ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் – புதுப் புலர்வுடன்

அரபி மூலம்: சுலைமான் அல்-முதைரி;

தமிழாக்கம்: அபூ அரீஜ்

லாயிலாக இல்லல்லாஹ் என்றால், ‘உண்மையாகவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாகும்.

“யார் (உண்மையாகவே) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறி, அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படுவதை நிராகரிக்கிறாரோ அவரது செல்வமும் அவருடைய உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“அது, நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத் தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” (அல்-குர்ஆன் 31:30)

இத்திருகலிமாவிற்கு மார்க்க அறிஞர்கள் ஏழு முதன்மையான நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள். அவற்றை அறிந்து பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

மாறாக அவற்றை மனனம் செய்துக் கொண்டு கடைப்பிடிக்காமலிருப்பதல்ல. இந்நிபந்தனைகள் அனைத்தும் அல்-குர்ஆனையும் அல்-ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும்.

உதாரணமாக தொழுகைக்கு நிபந்தனைகள் பல இருப்பதைப் போன்றதாகும். இங்கே குறிப்பிடப்படுகின்ற நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது தான் “லாயிலாஹ இல்லல்லாஹ்வை” மொழிந்தவனுக்கு பயனளிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இங்கே ஒவ்வொரு நிபந்தனைக்கும் இரு உப நிபந்தனைகள் தரப்படுகின்றன. இந்த உப நிபந்தனைகள் தான் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

உப நிபந்தனைகள்: –

a) ஒவ்வொரு நிபந்தனைக்கும் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம் (பூரண விசுவாசியாகும் நிலை)

b) குறிப்பிட்ட அந்நிபந்தனையை முறிக்கும் காரியங்கள் (அதாவது அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்)

முதன்மையான ஏழு நிபந்தனைகள்: –

1) அறிவு: –

அதாவது, ‘வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே’ என்றும் ‘அவனல்லாதவைகளை வணங்குவது தவறானது, அவைகளால் யாருக்கும் உதவி, தீமை செய்ய முடியாது’ என்பதை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வதாகும்.

“ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக (அல்-குர்ஆன் 47:19)

இந்த வசனத்தின் மூலம் ‘அறிவைத் தொடர்ந்து தான் அமல்கள் இடம் பெற வேண்டும்’ என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை அறிந்த நிலையில் எவர் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்”

என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸ் மூலமாக அறிவார்ந்த செயல்பாடு தான் ஒருவனை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அறிவை அடிப்படையாக வைத்து செயலாற்ற வேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் நமக்கெதிராக அமல்கள் கொண்டு வரப்படும்.

1a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: –

இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், கடமையான விஷயங்கள், அறியாமை காரணமாக செய்வதால் நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்கள் என்பவற்றை அறிந்த நிலையில், ‘உண்மையாகவே வணக்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான் என்பதையும், அவனன்றி வணங்கப் படுபவைகள் அனைத்தும் நிராகரிக்கப்படி வேண்டியவைகள்  என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்’.

1b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –

‘வணக்கத்திற்குரியவன் உண்மையாகவே அல்லாஹ் தான் என்பதை அறியாமலிருத்தல்,

அல்லாஹ் அல்லாதவைகளையும் வணங்கலாம்; அவைகள் இணைவைப்பை ஏற்படுத்தாது’ என்று நினைத்தல்,

அல்லது,

இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், வாஜிபுகள், இஸ்லாத்தை விட்டும் வெளிறே்றக் கூடிய தடுக்பட்ட விஷயங்களை அறியாமலிருத்தல் போன்றனவாகும்.

உதாரணம்:

‘அவ்லியாக்களிடம் பிரார்த்திக்கலாம்’ என்று நினைப்பது. (இதனைச் செய்தால் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவான்).

2) மன உறுதி: –

அதாவது, ‘எவ்விதமான சந்தேகமுமின்றி உறுதியுடன் நம்ப வேண்டும்’. இவ்வடிப்படையில் கடுகளவேனும் சந்தேகப்படக் கூடாது.

“(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாதிருந்தவர்கள்” (அல்-குர்ஆன் 49:15)

இவ்வசனத்தில் அவர்களுடைய மன உறுதியானது, அவர்களின் உண்மைத் தன்மையைப் பறை சாற்றுகின்றது. இதில் சந்தேகம் கொள்வது நயவஞ்சகமாகும்.

“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வென்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன். எந்தவொரு அடியான், இவ்விரு விடயங்களிலும்  சந்தேகமற்றவனாக அல்லாஹ்வைச் சந்திக்கின்றானோ அவன் சுவர்க்கம் நுழைவான்”

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் ஒருவன், சுவனம் நுழைவதற்கு, ஷஹாதா கலிமாவைப் பொறுத்தவரை மன உறுதி எனும் நிபந்தனை மிகவும் கண்டிப்பான ஒரு விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த அடிப்படையில் சந்தேகம் கொள்வது நிராகரிப்பாகும்.

2a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: –

‘உண்மையாகவே வணக்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான்’ என்பதையும், அவனன்றி வணங்கப்படுபவைகள் இணைவைப்பாகும் என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி மன உறுதியுடன் நம்புவதாகும்.

அத்துடன் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், கடமையான விஷயங்கள் மன உறுதி இல்லாமையின் காரணமாக நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.

2b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –

மேலே குறிப்பிட்ட விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டால்

அல்லது

‘அல்லாஹ் அல்லாதவைகளும் வணங்கப்படத் தகுதியானவைகள் தான்’ என்றோ

அல்லது

‘அச்செயல்   இணைவைப்பாகாது’ என்றோ கருதினால் இந்த நிலை அவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும்.

3) ஏற்றுக் கொள்ளல்: –

அதாவது இந்த சாட்சியத்தை ‘மறுப்பின்றி’ ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றில் எதுவொன்றையும் நிராகரிப்பதோ மறுப்பதோ கூடாது.

“அல்லாஹ்வையும், எங்கள் பால் இறக்கப்பட்ட (இவ் வேதத்)தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் என (விசுவாசங்கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்” (அல்-குர்ஆன் 2:136)

“மேலும் ‘அல்லாஹ்வைத் தவிர (உண்மையாகவே) வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமையடிப்பவர்களாக  இருந்தனர். நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்திற்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விடுகின்றவர்களாக?என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்” (அல்-குர்ஆன் 31:35-36)

இந்த வசனம், ‘பெருமையின் காரணமாக ஏக தெய்வக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆற்பட்டார்கள்.’ எனவே ஏற்றுக் கொள்ளுதல் என்பது இங்கு ஒரு  முக்கிய நிபந்தனையாக இடம் பெறுகிறது.

3a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: –

இத்திருக்கலிமா உள்ளடக்கியிருக்கின்ற விஷயங்களையும், இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களையும் மனதார ஏற்றுக்கொள்வதாகும்.

3b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –

இத்திருக்கலிமா பொதிந்துள்ள விஷயங்களில் ஒன்றை ‘அது மார்க்கத்திலிலுள்ள விஷயம்’ என்பது தெரிந்திருந்தும் அதனை அவன் நிராகரித்தால் அவன் இஸ்லாத்தை விட்டும்  வெளியேறிவிடுகிறான்.

உதாரணம்:-

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவன் கண்டிப்பாக எல்லா வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மடடும் தான் செலுத்த வேண்டும்.

அதேநேரம், பரவாயில்லை அவ்லியாக்களிடமும் பிரார்த்திப்போம் என்று சொன்னால், அவன் இன்னும் ஏக தெய்வக் கொள்கையை சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே குறிப்பிட்ட அந்த இணைவைப்பானது அவனை இஸ்லாத்தை விட்டும் வெளிறே்றி விடுகின்றது.

4) கட்டுப்படுதல் (கீழ்படுதல்): –

அதாவது, அல்லாஹ்வைத் தனது வணக்கத்திற்குரிய நாயனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை அவனது நபியாகவும் தூதராகவும் ஏற்று இக்கலிமாவின் கடமைக்குக் கட்டுப்படவேண்டும்.

“இன்னும் உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள். அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்படிந்தும் விடுங்கள்” (அல்-குர்ஆன் 39:54)

செயல்களற்ற நம்பிக்கை மட்டும் எந்த பிரயோசனமும் அளிக்காது.

உதாரணமாக:-

அபூதாலிப் அண்ணலார் நபி என்பதில் உறுதியாக இருந்தார். அவரை உண்மைப் படுத்தவும் செய்தார்.

அதுமட்டுமல்ல அண்ணலாருக்கு உதவி ஒத்தாசையாகவும் இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கீழ்படியாத போது அல்லாஹ்வின் நேசத்தைப் பெறாமல்  இணைவைப்பாளர்களில் ஒருவரானார் என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகின்றது.

‘எவர் – அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ, அவர் நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டார்’ (அல்-குர்ஆன் 31:22)

மேற்கண்ட வசனத்தின் விளக்கம் : –

‘எவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில்’ என்றால் அண்ணலாரின் வழிமுறையைப் பின்பற்றி வாழுதல் என்பதாகும்.

‘அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ’ என்பது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, அவனுக்குக் கீழ்படிந்து, எல்லா அமல்களிலும் மனத்தூய்மையைக் கைப்பிடித்து  இணைவைக்காமலும் இருத்தலுமாகும்.

‘நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்’ என்றால், ஏகத்துவக் கலிமாவான கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தண்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார் என்பதாகும்.

இந்த வசனத்தில் ‘அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ’ என்ற பகுதி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்குக் கீழ்படிதலைக் குறித்து நிற்கின்றது.

4a)இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம்: –

எந்த விஷயங்களை விடுவதால் ஒருவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுமோ அவைகளில் கவணமாக இருந்து அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு கீழ்படிதலாகும்.

4b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –

அ) எதாவது ஒரு கடமையை முழுமையாக விடுதல்

ஆ) குறிப்பாக முழுமையாக விடுதல்

இ) ஏகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒன்றை விடுதல் அல்லது

ஈ) ஏகத்துவக் கொள்கையை நிலை நிறுத்தும் விஷயங்களில் ஒன்றை விடுதல் மூலம் ஒருவனை நிராகரிப்பாளனாக்கும் செயல்களைச் செய்தல்.

உதாரணம்:-

முஸ்லிம்களை நேசிக்காமலிருத்தலும், இஷைவைப்பாளர்களை விட்டும் ஒதுங்கியிருக்காமலித்தலும் இதில் அடங்கும்.

5) உண்மை: –

அதாவது உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த நிலையில் இந்தக் கலிமாவிற்கு கட்டுப்பட்டு இஸ்லாத்தைப் பின்பற்|றுவதாகும்.

‘விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்ளுங்கள்! (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்’ (அல்-குர்ஆன் 9:119)

இந்த வசனம் உண்மை எனும் நிபந்தனையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்த நிபந்தனை நீங்கும் போது அவ்விடத்தை பொய்யும் நயவஞ்சகமும் இடம் பிடிப்பதை நாம் அறிந்துக் கொள்ள முடியும். அதே போன்று இந்த நிபந்தனை நீங்கும் போது அதற்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கமும் கைநழுவிப் போய்விடும்.

‘எவர் (உண்மையாகவே) வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதத் என்றும் சாட்சி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

5a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம்: –

இத்திருக்கலிமா உள்ளடக்கியவற்றை உண்மையாகவே ஈமான் கொள்ள வேண்டும். அதில் எல்லளவும் சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது.

5b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –

அ) அந்த திருக்கலிமாவை ஆரம்பமாகவே பொய்யாக மொழிதல்

ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கியுள்ளவற்றை பின்னர் பொய்படுத்தல்

6) மனத்தூய்மை: –

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே எனும் மனத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும். எந்த வகையான உலக இலாபங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடாது.

‘தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே  உரித்தானது என்பதை அறிந்துக் கொள்வீராக’ (அல்-குர்ஆன் 39:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

தனது உள்ளத்திலிருந்து மனத்தூய்மையோடு எவன் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறானோ அவன் தான் (மறுமையில்) எனது பரிந்துரைக்கு மிகவும் தகுதியானவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

இந்த ஹதீயில் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை ஷஹாதா கலிமாவில் பிரதானமாகும் என்பது புலனாகின்றது. அத்துடன் மனத்தூய்மை அற்றுப் போகின்றபோது அண்ணலாரின் பரிந்துரை இல்லாமல் போவதை உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.

இதே போன்று இன்னும் எத்தனையோ ஹதீஸ்களில் எவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகின்றாரோ அவர் மீது நரகம் ஹராமாகின்றது போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இது வாஜிபான ஏகத்துவக் கொள்கை பூரணமாகின்ற போது தான் சாத்தியமாகும் என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கொள்கை நிறைவேற சில நிபந்தனைகள் அவசியம்: –

– வாஜிபான கடமைகளை நிறைவேற்றுதல்

– இரண்டு வகையான (சிறிய, பெரிய) இணைவைப்புகளிலிருந்து நீங்கியிருத்தல்

– பெரும்பாவங்களை விட்டும் நீங்கியிருத்தல்

மனத்தூய்மைக்கு எதிரானது இணைவைப்பு, முகஸ்துதி போன்றவைகளாகும். ஒரு முஸ்லிம் மனத்தூய்மையற்றவனாக தனது அமல்களைச் செய்கின்ற போது அந்த அமல்கள் அனைத்தும் பயனற்றுப் போவது மட்டுமல்லாமல் தண்டைனையையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

“மேலும் (இம்மையில்) அவர்கள் செயலால் செய்து கொண்டிருந்தவற்றின் பால் நாம் முன்னோக்கி, பின்னர்  (அவர்கள் உலகில் விசுவாசம் கொள்ளாததால்) பரத்தப்பட்ட புழுதியாக (பயனற்றதாக) அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்” (அல்-குர்ஆன் 25:23)

6a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: –

இறை நம்பிக்கையில் அல்லது செயல்பாடுகளில் அல்லது சொற் பிரயோகங்களில் ஷிர்க் கலந்துவிடாமலிருக்க வேண்டும்.

6b) இந்த நிபந்தனைணை முறிக்கும் காரியங்கள்: –

எவனது இறை நம்பிக்கையிலோ அல்லது செயல்பாடுகளிலோ அல்லது சொற்பிரயோகங்களிலோ ஷிர்க்கின் ஒரு பகுதியாவது கலந்து விட்டால் குறிப்பிட்ட அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்..

உதாரணம்: –

அப்துல் காதிர் ஜீலானிக்கு அறுத்துப் பலியிடலாம் என்று எண்ணினாலோ அல்லது அறுத்துப் பலியிட்டாலோ அல்லது அந்த விஷயம் கூடும் என்று கூறினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும்  வெளியேறிவிடுகிறான்.

7) நேசம்: –

அதாவது இத்திருக்கலிமா மூலம் ஏற்படக் கூடிய கொள்கை கோட்பாடுகளை நேசித்தல், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அதே போன்று அவனுக்கு வழிபட்டு நடக்கும் நல்லடியார்களையும் அத்து மீறாமல்) நேசித்தலாகும். இறுதியாக அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பதாகும்.

இது அல்லாஹ்வின் மீது அன்புக் கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய தண்டனையைப் பயந்து அவனது நற்கூலிக்கு ஆதரவு வைத்ததாகவும் வேண்டும். ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாகப் பின்பற்றுவது தான்.

“(நபியே) நீர் கூறுவீராக, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்” (அல்-குர்ஆன் 3:31)

“மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்… அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறவே மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:165-167)

உண்மையான நேசத்தில் அல்லாஹ்வுக்கு அவனது படைப்பினங்களை நிகராக்குவது ஒருவனை இஸ்லாத்திலிருந்து  வெளியேற்றி அவனை நிரந்தர நரகவாதியாக மாற்றும் என்பது தெளிவாகின்றது.

எனவே இங்கு குறிப்பிடப்படும் நேசம் என்பது ஒரு மிகப் பெரிய வணக்கமாகும். அல்லாஹ்வோடுள்ள நேசமானது அதில் அதில் எவ்வித கலங்கமும் அற்ற நிலையில் இருக்க வேண்டும்.

அப்போது தான் உண்மையான விசுவாசியாக அது அவனை மாற்றும்.எனவே தான் இது ஷஹாதா கலிமாவின் நிபந்தனைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

7a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சங்கள்: –

அ) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்

ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கிய விஷயங்களை நேசித்தல்

இ) முஃமின்களை நேசித்தலும் இணைவைத்தலையும் இணைவைப்பாளர்களையும் வெறுத்தல்

7b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: –

அ) அல்லாஹ்வுக்கு நிகராக ஒன்றை நேசித்தல்

உதாரணம்:-

நாகூர் ஆண்டவரை அல்லாஹ்வை நேசிப்பது போன்று நேசித்தல். இது நிராகரிப்பாகும்.

ஆ) இத்திருக்கலிமாவின் உள்ளடக்கங்களில் ஒன்றை வெறுத்தல்

இ) இணைவைப்பiயும், இணைவைப்பாளர்களையும் வெறுக்காமலிருத்தல்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

3 thoughts on “ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் – புதுப் புலர்வுடன்”
  1. லாயிலாக இல்லல்லாஹ் என்றால், உண்மையாகவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும். என்று கூறப்பட்டு இருக்கிறது

    ஆனால்,இன்த கலிமாவில் என்த ஒரு இடதிலயும் வணக்கத்திற்குரிய நாயன் என்ற ஓரு வ்சனமும் கிடையவே கிடையாது. இதற்கு எந்த ஒரு ஆதரத்தையும் தர வில்லை.

    so please remove it

    more information read ஈமானின் உண்மையை நீ அறிவாயா?

    1. இலாஹ் என்று அரபு பதத்திற்கு விளக்கம் வணக்கத்திற்குரிய நாயன் என்பது…அரபு படித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்…

  2. this is very useful and important article by the basic of monotheism to the people of tamizh, i convey my thank to the auther. jazakallah..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed