இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்

முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 02 : இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அன்பு சகோதர, சகோதரிகளே! இத்தொடரின் முன்னுரையில் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்றும் மற்ற மார்க்கங்களை எவர் விரும்பினாலும் அது நிராகரிக்கப்படும் என்பதை அறிந்தோம்.

நம்மில் வெகு சிலர் மார்க்கத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் மாற்றுமதக் கலாச்சாரங்களில் கவரப்பட்டு அதிலே ஈடுபடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு விட்டோம் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மாற்றுமத வழிபாட்டுத் தலங்களை நோக்கிச் செல்கின்ற அவலநிலையும் பத்திரிக்கையின் வாயிலாக படிக்க நேரிடுகின்றது.

ஆனால் இறைவனோ, இஸ்லாமிய மார்க்கமல்லாது வேறொரு மார்க்கத்தைப் பின்பற்றினால் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக இருப்பார் என்று கடுமையாக எச்சரிக்கின்றான்.

“இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்” (அல்குர்ஆன்3:85.)

முஸ்லிம்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துக்கின்ற கிறிஸ்தவ மிஷனரிகளின் விஷமப் பிரச்சாரத்தின் விளைவாக மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர மக்களில் சிலர், ஏன் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று பொறியியல் மற்றும் மருத்துவ வல்லுனர்களாக இருக்கின்ற முஸ்லிம்கள்? சிலர் கூட ஈஸா நபியும் இறைவனால் அனுப்பட்ட இறைத் தூதர் தானே அவர்களைக் கூடப் பின்பற்றலாமே என்ற எண்ணத்திற்கு உள்ளாகின்றனர். இன்னும் சிலரோ அக்கிறிஸ்துவ மிஷனரிகளின் தீவிர பிரச்சாரத்தின் வாயிலாகவும், ஏழைகளிடம் பொருளாதாரத்தைக் காட்டி மயக்கியும் பாமர முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகின்றனர்.

இது இஸ்லாத்தைப் பற்றிய போதிய அறிவின்மையாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த கிறிஸ்தவர்கள், யூதர்கள் உட்பட அனைவரும் இறுதி தூதராகிய நமது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் அவர்கள் உணராததே காரணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரொருவர் – யூதரோ, கிறிஸ்தவரோ  – என்னைப் பற்றி கேள்விப்பட்டு பிறகு என் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தூதுச் செய்தியை நம்பிக்கை கொள்ளாமல் மரணமாகின்றாரோ அவர் நரகவாசிகளைச் சேர்ந்தவரே தவிர வேறில்லை” அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்

மேலும் இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான்:

“(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (அல்குர்ஆன் 7:158.)

எனவே அன்பு சகோதரர்களே! நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு சத்திய இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பணியினை இறைவன் நம்மீது சுமத்தியிருக்கின்றான். சத்தியம் நம்மிடம் இருக்கின்றபோது நாம் செயல்படுவதில்லை! ஆனால் கிறிஸ்தவ மிஷனரிகளோ அசத்தியத்தையே தமது மூலதனமாகக் கொண்டு சத்தியத்தில் இருந்துக்கொண்டு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றவர்களை அசத்தியத்தின்பால் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால் நாம் அல்லாஹ்விடம் பதில் கூற கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக இறைவனின் கட்டளையின் பிரகாரம் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் ஈமான் கொள்வது என்பது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை உளப்பூர்வமாக ஏற்று அதன்வழி நடப்பதாகும்.

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்!

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் (ஈமானின் பர்லுகள்) ஆறு ஆகும். அவைகள்:

1) அல்லாஹ்வை நம்புவது
2) மலக்குகளை நம்புவது
3) வேதங்களை நம்புவது
4) தூதர்களை நம்புவது
5) மறுமையை நம்புவது
6) நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் விதித்த விதியின் பிரகாரமே நடக்கின்றது என்று நம்புவது

முஸ்லிமாக இருக்கக்கூடிய ஒருவர் இந்த ஆறு அடிப்படைகளையும் அவசியம் நம்பியே ஆகவேண்டும். இதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்க இயலாது! ஏனெனில் இவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது இறைக்கட்டளையாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்” (அல்குர்ஆன் 2:177.)

இஸ்லாத்தின் முதல் ஐந்து நம்பிக்கைகளைப் பற்றி மேற்கூறிய வசனத்தில் கூறிய இறைவன் பிறிதொரு வசனத்தில் விதியைப் பற்றிக் கூறுகின்றான்:

“நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 54:49-50)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாக புகாரியில் அறிவிக்கப்படும் ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள்

‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று கூறினார்கள்:

ஈமான் என்பது சொல்லும் செயலும் அடங்கியதாகும். நம்முடைய இபாதத்கள் மற்றும் செயல்களின் காரணமாக ஈமான் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும். இபாதத்கள் செய்வதால் ஈமான் அதிகரிக்கின்றது. அதுபோலவே பாவங்கள் செய்வதின் மூலம் ஈமான் குறையவும் செய்கின்றது.

எனவே ஈமான் என்பது உள்ளம், உடல் உறுப்புகளைச் சார்ந்தது ஆகும் என்பதை விளங்கமுடிகிறது. உள்ளத்தினால் ஈமானின் நம்பிக்கைகளை மனதார ஏற்று அவற்றை நாவினால் மொழித்து உறுதி பூண்டு இறைவனின் ஏவல் மற்றும் விலக்கல்களை நம் செயல்களின் மூலம் முறையே பேணி நடப்பதன் மூலம் ஈமானை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இது உறுதியாகின்றது.

அடுத்ததாக ஈமானின் முதலாவது நம்பிக்கையாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது எவ்வாறு? என்பதையும் முஸ்லிம்களிடையே காணப்படும் அல்லாஹ்வைப் பற்றிய தவறான எண்ணங்கள் யாவை என்பதையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed