நபி வழி தொழுகை முறை – For Biginners & new Muslims

வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்: –

அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை நாம் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அவனது திருமறையின் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் மூலமாகவும் நமக்கு காட்டியிருக்கிறான். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு ஒரு புதிய வழி முறையைப் பின்பற்றி நாம் அவனை வணங்குவோமேயானால் அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!.

அவைகளாவன: –

  1. ஒருவருடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும்
  2. எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும்
  3. எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித் தந்த வழி முறையில் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே இந்த மூன்று நிபந்தனைகளில் எதில் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் அது பரிபூரணமான அமலாக ஆகமாட்டாது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

நபி வழியில் தொழுகையை நிறைவேற்றுவுதன் அவசியம்: –

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் (33:21)

மேலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்’ என்று தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள்.

தூய்மை: –

தொழுகையை நிறைவேற்ற உடல், உடை, தொழும் இடம் ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியமாகும். உடலுறவு கொண்டிருத்தாலோ, அல்லது இந்திரியம் வெளியாகி விட்டாலோ குளிப்பது கடமையாகும். குளிப்பு கடமையில்லாத சூழ்நிலைகளில் உளு மட்டும் செய்துவிட்டு தொழவேண்டும். உளூ இல்லாத தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. தண்ணீர் இல்லையென்றாலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் தயம்மும் செய்து கொண்டு தொழ வேண்டும். (பார்க்கவும் : நபி صلى الله عليه وسلم அவர்கள் உளு செய்த முறை)

கடமையான தொழுகை: –

கடமையான தொழுகையை வயது வந்த ஆண் பெண் இருபாலரும கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும். இந்தக் காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலைகளிலும் இந்தத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை. ஏனென்றால் ஒரு முஃமினுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் இடையிலுள்ள வித்தியாசமே தொழுகை தான்.

சுன்னத்தான தொழுகை: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான தொழுகைக்கு முன்னும் பின்னும் உபரியான சில தொழுகைகளைத் தொழுது வந்தார்கள். அந்த தொழுகைகளுக்கு சுன்னத்தான தொழுகை என்று பெயர். இதனை பேணித் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத் தரும்.

தொழுகையின் எண்ணிக்கைகள் (ரக்அத்துக்கள்): –

பஜ்ர்: – முன் சுன்னத்து – 2 ரக்அத்துக்கள்; பர்லு – 2 கை;அத்துக்கள்

லுஹர்: – முன் சுன்னத்து – 2+2 ரக்அத்துக்கள், பர்லு – 4 ரக்அத்துக்கள், பின் சுன்னத்து – 2 ரக்அத்துக்கள்

அஸர்: – முன் சுன்னத்து – 2 சக்அத்துக்கள், பர்லு – 4 ரக்அத்துக்கள்

மஃரிப்: – பர்லு – 3 ரக்அத்துக்கள், பின் சுன்னத்து – 2 ரக்அத்துக்கள்

இஷா: – பர்லு – 4 ரக்அத்துக்கள், பின் சுன்னத்து – 2 ரக்அத்துக்கள், வித்ர் – 3 ரக்அத்துக்கள்

தொழுகை முறை: –

1) தொழுகைக்காக பாங்கு, இகாமத் கூறவேண்டும். (பார்க்கவும் : பாங்கு, இகாமத் மற்றும் அவற்றுக்கான மறுமொழி கூறுவதன் அவசியம்)

2) கிப்லாவை முன்னோக்குதல்: – கஃபாவின் திசையறிந்து கிப்லாவை முன்னோக்கி நிற்க வேண்டும்

3) நிய்யத் செய்தல்: – தொழப்போகும் நேரத்தொழுகையை மனதில் எண்ணி (வாயால் மொழிவது அல்ல) நிய்யத் செய்து கொள்ள வேண்டும்

4) தக்பீர் கூறுதல்: – இருகைகளையும் இரு புஜங்களுக்கு அல்லது இரு காதுகளுக்கு நேராக உயர்த்தி “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்

5) நெஞ்சில் கை கட்டுதல்: – கையை உயர்த்தி தக்பீர் கூறியவுடன் வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.

6) ஆரம்ப துஆ ஓதுதல்: – நெஞ்சின் மீது கை கட்டியவுடன் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

“ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரக்ஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க”

7) அவூது பிஸ்மி ஓதுதல் : – “அவுது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்” “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஓதி விட்டு பிறகு சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.

8.) சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்: – பிறகு சூரத்துல்ஃபாத்திஹா சூராவை ஓதவேண்டும். தனித்து தொழும் தொழுகைகளிலும், இமாம் அமைதியாக ஓதும் பர்லான தொழுகையின் போதும் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டும். ஏனெனில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்கவும் : தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?)

9) குர்ஆனின் சில வசனங்களை அல்லது சூரா முழுவதையுமோ ஓதுதல்: – சூரா ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் அல்-குர்ஆனின் வசனங்களில் சிலவற்றையோ அல்லது சிறிய சூராக்களையோ ஓதலாம்.

10) ருகூவு செய்தல்: –

குர்ஆனின் வசனங்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.

11) ருகூவில் ஓத வேண்டிய துஆ: – ருகூவில் “ஸுப்ஹான ரப்பியல் அலீம்” என்று மூன்று முறை கூற வேண்டும்.

12) சிறிய நிலை நிற்றல்: – “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா” என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழுந்து நிற்க வேண்டும். பிறகு இரு கைகளையும் புஜத்திற்கு நேராக உயர்த்தி கீழே தொங்கவிட்டவாறு “ரப்பனா லகல்ஹம்து” என்று கூறவேண்டும்.

13) முதல் சுஜூது (ஸஜ்தா) செய்தல்: – பிறகு “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். உடலோடு ஓட்டவோ அல்லது முழங்கைகளை தரையில் படுமாறும் வகைக்கக் கூடாது.

சுஜூதில் ஓத வேண்டிய துஆ: – ஸுஜுதில், “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” என்று மூன்று முறை கூறவேண்டும்.

14) சிறிய இருப்பு: – பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும். ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டி வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.

இந்த இருப்பில், ரப்பிஃ(க்)ஃபிர்லி என்று இரண்டு முறை கூறவேண்டும்.

15) இரண்டாவது சுஜூது செய்தல்: – பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் செய்ததைப்போன்று மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும்.

16) இரண்டாவது ரக்அத்: – பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து, மீண்டும் நிலைக்கு வரவேண்டும். பிறகு முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே இந்த இரண்டாவது ரக்அத்திலும் செய்ய வேண்டும். அதாவது சூரத்துல்ஃபாத்திஹா ஓதவேண்டும். முதல் ரக்அத்தில் ஓதிய தொழுகையின் ஆரம்ப துஆவை (தனாவை) ஓத வேண்டியதில்லை.

பிறகு சில குர்ஆன் வசனங்களையோ அல்லது சிறிய குர்ஆன் அத்தியாயங்களையோ ஓத வேண்டும்.

பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, சிறிய நிலை நிற்றல் மற்றும் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். இரண்டாவது ரக்அத்தின் ஒவ்வொரு செயல்களிலும் அதாவது ருகூவு, சிறிய நிலை நிற்றல், சஜ்தா மற்றும் சிறிய இருப்பு ஆகிய நிலைகளில் முதல் ரக்அத்தில் ஓதிய அதே துஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

17) இறுதி இருப்பு : – இரண்டாவது ரக்அத்தின் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்த பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தது போன்று அமர வேண்டும்.

இந்த அமர்வில் பின் வரும் பிரார்த்தனையை (துஆவை) ஓத வேண்டும்.

அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத் துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.

பின்னர் ஸலவாத்து ஓதவேண்டும்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது – வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் – கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது

இதன் பிறகு தான் விரும்பிய பிராத்தனையைக் கேட்டுக் கொள்ளலாம்.

18) தொழுகையை நிறைவு செய்தல்: – பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூற வேண்டும். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூற வேண்டும். இதனுடன் இரண்டு ரக்அத் உடைய தொழுகை நிறைவடையும்.

19) மூன்று அல்லது நான்கு ரக்அத் தொழுகைகள்: –

இரண்டு ரக்அத்களை விட அதிகமான ரக்அத் உள்ள தொழுகைகளைத் தொழும்போது இரண்டாம் ரக்அத்தின் அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரக்அத்திற்காக எழுந்து நிலைக்கு வந்துவிட வேண்டும். அதில் முதலாவது ரக்அத்தில் கைகளை உயர்த்தியது போன்று கைகளை உயர்த்தி பிறகு கட்டிக்கொள்ள வேண்டும்.

20) இரண்டு ரக்அத்துக்களுக்கும் மேற்பட்ட தொழுகைகளில் மூன்றாவது மற்றும் நான்காவது ரக்அத்துகளில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. குர்ஆன் வசனங்கள் ஓத வேண்டியதில்லை. இறுதி இருப்பில் ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்கவேண்டும்.

21) ஸலாம் கொடுத்த பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை ஓத வேண்டும். (பார்க்கவும் : தொழுது முடித்தவுடன் ஓத வேண்டிய திக்ருகள்)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

You missed