உறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்

அல்லாஹ் கூறுகிறான்: –

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குர்ஆன் 25:54)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் அந்த நபருடன் உள்ள இரக்கம் காட்டுதல், கருனை என்னும் உறவை துண்டித்து விடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ – அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது. (அல்-குர்ஆன் 13:25)

இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள். (அல்-குர்ஆன் 2:27)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: –

தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) மற்றும் அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி (ஹதீஸ் எண்:5985 & 5986)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று கூறினான்” என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:5988)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ்.

(இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:7502)

எனதருமை சகோதர சகோதரிகளே! உறவைத் துண்டித்து வாழ்வதன் தீமைகளைப் பற்றி இந்த அளவுக்கு கடுமையாக அல்-குர்ஆனும் ஹதீஸ்களும் எச்சரிக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் சர்வசாதாரணமாக ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என இரத்த பந்த உறவுகளைக் கூட துண்டித்து வாழ்வதைக் காண்கிறோம்.

இஸ்லாம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது என்றால், ‘ஒருவர் மற்றொருவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பேசுவாராயின் அல்லது தம் உறவை துண்டித்து வாழ முயற்சிப்பராயின் உண்மையான முஃமினான அவர் அவ்வாறு பேசுபவரிடம் கனிவான சொற்களைக் கூறி, அவருடைய தவறுகளை மன்னித்து, மறைத்து, அவருக்கு மரியாதை தந்து, அவரிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் தவறாக நடக்க முற்பட்டவர் நாண முற்றவராக தன்னைத் தானே திருத்திக் கொள்வார். இது இஸ்லாம் காட்டும் அழகிய வழி முறையாகும். மேலும் இது அல்லாஹ்விடம் வெகுமதிகளைப் பெற்றுத் தரும் நற்குணமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

41:33 எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?’ (இருக்கின்றார்?)
 
41:34 நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

41:35 பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

41:36 உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். (அல்-குர்ஆன் 41:33-36)

24:22 இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (ஹதீஸ் எண்- 6138)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் புகாரி (ஹதீஸ் எண்-6076)

எனவே நாம் நம் உறவினர்களைப் பேணி வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக, நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “உறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed