தற்பெருமையும் ஆணவமும்!

உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: –

இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

 “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)

மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)

அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்: –

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்: –

ஹாரிஸா இப்னு வஹப்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” .  (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!

அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)

பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

பெருமை அல்லாஹ்வுக்கே உரியது: –

”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

Hits: 1171

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *