ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

‘ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற’ இப்புனித ரமலான் மாதத்தில் ‘நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை’ முறையாக நோற்பதன் மூலம் ‘மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி’ நமது ‘முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு’ ‘ரைய்யான் என்னும் வாசலின் வழியாக சுவர்க்கம் நுழைந்திட’  நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

நாம் இதுவரை ஏகத்துவத்தின் வகைகளைப் பற்றி பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக ‘அல்லாஹ்வின் பெயர்களில் பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன? என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முஸ்லிம்களில் பலர் முஷ்ரிக்குளாக ஆகுவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்று கூறப்படுகின்ற இந்த வகை தவ்ஹீதை புரிந்துக் கொள்ளாததும் காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நமது மக்களில் பலர் இதைப் பற்றிய தெளிவில்லாமல் இறைவனுக்கு மட்டுமே இருக்கும் பண்புகளை, ஆற்றல்களை அவனது அடிமைகளுக்கும் வழிங்கி இணைவைப்பில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். ‘இணைவைப்பு’ என்பது மறுமை வாழ்வையே நாசமாக்கி நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய அளவிற்கு படுபயங்கரமான செயலாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஏகத்துவத்தின் இந்த வகையினையும் நன்றாக அறிந்துக் கொண்டு இணைவைத்தலின் சாயல்கூட நம்மீது விழாதவாறு மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும்.

‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்றால் என்ன?

‘தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய அஸ்மா – பெயர்களை, ஸிஃபாத் – பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ்வின் பண்புகளில், ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது; அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ, அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது.

இன்னொரு வகையில் கூறுவதென்றால், அல்லாஹ் தன்னுடைய திருமறையின் மூலமாக தன்னைப் பற்றி எவ்வாறெல்லாம் வர்ணித்துள்ளானோ மேலும் நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த நற்பெயர்கள் மற்றும் உயர்பண்புகளைக் கொண்டு அல்லாஹ்வை வர்ணித்துள்ளார்களோ அவையனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு, அவற்றுக்கு நம்முடைய கற்பனைக் கேற்றவாறு எவ்வித சுயிவிளக்கமும் கொடுக்காமல் அதை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கூறியவாறே ஏற்றுக்கொண்டு அந்த நற்பெயர்கள் மற்றும் உயர் பண்புகளை அவனுடைய அடிமைகளான நபிமார்கள், இறைநேசர்கள், அவுலியாக்கள் மற்றும் இன்னும் பிற படைப்பினங்களுக்கு இணையாக்காமல் இருப்பதாகும்.

அல்லாஹ் தன்னைப் பற்றி வர்ணித்துள்ள சில வசனங்கள்:

“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” (7:180)

“அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்” (42:11)

“(பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  (19:65)

“அவனுக்கு நிகராக எவரும் இல்லை” (112:4)

“அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்” (2:255)

“அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்” (20:5)

“அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன” (5:64)

“மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்” (55:27)

இது போன்ற இன்னும் ஏராளமான திருமறை வசனங்களிலும் மற்றும் நபிமொழிகளிலும் அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி எப்படி வர்ணித்துள்ளார்களோ அவற்றை அப்படியே ஈமான் கொள்வதும், அவனுடைய படைப்புகளின் பண்புகளுக்கு அல்லாஹ்வுடைய பண்புகளை எவ்விதத்திலும் ஒப்பிடாமல் இருப்பதும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் கடமையாகும்.

தவ்ஹீது – ஏகத்துவம் என்பது விரிவான பாடமாகும். ஆயினும் நமது நம்பிக்கைகளைப் சுயபரிசோதனை செய்வதற்காக மிக சுருக்கமாக பார்த்துவந்தோம். ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிர் உள்ளவரை நாம் இதுவரை பார்த்த மூன்று வகையான ஏகத்துவத்திலும் உறுதியாக இருந்து அதற்கு எவ்வித களங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது மிக மிக அவசியமாகும்.

நாம் அனைவரும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ‘ஈமான் – விசுவாசம்’ கொண்ட முஸ்லிம்கள் என்றே கூறிக்கொள்கிறோம். ஆயினும் நம்மில் பலர் ஏகத்துவத்தின் உண்மை நிலையை சரிவர அறிந்துக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த தவறிழைப்பவர்களாகவே இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்” (அல்-குர்ஆன் 6:82)

மேற்கண்ட இறைவசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

‘இறைநம்பிக்கைகொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. எனவே, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல! அது இணைவைப்பையே குறிக்கிறது. ‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே, (திருக்குர்ஆன் 31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா?’ என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் (6:82), ஏக இறைவனின் மீது ஈமான் கொண்டு, தங்களுடைய ஈமானில், இறை நம்பிக்கையில் யாதொரு இணைவைப்பு என்ற அநீதியைக் கலக்காமல் அவனையே வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு சுபசெய்தி கூறப்பட்டுள்ளது. மாபெரும் அநீதியாகிய இணைவைப்பு என்பதிலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களுக்கு நேர்வழியும், மறுமையில் இறைவனின் தண்டணையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

இணை வைப்பு என்றால் என்ன? – இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed