நாவைப் பேணுவதன் அவசியம்

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான்.

உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் வினைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்’ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் :புகாரி.

நம் வாயிலிருந்து உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது: –

முதலில் நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கின்றனர். மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர். அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)

சிந்திக்காமல் பேசுவதால் ஏற்படும் விபரீதம்: –

ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸலிம்களில் சிறந்தவர்: –

‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

சுவர்க்கம் செல்ல எளிய வழி: –

‘எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாகப் பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதாரம் : புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed