று குறிப்பிடப்பட்டு அதற்கு ஷரீஅத்தில் அடிப்படை ஆதாரம் இருக்குமானால் அது மொழி அடிப்படையிலான வார்த்தையாகும். ஏனெனில் ஷரீஅத் அடிப்படையில் பித்அத் என்பது அந்த செயலுக்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதாகும். இதில் எவ்வித குழப்பமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு சில நாட்கள் தராவீஹ் தொழுகை நடத்தினார்கள். பின்னர் இது அவர்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என அஞ்சி தொழ வைப்பதை நிறுத்தி விட்டார்கள். சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தனித்தனியாக தராவீஹ் தொழுகையை தொடர்ந்து தொழுது வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகும் நபித்தோழர்கள் தொடர்ந்து தனித்தனியாக தொழுது வந்தார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் தனித்தனியாக தொழுது வந்த சஹாபாக்களை ஒருங்கினைத்து ஒரு இமாமின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்தியது போலவே  நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். இது எப்படி உமர் (ரலி) அவர்கள் பித்அத் செய்ததாகும். மாறாக உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வணக்கத்தை உயிர்பித்திருக்கிறார்கள் என்றல்லவா நாம் கருத வேண்டும். எனவே பித்அத் புரிபவர்களின் இந்த வாதமும் அடிப்படையற்றதாகும்.

குர்ஆனை ஒரே நூலாக தொகுத்தது பித்அத் அல்ல: –

குர்ஆனை ஒரே நூல் வடிவில் தொகுத்ததற்கு இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரம் உள்ளது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதி வைத்துக் கொள்வதற்குக் கட்டளையிட்டார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவ்வப்போது அருளப்பட்ட திருமறை வசனங்கள் எழுதிவைக்கப்பட்டது. ஆயினும் முழுவதுமாக தொகுக்கப்படாமல் பிரிந்து கிடந்தது. அதையே நபித்தோழர்கள் ஒன்று சேர்த்து ஒரே நூல் வடிவில் உருவாக்கினார்களே தவிர அவர்களாக புதிதாக ஒன்றை உருவாக்கவில்லை. எனவே இவர்களின் கூற்றாகிய நபித்தோழர்கள் பித்அத் செய்தனர் என்பது அர்த்தமற்ற வாதமும் நபித்தோழர்களின் மீது அவதூறு கூறுவதும் ஆகும்.

ஹதீஸ்களை தொகுத்ததும் பித்அத் அல்ல: –

ஹதீஸ்களை எழுதி வைத்ததற்கும் இஸ்லாத்தில் அடிப்படை ஆதாரமுள்ளது. நபி (ஸல்) அவர்கள் நம்முடைய தோழர்கள் சிலருக்கு ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்வதற்கு கட்டளையிட்டார்கள். ஆயினும் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் ஹதீஸ்களை எழுதி வைப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. இதற்கு காரணம் என்னவெனில் ஹதீஸ்கள் குர்ஆன் வசனங்களோடு கலந்து விடக்கூடும் என்ற அச்சத்தினால் தான். நபி (ஸல்) அவர்கள் மரணமடையும் போது இந்த அச்சம் இல்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னரே குர்ஆனின் அத்தியாயம் மற்றும் வசனங்களை வகைபடுத்தி முழுமையான குர்ஆனாக ஒழுங்குபடுத்தினார்கள். எனவே பின்னர் வந்த முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை தொகுத்து அவைகள் தொலைந்து போகாமல் பாதுகாத்தார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாகவும். ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் சுன்னாவையும் அவைகள் தொலைந்து போகாமலும் மற்றும் மாசுபடாமலும் பாதுகாத்தார்கள்.

பித்அத்துல் ஹஸனா என்ற பெயரில் நூதன வழிபாடுகளைச் செய்பவர்களுக்கு நம்முடைய கேள்விகள்: –

பித்அத்தான செயல்களைப் புரிந்து அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்ல செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா? இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா? நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்?

எனவே சகோதர சகோதரிகளே! சற்று சிந்தியுங்கள்!. நபி (ஸல்) அவர்களால் ”(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை’ என்று கடுமையாக எச்சரிக்கப்ட்டுள்ள அனைத்து வித பித்அத்களிலிருந்தும் தவிர்ந்து வாழ வேண்டியது மிக மிக அவசியமாகின்றது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி ஏனைய பித்அத்தான செயல்களிலிருந்து முற்றிலும் விலக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
4 thoughts on “பித்அத்துல் ஹஸனா பற்றிய விளக்கம்”
  1. asslamu alaikum…
    my question is….
    RASATH KHALIFA YENBAVAR YAAR.AVAR ORU THUTAR(MESSANGER)YENDRU ORU SILA KUTTATAR SOLLI AVARAI PINBATRUKIRARKAL.ITHIL INGAL KARUTHAI ATHARATHODU YENAKKU VILAKKAUM,,,
    WASALAM

  2. May Allah Bless you for your kind effort in spreading the message of Islam in its pure form.

    I pray Allah to keep you always with
    1. Good Intention (Ihlaas)
    2. the way of Muhammed (sal)

    Your brother in Islam.

    Slk Rizwan

  3. i’m an university student i need more article of the tittle of the “bithath” those web side and articles are more usefull to my final year research

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed