இஸ்லாம் மார்க்கத்துக்கு முன்னால் உள்ள மார்க்கங்களின் நிலை

வானம், பூமி மற்றும் இவைகளுக்குகிடையே உள்ள எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான்  என்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏக மனதாக  நம்பிக்கைக் கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே ஒருவன் தான் நமக்கு நேர்வழி காட்டி நம்மை மோட்சம் அடைய செய்வதற்கு தகுதியானவனாக இருக்க முடியும். எனவே உண்மையான மார்க்கம், வாழ்க்கை நெறி போன்றவைகள் படைப்பாளனாகிய அந்த ஒருவனிடம் இருந்தே தான் வர வேண்டும்.

படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. எனவே அவனை அந்த அழகிய பெயர்களான கடவுள், இறைவன், மாலிக், பகவான் இப்படி எதை வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை என்று உறுதியாக நம்ப வேண்டும் என்பது ஒன்று தான் மிக முக்கியமான விஷயம். படைப்பாளன் ஒருவன் தான். ஆகையால் நம்முடைய வணக்கங்கள் அனைத்தும் அவன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது.

நம்மை படைத்தவன், முதல் மனிதனை படைத்ததில் இருந்து மனிதர்கள் மோட்சம் அடைவதற்காக தன் புறத்தில் இருந்து வேதங்களை தான் தேர்ந்தெடுத்தவர்கள் மூலம் தொடர்ந்து அனுப்பினான். இப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், படைத்தவனின் தூதுவத்தை உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் அவர்கள் பேசுகின்ற மொழியில் எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டார்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவனை வணங்க வேண்டும்; அவனுக்கு எந்த துணையையும் கற்பிக்கக்கூடாது என்பது தான் அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொன்ன ஒரே முக்கியமான தூது செய்தியாகும்.

காலங்கள் உருண்டோட, அந்த தூதர்களின் போதனைகள் மறக்கப்பட்டோ அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டோ விட்டன. அவைகள் பல்லாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்தது. உலகம் முழுவதும் ஒரே வட்டத்துக்குள் வந்த போது தொழில் நுட்பங்கள் தகவல் பரிமாற்றங்கள் மூலம் செய்திகள் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் என்ற நிலை வந்த போது இறைவன் தன்னுடைய கடைசி வேதத்தை இறுதி தூதர் மூலமாக அனுப்பினான். முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி தூதராகவும், புனிதமான திருக் குர்ஆனை இறுதி வேதமாகவும் முஸ்லிமாகிய நாங்கள் நம்புகிறோம். ‘உலகம் முடியும் வரை உள்ள எல்லா மனித இனத்துக்கும் ஒளி விளக்காக இந்த திருக்குர்ஆன் உள்ளது’ என்று இறைவன் கூறி உள்ளான். மேலும் இந்த குர்ஆனை மாற்றவோ,  இதில் எதையும் சேர்க்கவோ இயலாதவாறு பாதுகாப்பதற்கு இறைவனே பொறுப்பேற்றுக் கொண்டான்.

முஸ்லிமாகிய நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருகுர்ஆன், ஒரே இறைவனால் வழங்கப்பட்டது என்று நம்புகிறோம். மேலும் இந்த குர்ஆன், இதுவே கடைசி வேதம் என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு உலக முடிவு நாள் வரை, வேறு தூதர் வரமாட்டார் என்றும் கூறுகிறது. ஆகவே முஸ்லிமாகிய நாங்கள், முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எந்த மார்க்கத்தையும் நம்புவதில்லை.

ஆகையால், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி தூதர் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை இறுதி வேதம் என்று நான் கூறுவது ஒரு தலைப்பட்சமாக உங்களுக்குத் தோன்றலாம். இதை உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ வேண்டுமெனில், நேர்மை உள்ளம் கொண்ட உங்களைப் போன்றவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், குர்ஆனை படித்து, இது இறைவனால் வழங்கப்பட்டதா அல்லது மனிதர்களால் எழுதப்பட்டதா என்று முடிவு செய்ய வேண்டியது தான். முழு குர்ஆனையும் படித்த பிறகு தான் நான் கூட இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறினேன். குர்ஆன் படிப்பதற்கு இலகுவானதும் எல்லாவற்றையும் தெளிவாக, சுருக்கமாக விவரிப்பதாகவும் உள்ளது.

குர்ஆனில் இறைவன் மனித குலம் அனைத்துக்கும் சவால் விடுகின்ற ஒரு குர்ஆன் வசனத்தை கூறுகிறேன். அந்த சவால் 1400 வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: –

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (அல்-குர்ஆன் 2:23-24)

இஸ்லாத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கும் உங்களின் முயற்சியை நாங்கள் வரவேற்பதுடன் இறைவன் உங்களுக்கு அவனுடைய நேரிய வழியைக் காட்ட வேண்டுமென பிரார்த்திக்கின்றோம். ஒருவரின் உண்மையான தேடல் சத்தியத்தை நோக்கியும், உண்மையான இறைவனை அடைவதற்காகவும் இருக்குமானால் அவர் அதை அடைந்து கொள்வதற்கு இறைவன் உதவி செய்வதாக தன்னுடைய திருமறையிலே வாக்களித்திருக்கின்றான்.

இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு உங்களுக்காக உதவ நாங்கள் காத்திருக்கின்றோம்.

நன்றி : இஸ்லாம் ஹெல்ப்லைன்.காம்

Hits: 150

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *