ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ என்ற நபிமொழிக்கேற்ப அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து அவனிடம் பாவமன்னிப்பும் நேர்வழியையும் கேட்போம். “ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” என்ற நபிமொழிக் கேற்ப நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த ரமலானை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு அல்லாஹ்வின் திருமறையை அதிகமதிகம் பொருளறிந்து படிப்போம்! தப்ஸீர்களை படித்து வசனங்களின் விளக்கங்களைப் பெறுவோம்.

இப்புனித மாதத்திலே நமது ஏகத்துவ நம்பிக்கைகளையும், செயல்பாடுகளையும் சுயபரிசோதனை செய்து சீர்செய்து கொள்கின்ற வகையிலே இதுவரை ஏகத்தும் என்றால் என்ன என்பதையும் அதன் வகைகளையும் சுருக்கமாகப் பார்த்தோம். இனி ஷிர்க் என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதனால் விளையும் கேடுகளையும் அதை தவிர்ந்து வாழ்வதற்கான அவசியத்தையும் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ஷிர்க் – இணை வைப்பு என்றால் என்ன?

ஷிர்க் – இணைவைத்தல் என்பது தவ்ஹீதின் – ஏகத்துவத்தின் எதிர்பதம் ஆகும். அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஆற்றல்கள், பண்புகள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இருப்பதாக நம்பி அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாவர்களுக்காக செய்தல். இத்தகைய செயல்களுக்கு இணைவைத்தல் – ஷிர்க் என்று பெயர்.

இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

இணைவைத்தலின் தீமைகள்: –

  • ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
  • இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
  • இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
  • இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்

இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். இணைவைத்தலில் பெரிய ஷிர்க், சிறிய ஷிர்க் மற்றும் மறைமுக ஷிர்க் என மூன்று வகைகள் இருப்பதாக அறிஞர்கள் வரையறுக்கிறார்கள்.

பெரிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

சிறிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது

பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது

இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும். நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மறைவான ஷிர்க் என்றால் என்ன?

மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு முஃமின் இவை அனைத்தையும் விட்டு தவிர்ந்தவர்களாக தமது வாழ்வை அமைத்துக் கொள்வது மிக அவசியமாகும். ஷிர்க் என்றால் என்ன என்பதை அறியாமையிலே நமது மக்கள் எவ்வாறெல்லாம் ‘ஷிர்க்குல் அக்பர்’ என்று கூறப்படுகின்ற பெரிய ஷிர்கிலே விழுந்து உழன்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை ஓரு உதாரணம் மூலம் பார்ப்போம்.

உதாரணமாக, ஒருவர் தமது ஊரில் இருந்துக்கொண்டு நாகூரில் அடக்கமாகியிருக்கும் ஷாகுல் ஹமீது மகானிடம்,

‘நாகூர் ஆண்டவரே! என் மகன் வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத தீரா வியாதியினால் அல்லல்படுகிறான். ஆகவே என் வீட்டிற்கு வருகை புரிந்து என் மகனின் பிணி தீர்க்க உதவி செய்யுங்கள்! என் மகனின் நோய் தீர்க்க நீங்கள் உதவினால் உங்களின் சமூகத்திற்கு நான் விஜயம் செய்து உங்களுக்கு காணிக்கைச் செலுத்துகிறேன்’

என்று தம் மனதிற்குள் நாகூர் ஆண்டவரை அழைத்து, உதவி தேடி, பிரார்த்தனை செய்து, நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.  படிப்பதற்கு மிக எளிமையாக தோன்றுகின்ற இந்த நேர்ச்சையை ஒருவர் செய்து, அதே நிலையில் அவர் இறந்தும் விட்டால், அந்த நேர்ச்சையே அவரை நரகத்தின் அதளபாதாளத்திற்கு நிரந்தரமாக தள்ளக்கூடிய அதிபயங்கரமானதாக இருக்கின்றது. எப்படி என்கிறீர்களா? இவர் எவ்வாறெல்லாம் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றார் என்பதைப் பட்டியலிடுவோம்!

  • இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ‘நேர்ச்சை’ என்னும் வணக்கத்தை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வதவராகின்றார் (2:270, 19:26 3:35)
  • அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடவேண்டும் என்ற இறைவனின் கட்டளைகளை மீறி, அல்லாஹ் அல்லாத ஷாகுல் ஹமீது நாயகத்திடம் உதவி தேடுகிறார் (2:107, 2:153, 3:150, 3:160, 4:45, 9:116)
  • அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக்கூடாது என்பதற்கு மாற்றமாக, அல்லாஹ் அல்லாத ஷாகுல் ஹமீது நாயகத்திடம் பிரார்த்தனை செய்கிறார் (7:197)
  • மறைவான ஞானம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்ற இறைவனின் கூற்றுக்கு மாற்றமாக மறைவான ஞானம் அறியும் ஆற்றல் நாகூர் ஆண்டவருக்கும் இருப்பதாக நம்புகிறார் (10:20, 6:50)
  • தம் கண்முன் இல்லாமல் மறைவாக இருக்கும் நாகூர் ஷாகுல் பாதுஷாவை அழைத்து உதவி கோருகிறார். ஒருவர் தமக்கு முன்னால் இல்லாதிருக்கும் பட்சத்தில் அவரை அழைத்து உதவி கோருவதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும் (46:5)
  • எங்கிருந்துக் கொண்டு அழைத்தாலும், எத்தனை தூரத்தில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் அல்லாஹ் கேட்பது போல் நாகூர் ஆண்டவரும் கேட்கிறார் என்று நம்பிக்கை கொள்கிறார் (42:11)
  • அது போல எங்கிருந்துக் கொண்டு அழைத்தாலும், எத்தனை தூரத்தில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் அல்லாஹ் நம்மைப் பார்ப்பது போல் போல் நாகூர் ஆண்டவரும் நம்மைப் பார்த்து நமக்கு உதவிசெய்கிறார் என்று நம்பிக்கை கொள்கிறார் (42:11)
  • ஒருவர் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை அறியும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர ஷாகுல் ஹமீதுக்கும் உண்டு என்று நம்புகிறார் (2:265, 26:218-219)
  • இதய இரகசியங்களை அறியும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர நாகூர் அவுலியாவுக்கும் உண்டு என்று நம்புகின்றார் (67:13, 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38)

இவ்வாறு பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்! ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்த பாமர முஸ்லிம் ஒருவர் இவ்வாறு நேர்ச்சை செய்கின்றார் என்றால் நிச்சயமாக அவருக்கு அந்த ஏகத்துவத் திருக்கலிமாவின் உண்மையான அர்த்தம் புரியாததன் காரணமாகவே மறுமை வாழ்வை நாசமாக்கும் இத்தகைய விபரீத நேர்ச்சையை செய்கின்றார்.

ஏகத்துவம் என்றால் என்ன என்பதை ஒருவர் சரிவர அறிந்திருந்திருந்தால் இத்தகைய வழிகேட்டின் பக்கம் ஒருபோதும் செல்லமாட்டார்.  எனவே நாம் ஒவ்வொருவரும் இத்தகைய வழிகேடல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் நமது சகோதர, சகோதரிகளை அதிலிருந்து மீட்டெடுக்கும் முகமாக அவர்களுக்கு இணைவைப்பின் தீமைகளைப் பற்றியும், ஏகத்துவத்தைச் சரிவர அறிந்து அதை முறையாக செயல்படுத்தினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் அழகிய முறையில் விளக்க வேண்டும்.

உண்மையான ஏகத்துவவாதிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்! – இன்ஷா அல்லாஹ் அடுத்த  தொடரில் பார்ப்போம்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed