தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” அல்-குர்ஆன் (9: 34 & 35).
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை) நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும் சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்) ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.
“யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.”
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (ஆதாரம்: புகாரி)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
அல்லாஹ் நம்மனைவரையும் ஜகாத்தை முறைப்படி கொடுத்து வரக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும்.