முஸ்லிம்கள் அவசியம் அழைப்பு பணி செய்ய வேண்டுமா?

முஸ்லிம்கள் அழைப்பு பணி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அல்லாஹ் கூறுகிறான்: –

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3:110)

யாராவது ஒருவர் ஒன்றை நல்லது எனக் கண்டு அது தமக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்குமாயின் நிச்சயமாக அவர் தம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அந்த நல்லவற்றை எடுத்துக் கூற முற்படுவார். அதே போல ஒருவர் ஒன்றை தீமையானது என்று உணர்ந்து அது தமக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்று அறிந்தால் உடனே அதிலிருந்து தாமும் விலகி தம்முடைய சுற்றத்தார்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் அதைப் பற்றி எச்சரிக்கைச் செய்வார். இது ஒவ்வொருவருக்கும் இயற்கையாக உள்ள குணமாகும்.

இது போலவே, ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் செவிதாழ்த்திக் கேட்கும் தம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் தீனுல் இஸ்லாத்தில் இனைவதால் ஏற்படும் பலன்களை பற்றியும் அதனால் மறுமையில் கிடைக்க விருக்கின்ற அளப்பற்ற இன்பங்களை பற்றியும் எடுத்துக் கூறவேண்டும். அவ்வாறே இஸ்லாத்தைப் புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், நரக நெருப்பு பற்றியும் எச்சரிக்கைச் செய்யவேண்டும்!

அல்லாஹ்வையும், மறுமையையும், சுவர்க்கம் மற்றும் நரகத்தையும் அவற்றில் கிடைக்கவிருக்கிற இன்பம், துன்பங்களை உண்மையிலேயே நம்பும் ஒருவர், அந்த நம்பிக்கைகளை தமக்குள்ளாகவே வைத்துக் கொண்டு தம்முடைய அன்பிற்கு உரியவர்களான தன் குடும்பத்தார்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் இவற்றைப் பற்றிக் கூறாமல் இருக்கமாட்டார்.

அப்படி அவர் அந்த நம்பிக்கையை பிறருக்கு சொல்லாமல் தம்முடனே வைத்துக் கொண்டால், மறுமை, சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய அவருடைய நம்பிக்கையில் கோளாறு இருக்கிறது என்று பொருள்! அவர் தம்முடைய மறுமை நம்பிக்கையை ஆழமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஏனென்றால் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஒருவர் தாம் மட்டும் நரகத்தில் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டு தம்முடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்களான குடும்பத்தார்களும், உறவினர்களும் மற்றும் நண்பர்களும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று விட மாட்டார். ஏதாவது ஒரு வகையில் எப்படியாவது முயற்சி செய்து அவர்களும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்றே விரும்புவார்கள். அப்போது தான் அவர் உண்மையிலேயே அவர்கள் மீது அன்பு பாசம் கொண்டவராகவும் உண்மையான முஃமினாகவும் இருக்கமுடியும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்-குர்ஆன் 103:2-3)

எனவே சகோதர, சகோதரிகளே! இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அழைப்பு பணியை முஃமினான ஆண், பெண் ஒவ்வொருவரும் தம்முடைய அன்பிற்கு பாத்திரமானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டவாறு அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் நம்மீது இட்டிருக்கின்ற கட்டளைகளை பின்பற்றி நடக்கவேண்டும்.

அவைகளாவன: –

  1. இறை நம்பிக்கை (ஈமான் கொள்ளுதல்)
  2. ஸாலிஹான நல்ல அமல்கள்
  3. ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தல் அதாவது மற்றவர்களை உண்மையின்பால் அழைத்தல்
  4. பொறுமையுடனும் மன உறுதியுடனும் இருக்கவேண்டும்

மனிதன் நஷ்டத்தில் இருப்பதாகவும் அவன் வெற்றி பெற வேண்டுமெனில் இவற்றையே செய்ய வேண்டும் என மேற்கண்ட 103:2-3 என்ற வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான்.

அழைப்பு பணி செய்வது எவ்வாறு?

இன்றைய காலக் கட்டத்தில் அழைப்பு பணி செய்வது என்பது மிகவும் எளிமையானது பல வகைகளில் செய்யலாம்.

  • சிறந்த பேச்சாற்றல் மூலமாகவோ அல்லது
  • திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பை வாசிக்க கொடுத்தோ அல்லது
  • இஸ்லாமிய அறிஞர்களின் ஒலி, ஒளி கேசட், சி.டி,  டி.வி.டி போன்றவற்றைக் கொடுத்து அவர்களைக் கேட்குமாறு செய்தோ அல்லது
  • சிறந்த இஸ்லாமிய வலை தளங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றின் மூலமாகவோ அல்லது
  • இமெயில் போன்ற தகவல் பரிமாற்றுச் சேவையின் மூலமாகவோ

இப்படி பல வழிகளில் ஒவ்வொருவரும் தமக்கு எது வசதிப்படுமோ அந்த வகையில் அழைப்பு பணி செய்யலாம்.

அழப்ப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்: –

1) அழைப்பு பணி செய்பவர்கள்  முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்பக் காலத்தில் இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

இதற்கு உதாரணமாக: –

அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.

தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம். (பார்க்கவும் – ஷெய்ஹூ யூசுஃப் எஸ்டஸ் அவர்களின் உரை)

அதேபோல் பிரித்தானியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு ஒருவர் நல்லுழுக்கம் உடைய முஸ்லிம் சிறுவர்களைப் பார்த்து இஸ்லாத்தை தழுவியதைக் கூறலாம். (பார்க்கவும் – பிரிட்டிஷ் முன்னாள் கத்தோலிக்கப் பாதிரியார் அவர்களின் பேட்டி)

இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.

எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: –

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.

நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: –

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க  அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

அழைப்பு பணி செய்யாவிட்டால் ஏற்படும் நஷ்டம் என்ன?

நாம் மேலே கூறியது போல உண்மையிலேயே இறை நம்பிக்கை கொண்டு மறுமை, சுவர்க்கம், நரகம் அவற்றில் கிடைக்க கூடிய இன்ப துன்பங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டவர்கள் சத்திய இஸ்லாத்தை தம்முடனே வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். அவர் அப்படி செய்தால் அவருடைய ஈமானில் கோளாறு இருப்பதாகவே கருதப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், ‘அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): ‘எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:164)

நாளை மறுமையில் நம்மைப் படைத்தவனின் முன்னிலையில் நாம் நிறுத்தப்பட்டு இறைவனின் மேற்கண்ட வசனத்தின் மூலம் இட்ட கட்டளையை நிறைவேற்றினாயா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஏற்படும் சங்கடத்தை நாம் உணர வேண்டும்.

எனவே சகோதர சகோதரிகளே! முஃமினான நாம் அனைவரும் மார்க்கத்தின் மிகச் சிறந்த பணியாகிய  தஃவா என்னும் அழைப்புப் பணியை சரிவர செய்தவர்களாக நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “முஸ்லிம்கள் அவசியம் அழைப்பு பணி செய்ய வேண்டுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed