பெற்றோர் மற்றும் உறவினர்களின் உரிமைகள்

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.’ (அல்-குர்ஆன் 31:14)

இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு அடுத்தபடியாக இஸ்லாத்தில் மனித சமுதாயத்தின் மீது உள்ள மிகப்பெரிய மிக முக்கியமான கடமை என்னவெனில் அவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும். பெற்றோருக்கு அடுத்தடியடியாக நெருங்கிய உறவினர்களுக்கும், தூரத்து உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்களுக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையாகும். இஸ்லாத்தில் அவரவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்யவேண்டும். இதில் எந்தவொரு பாரபட்சமும் காட்டக்கூடாது. ஒருசாராருக்கு செய்யவேண்டிய கடமை மூலம் மற்றொரு சாராருக்கு செய்ய வேண்டிய கடமை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.

உதாரணமாக, ஒருவர் தம்முடைய பெற்றோரின் உரிமைகளை (அதாவது அவர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகளை) பறித்து தம்முடைய மனைவி மக்களுக்காகச் செய்தல் அல்லது மனைவி மக்களின் உரிமைகளை பறித்து பெற்றோருக்காக மட்டும் செய்தல் போன்றவையாகும். அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்பும் ஒரு முஸ்லிம் இதில் நீதியுடன் செயல்பட்டு எந்த ஒரு சாராரின் உரிமையும் பாதிக்கப்பட்டுவிடாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்-குர்ஆன் 17:26-27)

மேலும் நாம் இவ்வுலக வாழ்க்கையில் பெற்றோருக்கு பணிவிடை செய்து அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வது இறைவன் நம் மீது விதித்திருக்கின்ற இன்றியமையாத கடமையாகும். ஆனால் அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்வதற்கு தூண்டினால் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய அவசியமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: –

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.’ (அல்-குர்ஆன் 31:15  )

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்’ என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்-குர்ஆன் 2:83)

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 17:25 )

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “பெற்றோர் மற்றும் உறவினர்களின் உரிமைகள்”
  1. Title:பெற்றோர் மற்றும் உறவினர்களின் உரிமைகள்!
    பிழை: கட்டுப்பட்டு வாழ்வது இறைன் நம் மீது-> “இறைன்” words are missing. Pls correct speeling than re-publish

    1. அன்பு சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு,

      எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிமைக்காக அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாகவும்.

      பிழை சரிசெய்யப்பட்டுள்ளது.

      ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

      நிர்வாகி,
      சுவனத்தென்றல்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed