உமர் ரலி அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்

(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர்(ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுதும்) சிரித்தபடி (மம்ழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்த இவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்று விட்)டார்களே!’ என்றார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘இவர்கள் (எனக்கு அஞ்சுவதை விட) அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள், இறைத்தூதர் அவர்களே! என்று கூறிவிட்டுப் பிறகு அப்பெண்களை நோக்கி, ‘தமக்குத் தாமே பகைவர்களாம்விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘அல்லாஹ்வின் தூதருன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கின்றீர்கள்’ என்று பதிலளித்தார்கள்.

(அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அது இருக்கட்டும் கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed