அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 3

எல்லா நற்செயல்களும் தர்மமே!

‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது கூட தர்மம் ஆகும்!

‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்’ என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், ‘அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), ஆதாரம் : புகாரி.

பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து பாது காத்துக் கொள்ளுங்கள்:-

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள். பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் அறிவிப்பவர் :அதீ இப்னு ஹாத்திம் (ரலி), ஆதாரம் : புகாரி.

உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே: –

முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, ‘அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் :மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! சாபமிடாதீர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

இறுதி காலத்தின் அடையாளங்களில் சில!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறும்விடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும் ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘ஹர்ஜ் என்றால் என்ன?’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை கொலை’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

பணியாளரை மதித்த உயர்ந்த பண்பாளர்: –

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை. அறிவிப்பவர் :அனஸ்(ரலி, ஆதாரம் : புகாரி.

வீட்டு வேலைகளை செய்த அண்ணலார் அவர்கள்!

‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்), ஆதாரம் : புகாரி.

முழுமையான ஈமானை எப்போது அடைய முடியும்?

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:) 1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது. 3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராக வது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிமை ஏசுவது பாவமாகும்!

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

திட்டியவரிடமே திரும்பிச் செல்லும் சாபம்!

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

பணியாளர்களை மதிக்கும் பண்பாளர்களாகுங்கள்: –

“…. ‘(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். எனவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரரை அல்லாஹ் வைத்துள்ளானோ அவர் தம் சகோதரருக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்தால் அவருக்குத் தாமும் ஒத்துழைக்கட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : மஅரூர் இப்னு சுவைத்(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கோள் சொல்லித் திரிபவருக்கான தண்டனை: –

(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது ‘(மண்ணறைகளிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நாட்டார்கள். பிறகு, ‘இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

நோன்பின் பலனை நீக்குபவைகள்: –

பொய்யான பேச்சைiயும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தம் உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதர்களிலேயே மிகவும் மோசமானவர்: –

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதர்களை அளவு கடந்து புகழாதீர்கள்: –

ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!’ என்று பல முறை கூறினார்கள். பிறகு, ‘உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம். காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘(நபி (ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

பிறரின் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள்: –

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேம்ப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

செய்த பாவங்களை வெளியில் பகிரங்கப்படுத்தாதீர்கள்: –

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பம்ரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்’ என்று அவனே கூறுவது பம்ரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed