ஃபர்லு தொழுகைக்கு முன், பின்னுள்ள சுன்னத்தான தொழுகைகள்

புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே, அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் இருதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களை பின்தொடர்ந்து வந்த அனைத்து நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!

நபி (ஸல்) அவர்கள் ஜங்கால தொழுகைகளுக்கு முன்னாலும் பின்னாலும் உபரியான, சுன்னத்தான  தொழுகைகளை  தான் ஊரில் இருக்கும் பொழுது தொழுது வந்துள்ளார்கள். அவற்றை தொழுமாறு நமக்கு ஏவியும் இருக்கின்றார்கள். அவற்றை தொழுகின்றவர்களுக்கு அளப்பரிய நன்மைகள் உண்டு என்றும் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். அவ்வாறு தொழுது வந்த ரக்அத்களின் எண்ணிக்கை பின்வருமாறு: 

عَنْ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّى لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلاَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِى الْجَنَّةِ أَوْ إِلاَّ بُنِىَ لَهُ بَيْتٌ فِى الْجَنَّةِ »(رواه مسلم1729)

நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் ஒரு நாளைக்கு பர்ழான தொழுகை அல்லாமல் உபரியாக பன்னிரண்டு  ரக்அத்துக்கள் தொழுது வருகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்கக்த்திலே ஒரு வீடு கட்டுகின்றான்” அறிவிப்பவர்: உம்மு ஹபீபா رضي الله عنها ; ஆதாரம் முஸ்லிம்

ஹதீஸில் குறிபிடப்பட்ட பன்னிரண்டு ரக்அத் தொழுகை எந்தெந்த பர்ழான தொழுகைகளுக்கு முன்னால் எந்தெந்த பர்ழான தொழுகைகளுக்கு பின்னால் நபி  (ஸல்) அவர்கள் தொழுதிருக்கின்றார்கள் என்பதனை தெளிவுபடுத்தி அறிவிக்கும் செய்தி பின்வரக் கூடிய ஹதீஸில் காணலாம்.

عن عائشة قالت : قال رسول الله صلى الله عليه و سلم من ثابر على ثنتي عشرة ركعة من السنة بنى الله له بيتا في الجنة أربع ركعات قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغربن وركعتين بعد العشاء وركعتين قبل الفجر(الترمذي 414)

நபி  (ஸல்) கூறினார்கள்:

“எவரொருவர் ளுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்களும், ளுஹருக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், மஃரிபுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், இஷாவுக்கு பின்னால் இரண்டு ரக்அத்களும், பஜ்ருக்கு முன்னால் இரண்டுரக்அத்களும் தொடர்ச்சியாக தொழுது வருகின்றாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்” அறிவிப்பவர்: ஆய்ஷா رضي الله عنها ; ஆதாரம்: திர்மிதி (414)

இவற்றை நபி (ஸல்) அவர்கள் பர்ழான தொழுகைகளுக்கு முன்னாலும் பின்னாலும் ஊரில் இருக்கின்ற நிலமையில் தொழுது வந்தார்கள். பிரயாணத்தில் இருக்கின்ற பொழுது இதனை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் ‘சுபஹுடைய சுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களையும் பிரயாணத்திலும் கூட தவர விடாமல் தொழுது வந்தார்கள்’ என்று வரக்கூடிய செய்தியை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيِ الْفَجْرِ(البخاري 1163)

“நபி  (ஸல்) அவர்கள் உபரியாக தொழக்கூடிய தொழுகைகளில் (சுபஹுக்கு முன்னல் தொழக்கூடிய) இரண்டு ரக்அத்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது போன்று வேறு எதற்கும் முக்கியத்துவம்  கொடுக்கவில்லை” அறிவிப்பவர்: ஆய்ஷா رضي الله عنها ; ஆதாரம்: புகாரி (1163)

இதே போன்று வித்ரு தொழுகையையும் பிரயாணத்தில் இருக்கின்ற பொழுது தவறாமல் தொழுது வந்திருக்கின்றார்கள்.

عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ.( البخاري1000)

“நபி  (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் இருக்கும் பொழுது தனது வாகனத்தில் இருந்தவாறு தான் திரும்பும் திசையை நோக்கி பர்ழு அல்லாமல் இரவுத் தொழுகையையும் வித்ரு தொழுகையையும் சைக்கினை செய்து தொழுபவராக இருந்தார்கள்” அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنهما ; ஆதாரம்: புகாரி (1000)

இந்த ஹதீஸை இமாம் புகாரி அவர்கள், “பிரய்யாணத்தில் வித்ரு தொழுகை” என்ற பாடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் கூறுகின்றார்கள், “எவர்களெல்லாம் பிரயாணத்தில் வித்ரு தொழுகை இல்லை என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கு பதிலடியாக இந்தப் பாடம் அமைந்திருக்கின்றது”

நபிகளாரின் (ஸல்) வாழ்வில் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்  (ஸல்) வாழ்வில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது” (அத்தியாயம்: அல் அஹ்ஸாப் 21)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள்” ஆதாரம்: புகாரி (631)

இமாம் தைமியா அவர்கள் கூறுகின்றார்கள்: “வித்ரு தொழுகையையும், சுபஹுடைய சுன்னத்துத் தொழுகையையும் தவிர வேறு எந்த தொழுகையையும் நபிகளார் (ஸல்) பிரயாணத்தில் தொழுததாக எந்த அறிவிப்பிலும் வந்ததில்லை”    

மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள் நபிகளார் (ஸல்) ஊரில் இருக்கின்ற போது தொடர்ந்து தனது வாழ்வில் தொழுது வந்துள்ளார்கள் என்பதனை ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. இவை அன்றி இதனை விட அதிகமாகவும் தொழுமாறு அறிவிக்கக்கூடிய ஆதாரங்களும்  பின்வரக்கூடிய நபிமொழிகளிலிருந்து அறியலாம்.

அஸருக்கு முன்னால் நான்கு ரக்அத்துக்கள்:

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا ».(أبوداود1273/الترمذي 430/أحمد5980)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அஸருக்கு முன்னால் நான்கு ரக்அத்துக்களை தொழுகின்ற ஒரு மனிதனுக்கு அல்லாஹ் ரஹ்மத்து (அருள்) செய்யட்டும்” அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنهما ; ஆதாரம்: அபூ தாவூத் (1273), திர்மிதி (430), அஹ்மத் (5980)

மஃரிபுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துக்கள்:

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَيْءٌ(البخاري625)

முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி  (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருமுன் நபித்தோழர்கள் சுன்னத்து தொழுவதற்காக) தூண்களை (நோக்கி) விரைவார்கள். இவ்வாறு பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் அதிக நேரம் இருக்கவில்லை. ம்ஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அனஸ் رضي الله عنه ; ஆதாரம்: புகாரி

இஷாவுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துக்கள்:

عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ، ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ : لِمَنْ شَاءَ.(البخاري627)

நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒவ்வொரு பங்கிற்கும் இகாமத்துக்கு இடையில் ஒரு தொழுகை உண்டு” என்று இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாவது முறை, “விருப்பியவர்கள் தொழுது கொள்ளலாம்” என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்பு முகப்பல் رضي الله عنه;  ஆதாரம்: புகாரி (627)

இந்த ஹதீஸில் ஒவ்வொரு பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் தொழுகை உண்டு என்ற அடிப்படையில் இஷாவுக்கு முன்னாலும் இரண்டு ரகாத்துக்கள் தொழுது கொள்ளலாம்.                                            .

ளுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்துக்கள் பின்னால் நான்கு  ரக்அத்துக்கள்:

قَالَتْ أُمُّ حَبِيبَةَ زَوْجُ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرُمَ عَلَى النَّارِ »(أبوداود/1271/الترمذي428/النسائي 1826)

நபி   (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் ளுஹருக்கு முன்னால் உள்ள நான்கு  ரக்அத்துக்களையும் பின்னால் உள்ள நான்கு  ரக்அத்துக்களையும் பாதுகாத்து வருகின்றாரோ அவருக்கு நரகம் ஹராமாகும்” அறிவிப்பவர் உம்மு ஹபீபா رضي الله عنها ; ஆதாரம்: அபூதாவூத் (1281), திமிதி (428), நஸாஈ (1826)

நபிகளார் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக தொழுது வந்த பன்னிரண்டு  ரக்அத்துக்களில் ளுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்துக்களும் ளுஹருக்கு பின்னால் இரண்டு ரக்அத்துக்களுமாகும். அவ்விரண்டுடன் மேலும் இரண்டை கூடுதலாக தொழுதால் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட நன்மையை பெறலாம்.

நபி (ஸல்) அவர்கள் பன்னிரண்டு ரக்அத்துக்களை ஊரில் இருக்கும் பொழுது தொடர்ச்சியாக தொழுது வந்தார்கள். இவை அல்லாத  சந்தர்ப்பங்களில் ளுஹர் தொழுகைக்கு பின்னாலும், அஸர்  தொழுகைக்கு முன்னாலும், மஃரிப் தொழுகைக்கு முன்னாலும், இஷா தொழுகைக்கு முன்னாலும் இன்னும் சில சுன்னத்தான  ரக்அத்துக்களை தொழுது வந்துள்ளார்கள். இவற்றுக்கு பலவிதமான நன்மைகள் உண்டு என்பதனையும் மேற் கூறப்பட்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். அத்தோடு பிரயாணத்தில் இருக்கும் பொழுது கூட விடாமல் சுபஹுக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்தையும் வித்ரையும் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கின்றார்கள்.

இவற்றை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்:

عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا.(البخاري432)

நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்கள் வீடுகளை தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்; அவற்றை மண்ணறைகளாக ஆக்காதீர்கள்” அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنهما ; ஆதாரம்: புகாரி (432)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ تَطَوُّعِهِ فَقَالَتْ كَانَ يُصَلِّى فِى بَيْتِى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا ثُمَّ يَخْرُجُ فَيُصَلِّى بِالنَّاسِ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّى رَكْعَتَيْنِ وَكَانَ يُصَلِّى بِالنَّاسِ الْمَغْرِبَ ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّى رَكْعَتَيْنِ وَيُصَلِّى بِالنَّاسِ الْعِشَاءَ وَيَدْخُلُ بَيْتِى فَيُصَلِّى رَكْعَتَيْنِ الحديث…(مسلم 1733)

நபி  (ஸல்) அவர்கள் மேலதிகமாக தொழும் தொழுகையை பற்றி நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர், “நபி (ஸல்) அவர்கள் ளுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்துக்களை வீட்டில் தொழுவார்கள்; பின்னர் மக்களுக்கு தொழுகை நடாத்துவார்கள்;  பின்னர் வீட்டுக்கு வருவார்கள்; இரண்டு ரக்அத்துக்களை தொழுவார்கள், மஃரிப் தொழுகையை நடத்துவார்கள்; பின்னர் வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள், மக்களுக்கு இஷாத் தொழுகையை நடத்துவார்கள்; பின்னர் எனது வீட்டுக்கு நுழைந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஷகீக் رحمه الله ; ஆதாரம்:முஸ்லிம்1733

“…فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَة” (رواه البخاري 731)

“…மக்களே நீங்கள் உங்களது வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் பர்ழான தொழுகையை தவிர ஏனைய தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்” அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் رضي الله عنه ; ஆதாரம்: புகாரி (731)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்தது என்று  தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். ‘சிறந்தது’ என்பதை  நாம் ‘கடமை’ என்று விளங்கக் கூடாது. ‘அவற்றை பள்ளியில் தொழுதாலும் தவறில்லை’ என்றே விளங்க வேண்டும். மேற் கூறப்பட்ட விஷயங்களை அறிந்த நாம் சுன்னத்தான தொழுகைகளை தொழுவதற்கு ஆர்வம் காட்ட வேண்டும். அதிலும் நபிகளார் (ஸல்) தொடர்ந்து தொழுது வந்த பர்ழு தொழுகைகளுக்கு முன்னாலும் பின்னாலுமாக பன்னிரண்டு ரக்அத்துக்களை தொழ வேண்டும். இத்தகைய  சுன்னத்தான தொழுகைகளை முறைப்படி பேணி தொழுது உயர்வான சுவர்க்கத்தை நாம் அடைய இறைவன் அருள்பாலிப்பானாகவும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed