நடுநிலைவாதிகளின் போலி ஒற்றுமைக் கோஷங்கள்

நடுநிலைவாதிகளின் போலி ஒற்றுமைக் கோஷங்களும் நீர்த்துப் போகும் ஏகத்துவப் பிரச்சாரமும்

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.

சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக நாம் நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பது தான் அந்த ஒற்றுமைக் கோஷத்தின் குரல்! இன்னும் சிலரோ இவ்வாறு ஒன்றுபட்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.

படிப்பதற்கு அழகாக இருந்தாலும் இத்தகையை ஒற்றுமைக்காக இவர்கள் கொடுக்கும் விலையோ மிக மிக உயர்ந்தது!! இஸ்லாத்தின் ஆணிவேரையே தகர்க்கக்கூடியதை இஸ்லாத்தின் பெயரால் அங்கீரிக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது.. இதன் விளைவுகளோ இஸ்லாத்தின் அடிப்படைகளையே தகர்த்தெறிந்து ஜாஹிலிய்யத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்ற அளவிற்கு மிக பயங்கரமானது.

ஆம் சகோதர, சகோதரிகளே! இவர்கள் எடுத்து வைக்கின்ற ஒற்றுமையை அடைவதற்காக இஸ்லாமிய பிரச்சாரத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்! அதாவது ‘லகும் தீனுகும் வலியதீன்’ என்ற இறைவசனத்திற்கு இவர்களின் புரிந்துணர்வின்படி அவரவர்கள் தங்களின் அகீதாவில் இருக்கட்டும்! அவரவர் கொள்கையை அவரவர் பின்பற்றட்டும்!  பெயரில் முஸ்லிம் என்று இருந்தால் போதுமானது! நாம் ஒன்றுபட்டுவிடுவோம்!

‘வணக்கத்திற்கு உரிய ‘இலாஹ்’ அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று வாயளவில் கூறிவிட்டு அல்லாஹ் அல்லாதவர்களிடம் மண்டியிட்டு அவர்களை அழைத்து பிரார்த்தித்து உதவிதேடி அதன் மூலம் அவர்களையும் ‘இலாஹ்களாக ஆக்குவதன் மூலம் அநியாயங்களிலே மாபெரும் அநியாயமாகிய இணைவைப்பைச் செய்து அதன் மூலம் மறுமையில் நிரந்தர நரகத்தில் புகவைக்கின்ற ஷிர்க்குகளைப் பற்றி மக்களிடம் அதிக ‘சிரத்தையுடன்’ எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை!

அதுபோல் அல்லாஹ்வால் பரிபூரணமாக்கப்பட்ட மார்க்கத்தில் கூட்டல், குறைவோ செய்ய யாருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை என்ற சட்டத்தை மீறி, புதிய புதிய வணக்கமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்ற மகா மோசமான பித்அத்களை, ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்; அனைத்து வழிகேடுகளும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை இருந்தும் இவ்வாறு பித்அத் செய்கின்றவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!

‘நீங்கள் பிரிந்து விடாதீர்கள்’ என்ற இறைக் கட்டளையை மீறி தரீக்காக்களின் பெயரால் 200 க்கும் மேற்பட்ட (சிலர் ஆயிரம் என்று கூட கூறுகின்றார்கள்) புதிய வழிமுறைகளை ஏற்படுத்தி ஒவ்வொரு தரீக்காவிற்கும் புதிய வணக்க முறைகளை உருவாக்கி அதன் மூலம் மார்க்கத்தை சின்னாபின்னமாக்கி இஸ்லாம் என்ற பெயரில், மாற்று மதத்தவர்களும் வெட்கித் தலைகுணிகின்ற அளவிற்கு இவர்கள் செய்கின்ற இபாதத்களைப் பற்றி நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை!

‘முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இன்னொரு நபியில்லை’ என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக வேறொருவரை நபியின் அந்தஸ்துக்கு உயர்த்தினாலும் அல்லது நபியாக ஆக்கினாலும் அவர்களும் ‘ஒரே இறைவன், ஒரே கஃபா, ஒரே குர்ஆன்’ என்ற அடிப்படையில் உடன்படுவதால் அவர்களின் தவறுகளையும் நாம் கண்டுக் கொள்ளத் தேவையில்லை!

முஸ்லிம் பெயருடைய சிலர் அலி (ரலி) அவர்களுக்கு முந்தைய மூன்று கலீபாக்களையும் காஃபிர்களாக சித்தரித்தாலும் பரவாயில்லை! அவர்களும் ஒரே இறைவன், ஒரே கஃபா, ஒரே குர்ஆனை ஏற்றிருப்பதால் அவர்களின் தவறுகளை நாம் தட்டிக்கேட்கத் தேவையில்லை! அவர்களையும் நம்முடைய ஒற்றுமைக் கூட்டணியில் சேர்த்துவிடுவோம்!

இதுபோல் இஸ்லாத்தின் பெயரில் என்னென்ன பிரிவுகள் இருந்தாலும் அவர்ககனைவரும் ‘ஒரே குர்ஆன், ஒரே கஃபா? ஒரே இறைவன்’ என்ற அடிப்படையில் பெயர் முஸ்லிமாக இருந்தால் ஒன்றுபட்டலாம்!

அவர்கள் சிலையை வணங்கினால் என்ன? அல்லது சமாதியை வழிபட்டால் என்ன? அதைப் பற்றி நாம் பேசினால் ஒற்றுமை குலைந்துவிடும்!

ஒரே குர்ஆனை ஏற்றிருக்கின்ற அவர்கள் அந்த குர்ஆனின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்தால் என்ன? அல்லது பெயருக்கு நான் குர்ஆனைத் தான் பின்பற்றுகிறேன் கூறிவிட்டு வேறு எதையாவது பின்பற்றினால் என்ன? அதைப் பற்றி பேசினால் அவர்கள் நம்மிடம் வரமாட்டார்கள்!

ஒரே கஃபாவை ஏற்றிருக்கின்ற அவர்கள் அனைவரும் அந்த கஃபாவின் இறைவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படித் தான் ஹஜ் செய்கின்றார்களா? அல்லது அவர்களுடைய ‘ஷெய்குகளின் வழிமுறையைப் பின்பற்றி புதிய முறைகளில் செய்கின்றார்களா? அதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது! அவ்வாறு பேசுபவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்கள்!

ஒரே இறைவனை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்கள் அந்த ஒரே இறைவனை மட்டும் வணங்குகின்றார்களா? அல்லது அந்த ஒரே இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிமுறைகளை அந்த ஒரே இறைவனுக்கல்லாது ஏனையவர்களுக்கும் செய்கின்றார்களா? ஹூம்! அது பற்றி மூச்சு விடக் கூடாது! அவ்வாறு கூறினால் பெரும் கூட்டம் நம்மைவிட்டு அகன்று நம் கூடாரம் காலியாகிவிடும்.

நம் கூடாரம் காலியாகிவிட்டால் பிறகு நாம் எப்படி நமது தொலை நோக்கு பார்வையாகிய ‘இஸ்லாமிய ஆட்சியை’ நிறுவுவது?

அன்பு சகோதரர்களே! இது தான் இந்தப் போலி ஒற்றுமை கோஷம் போடுபவர்களின் குறிக்கோளா? அப்படியென்றால் நிச்சயமாக இது இறைவனின் வழிகாட்டுதலின்படியானதல்ல!

இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணம் எய்தினால் மறுமையில் நிரந்த நரகம் என்று இறைவன் எச்சரித்திருக்கின்ற போது அவ்வெச்ரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு நாங்கள் இணைவைப்பதில்லை! அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அதைப்பற்றி மிகவலியுறுத்தி  மக்களை நாங்கள் எச்சரிக்கமாட்டோம்!  நாசூக்காக சொல்வோம்! அவர்கள் திருந்தினால் அவர்களுக்கு நல்லது! அவர்கள் திருந்தாவிட்டால் அவர்கள் விதி அவ்வளவு தான் என்று கருதுவது சுயநலத்தின் மொத்த உருவமாகும்.

நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும். அந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக நன்மையை மட்டும் தான் நாங்கள் ஏவுவோம்; தீமையைத் தடுக்க மாட்டோம் என்று கூறினால் அது கோழைத்தனமாகும்!

இன்னும் சிலர் எங்களுக்கு அட்சியதிகாரம் வந்து விட்டால் அந்த அதிகாரததைப் பயன்படுத்தி ஷிர்க்கை ஒரேயடியாக ஒழித்துவிடுவோம் என்று கூறுகின்றனர். ஆட்சியிதிகாரம் ஏதுமில்லாதபோதே ஷிர்க் பித்அத்தின் தீமைகளைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு அஞ்சுகின்ற இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் “அட்சியில் கலகம் ஏற்படும்” , “மக்களிடையே ஒற்றுமை கெட்டுவிடும்” என்று அப்போதும் இந்த போலி ஒற்றுமையைப் பற்றிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். (மறைவான ஞானம் என்று தயவுசெய்து கூறவேண்டாம்).

அன்பு சகோதரர்களே! தயவு செய்து இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்! இஸ்லாத்தின் வெற்றி என்பது பெரும்பாண்மை மக்களினால் ஒருபோதும் ஏற்பட்டதில்லை! மாறாக ஏக இறைவைனை மட்டுமே வழிபடக்கூடிய சிறிய எண்ணிக்கையிலான உண்மையான முஸ்லிம்களின் மூலமாக இறைவன் அளித்ததாகும். எத்தனையோ போர்களில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.

முஸ்லிம்களின் எண்ணிக்கை சிறிய அளவிலானதாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்கே முழுவதும் கட்டுப்பட்டவர்களாக அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையில் தமது வாழ்வை அமைத்துக் கொள்வாரேயானால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

ஒற்றுமை என்பது வெறுமனே ஒரே இறைவன், ஒரே கஃபா, ஒரே குர்ஆன் அகியவற்றை ஏற்றுக்கொள்வது மாத்திரத்தினால் ஏற்படுவதில்லை! மாறாக,

உண்மையான ஒற்றுமை என்பது

  • ‘ஒரே இறைவனை மட்டுமே ‘வணக்கத்திற்கு’ உரியவனாக ஏற்று மற்றவர்களை வணங்காமல் இருப்பவர்களை ஒன்றுபடுத்துவதிலும்
  •  ஒரே குர்ஆனின் வழிகாட்டுதலின்படியும் அந்தக் குர்ஆன் யாருக்கு இறக்கப்பட்டு அவர்கள் மூலம் நமக்கு வழிகாட்டப்பட்டதோ அந்த வழிமுறையில் வாழ்வோர்களை ஒன்றுபடுத்துவதிலும்
  •  ஒரே கஃபாவை ஹஜ் செய்கின்ற போது அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த வழிமுறையிலல்லாமல் வேறு முறையில் செய்யமாலிருக்கின்றவர்களை ஒன்றுபடுத்துவதிலும் ஏற்படுத்துவமாகும்.

இதைத்தவிர மற்றவர்களுக்கு மேற்கூறிய மூன்றின் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களையும் அந்த ஒற்றுமையை நோக்கி அழைக்க வேண்டும். இதற்கு மாற்றமாக, இதைப் புறக்கணித்து செய்யப்படுபவை எல்லாம் போலி ஒற்றுமைக் கோஷங்களைத் தவிர வோறொன்றுமில்லை!

அல்லாஹ் அஃலம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
3 thoughts on “நடுநிலைவாதிகளின் போலி ஒற்றுமைக் கோஷங்கள்”
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

    மிக பயனுள்ள காலத்திற்கேற்ற ஒரு கட்டுரை. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்

    சுவனத்தென்றல்.காம்.உங்கள்சேவை தொடர எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    நிரந்தர மறுமையின் வெற்றிக்கு வழிவகுக்கின்ற ஏகத்துவப் பிரச்சாரத்தை, நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கின்ற இணைவைப்பிலே உழன்றுக் கொண்டிருக்கின்ற நமது பெற்றோர், சகோதர, சகோதரிகள், உறவினர், ஊர் ஜமாத்அத்தார்களிடம் செய்து அவர்களை அம்மாபெரும் பாவத்திலிருந்து மீட்டெடுக்க முயற்சிப்போமாக!இவ்வாறு செய்யும் வேளையில் சமுதாய ஒற்றுமை என்ற போலி ஒற்றுமை பேசும் போலிகளையும் இனம்கண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முயற்சியில் தொடர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரிவானாக.

    குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடிப்படையில் துய்மையான வடிவில் இஸ்லாத்தினை பின் பற்றி வாழ எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அத்தகைய நற்கிருபையை வழங்க பிராத்திப்போம்

  2. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

    மிக பயனுள்ள ஒரு கட்டுரை. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்

    உங்கள்சேவை தொடர எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  3. அஸ்ஸலாமுஅலைக்கும். உங்கள் ஆக்கத்தை வாசித்தேன். அருமை. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய உன்னதமான விடயமான ஏகத்துவத்தில் உறுதி எனும் கோட்பாட்டை உறுதிப்படுத்தி எழுதியுள்ளீா்கள். அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதனை வாழ்வில் எடுத்து நடக்கும் போது வேறு எந்த கொள்கையுடையவா் களுடனும் ஒத்துப் போக முடியாது எனும் உங்கள் வாதம் ஏற்புடையதல்ல. இது குறித்து நான் உங்களுக்கு செய்ய விரும்பும் நஸீஹத், வேறுபட்ட கருத்துடையவா்களுடன் (கொள்கையுடையோருடன்) ஒரு முஃமின் எங்ஙணம் உறவாடுவது என்பது பற்றிய இஸ்லாமியப் பார்வையை காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ச்சி செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அதற்கான கூலியை உங்களுக்கு நிரப்பமாக வழங்குவான்.

Leave a Reply to naina mohamed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You missed