| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 7,703 views

பித்அத் என்றால் என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 23rd March 2008

இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

இன்று நமது இஸ்லாமிய சமுதாயம் இத்தனைக் கூறுகளாக பிரிந்து சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரணம் புதிய பித்அத்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதேயாகும். அல்லாஹ் தனது மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாகக் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்த போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: –

“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

இன்று நமது சமுதாய மக்களிடையே பரவலாகக் காணப்படும் மிக மோசமான பித்அத்கள் சிலவற்றைக் காண்போம்.

 • இறைவனால் மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் இணைவைத்தல் அடங்கிய மவ்லிது பாடல்களை பக்திப் பரவசத்துடன் நன்மையை நாடி பாடுவது
 • மீலாது விழா, பிறந்த நாள் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவது
 • நபி (ஸல்) அவர்களால் புனித நாட்கள் என்று கூறப்படாத நாட்களை புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் நோன்பு நோற்பது. உதாரணங்கள் மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவு
  16 நோன்பு நோற்பது
 • திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய திக்ரு (ஹல்கா) செய்வது. இதில் இறைவனை அழைப்பதாகக் கூறிக்கொண்டு இறைவனின் அழகிய திருநாமங்களை திரித்துக் கூறுவதோடு, அவர்கள் புதிதாக வெளிவந்த சினிமாவின் பாடலுக்கேற்ற இசையில் இராகங்களை வடிவமைத்துக் கொண்டு ஆடிப்பாடுகின்றனர். இவ்வாறு செய்வதல் இறந்தவாகளின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கருதி இறந்தவர்களின் 7 ஆம் நாள் மற்றும் வருட பாத்திஹாக்களில் இந்தக் பித்அத்களை நிறைவேற்றுகின்றனர்
 • இறந்தவர்களுக்காக 3,7,40 ஆம் நாள் மற்றும் வருடாந்திர பாத்திஹாக்கள் ஓதுவது
 • நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்து நாரியா என்ற ஷிர்க் வாத்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது

இவைகளைச் செய்யக்கூடிய நமது சகோதர, சகோதரிகள், பின்வரும் காரணங்களையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ கூறுகிறார்கள்: –

 1. நன்மைகளைத்தானே செய்கிறோம்! இதை ஏன் தடுக்கிறீர்கள்? இவைகளைச் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்குமே!
 2. பித்அத் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பது உண்மைதான்; ஆனால் நாங்கள் செய்வது நன்மையான காரியங்களைத்தான்; எனவே இவைகள் பித்அத்துல் ஹஸனா எனப்படும் நற்கருமங்களாகும்
 3. பித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்னடுத்தாத கார், விமானம், பேண்ட் சர்ட் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! அவைகள் பித்அத் இல்லையா?

நன்மையைத்தானே செய்கிறோம்; அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும். ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும். நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு?

“பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்க நாம் எவ்வாறு பித்அத்துகளை நல்ல பித்அத் என்றும் தீயவை என்றும் தரம் பிரிப்பது?. நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்கும் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். உண்மை பேசினால் எதிப்பு வரும், ஆதாயம, வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டுத் தையத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்ட வில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தான் சொன்னார்கள்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டதாக கூறுகிறானே தவிர இந்த உலக வாழ்க்கை வசதிகளை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்: –

“இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்” (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப்படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

எனவே அவர்கள் எடுத்துவைக்கும் நாம் பயன்படுத்தும் கார், விமானம் போன்றவையும் பித்அத் ஆகாதா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகும். பித்அத் என்பது அமல்களில் புதிதாக உருவாக்குவது தானே தவிர உலக காரியங்களின் நடைமுறைகளில் அல்ல.

எனவே சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பித்அத்களைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்க நாம் மேலே கூறிய மவ்லிது, ஹத்தம், பாத்திஹா போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத செயல்களை பித்அத்துல் ஹஸனா என்ற பெயரிலும், நம்முடைய முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்றும் செய்தோமேயானால் அது நிச்சயமாக வழிகேடேயாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

எனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 7,703 viewsMarch 23, 2008   பிரிவு: கட்டுரைகள், பித்அத்தின் தீமைகளும் அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியமும்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

One Response

 1. VA.ME.SALAHUDEEN.Dubai.UAE - September 15, 2010

  பித்அத் பற்றி மேலதிக விபரங்களை வாசகர்களுக்கு தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
  வஸ்ஸலாம்.வ.மீ.ஸலாகுதீன்.துபாய்

  [Reply]

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்


AWSOM Powered