இணைவைக்கும் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு?
அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது, அவனது சாந்தியும் சமாதானமும் அவனுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள், மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.
இன்று நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் திரும்பி இருக்கிறோம் என்றால் அது நம்முடைய அறிவாற்றலினாலோ அல்லது நமது திறமையினாலோ அன்று; மாறாக அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் தன் அடியார்களாகிய நம்மீது கொண்டுள்ள, மிகப் பெரும் கருணையினால் அவனுடைய சத்திய மார்க்கத்தின் வழி காட்டியாக விளங்கும் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் நம்மைத் திருப்பி இருக்கிறான். இதற்காக அவனுடைய அடியார்களாகிய நாம் அவன் நமக்கு புரிந்த பேருபகாரத்திற்காக எவ்வளவு தான் நன்றி செலுத்தினாலும் அது போதுமானதாக இருக்காது.
அல்லாஹ்வின்,அளப்பெரும்,கருணையும்,நேர்வழியும் நமக்கு இருந்திருக்காவிட்டால், நவூதுபில்லாஹ் மின்ஹா! அவனால் என்றுமே மன்னிக்கபடாத ஷிர்க் என்னும் மாபாதக செயலாகிய இணைவைத்தல் என்றும் மிகக் கொடிய பாவத்தில் இன்றளவும் நாமும் உழன்று கொண்டிருப்போம். எனவே நாம் நம்மீது கருணை கொண்ட வல்ல ரஹ்மானை, கருணையாளனை எக்கணமும் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உண்டாவதாக!
அல்லாஹ் கூறுகிறான்:-
“அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் – சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்” (அல்-குர்ஆன் 6:125-126)
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசித்திருக்கின்ற ஒவ்வொரு முஃமின் மீதும் அவனுடைய சத்திய மார்க்கத்தை தம் குடும்பத்தார்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு இன்னும் சமுதாயத்தில் உள்ள பிறருக்கும் எடுத்துக் கூறுவதை கடமையாக்கியுள்ளான். ஆனால் யாருக்கு நேர்வழி காட்டவேண்டும் என்பது முற்று முழுதாக அல்லாஹ்வின் விருப்பத்தைப் பொருத்தது.
அல்லாஹ் கூறுகிறான்:-
“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (அல்-குர்ஆன் 66:6)
எனவே முஃமினான ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தம்மையும் தம் குடும்பத்தார்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும். அதற்காக நம் குடும்பத்தார்களை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையிலான தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது, அவர்களை அல்லாஹ் கட்டளையிட்ட ஏவல் விலக்கல்களை பேணி நடக்குமாறு ஏவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
நாம் முதலில் நமது நெருங்கிய குடும்பத்தார்களை அல்-குர்ஆனின் பக்கம் திருப்ப முயற்சிக்க வேண்டும். அவர்களிடம் கண்ணியமான முறையில் எடுத்துக் கூறி அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படிக்கச் செய்திட முயற்சிக்க வேண்டும். கருணையாளனான அல்லாஹ் நாடினால் அதன் மூலம் அவர்கள் மிககொடிய ஷிர்க் எனும் இணைவைத்தலிருந்து விடுபட்டு படைத்த இறைவனை மட்டும் வழிபடும் உன்மையான முஸ்லிம்களாக மாறக்கூடும்.
முக்கியமான, விஷயம் ஒன்றை இங்கே நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். நாம் நமது குடும்பத்தார்களிடம் இஸ்லாத்தைப் போதிக்கும் போது மிகவும் அறிவுக் கூர்மையுடன், நிதானமாகவும் மிகவும் பொறுமையுடனும் செயல்படவேண்டும். மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நாம் தூய இஸ்லாத்தை அறிந்துணர்ந்து ஏற்றுக்கொண்டு விட்டதால் நமது குடும்பத்தார்களும், அவர்கள் பிறந்தது முதல் செய்து வருகின்ற சமாதி வழிபாடு, பித்அத் போன்ற அனைத்து வழிகேடுகளையும் உடனடியாக விட்டு விடவேண்டும் என்று அவசரப்படக் கூடாது. நிதானமின்மையின் காரணத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், குடும்பத்தில் பிரிவுகள் போன்றவைகள் நிகழ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தேவையற்ற நீண்ட வாக்குவாதங்களையும், விவாதங்களையும் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.
சந்தர்ப்ப, சூழ்நிலைகளை அனுசரித்து யாரிடம் பேசப்போகின்றோமோ அவருடைய மனநிலையை அறிந்து மிகவும் நளினமாகவும், விவேகத்துடனும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அவர்கள் செய்கின்ற ஷிர்க், பித்அத் போன்றவற்றைக் கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டக் கூடிய அறிவுப்பூர்வமான தர்க்கரீதியில் (logic) எடுத்துரைக்க வேண்டும்.
பின்னர் தூய இஸ்லாம் என்பது அல்-குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு செய்வதையே அல்-குர்ஆனும் நமக்கு போதிக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான்:-
“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்” (அல்-குர்ஆன் 16:125)
நமது குடும்பத்தார்கள் தாம் செய்கின்ற தவறை உணர்ந்து சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு சில நிமிடங்ள் ஆகலாம், அல்லது சில நாட்கள் ஆகலாம் அல்லது சில மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். ஏன் சில சமயங்களில் அவர்கள் சத்திய இஸ்லாத்தை கடைசி வரையிலும் ஏற்றுக் கொள்ளாமலேயே மரணிக்கலாம்.
அல்லாஹ் முஸ்லிம்கள் மீது கடமையாக பிறருக்கு எடுத்துசொல்வதை மட்டும் தான் ஆக்கியிருக்கிறான். ஒருவரை நேர்வழி படுத்துவதோ அல்லது வழிகேட்டில் விட்டுவிடுவதோ நம்முடைய பொறுப்பன்று. அது அல்லாஹ்வின் விருப்பத்தை பொறுத்தது.
இஸ்லாத்தில் சேருமாறு யாரையும் நிர்ப்பந்தப் படுத்தக்கூடாது: –
அல்லாஹ் ஒவ்வொருக்கும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும், இறைவனை அடைவதற்குரிய பாதையை தேர்ந்தெடுக்கும் சுய விருப்பத்தையும் கொடுத்திருக்கிறான். எனவே அல்லாஹ் நாடினால் அவர் சுயமாக சிந்தித்து சத்திய இஸ்லாத்தை தமது இறைவனை அடையும் வழியாக தேர்ந்தெடுப்பார்.
ஆகையால் நாம் நம்முடைய விருப்பங்களை, நம்பிக்கைகளை ஒருவர் மீது திணித்து, அதை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தக் கூடாது. அவர்கள் எவ்வளவு தான் நமக்கு நெருக்கமானவர்களாகவோ, அல்லது அன்பு, பாசத்திற்குரியவர்களாகவோ இருந்தாலும் சரியே! ஏன்னென்றால் அவர்களை நேர்வழி படுத்தும் ஆற்றல், சக்தி நம்மிடம் இல்லை. நமது பொறுப்பு நம்மால் முடிந்த அளவு அவர்களிடம் எடுத்துக் கூறுவது தான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
“(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:256)
“(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் – மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்” (அல்-குர்ஆன் 28:56)
பெற்றோர்கள் இணைவைப்பவர்களாக இருந்தால்…?
பெற்றோர்கள் இணை வைப்பவர்களாக இருந்தால் கூட அவர்களிடம் நாம் கண்ணியமான முறையில் தான் இஸ்லாத்தை எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நாம் சொல்வதை கேட்கவில்லையே என்று அவர்கள் மீது கோபப்படவோ அல்லது அவர்களை ஒதுக்கி வைக்கவோ நிச்சயமாக கூடாது. தவ்ஹீதை போதிக்கிறோம் என்ற பெயரில் நம்முடைய இளைய சகோதரர்களில் பலர் பெற்றோர்களை கண்ணியமற்ற முறையிலும் அவமரியாதை செய்கின்ற வகையிலும் நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்: –
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள்.
‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார். (ஆதாரம்: புகாரி)
எனவே சகோதர, சகோதரிகளே,நாம் செய்யவேண்டியவை என்னவெனில்,பொறுமையாகவும், நளினமாகவும் நம்முடைய ஆயூட்காலம் முழுவதும் சத்தியத்தை எடுத்துக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் நம் குடும்பத்தார்களுக்காக, அவர்களுடைய நேர்வழிக்காக அல்லாஹ்விடம் மன்றாடி துஆச் செய்ய வேண்டும். (இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் அவர்களுக்கும் நேர்வழியை காட்டுவான். அவர்கள் சத்தியத்தை ஏற்கவில்லையெனில், குறைந்தபட்சம் நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு நமது தஃவா எனும் அழைப்புபணி என்ற கடமையைச் செய்தவராகி விடுவோம்.
அல்லாஹ் நம்மிடம் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினாய் என்று கேட்கப் போவதில்லை. மாறாக நாம் அழைப்புப் பணி செய்தோமா இல்லையா என்று தான் கேட்பான்!
எனவே என தருமை சகோதர சகோதரிகளே, சத்தியத்தை எடுத்து சொல்லும் சிறந்த பணியில் என்றும் நாம் சளைக்காது பொறுமையுடன் நமது ஆயுட்காலம் வரைக்கும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாகவும்.
அல்லாஹ் அதற்குறிய ஆற்றலை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!(ஆமீன்).