யாரஸூலுல்லாஹ் என்று நாம் நபியவர்களை அழைத்து உதவி தேடலாமா?
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே!
திருமறை மற்றும் நபிமொழிகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஒருவர் தம்முடைய ஆபத்துக் காலங்களின் போதோ அல்லது சிக்கலான நேரங்களின் போதோ அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் நாம் அழைத்து உதவி தேடக் கூடாது. அவ்வாறு அழைக்கப்படுபவர் எவ்வளவு தான் தகுதியில், அந்தஸ்தில் உயர்ந்தவராக இருந்தாலும் அல்லது எவ்வளவு தான் இறைவனுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் அல்லது அவர் இறைவனுக்கு நெருக்கமான நபியாகவோ அல்லது ரஸூலாகவோ இருந்தாலும் அல்லது அவர் ஒரு மலக்காகவோ இருந்தாலும் அவர்களை அழைத்து நாம் உதவி தேடக் கூடாது. ஏனென்றால் “அழைத்து உதவிதேடுவது” என்பது பிரார்த்தனை ஆகும். பிரார்த்தனை என்பது வணக்கமாகும்.
நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்கள், ‘துஆ என்பது வணக்கமாகும்’ என்று கூறி இந்த வசனத்தை ஓதினார்கள்:
“உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்” (அல்-குர்ஆன் 40:60)
வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் ஏகோபித்தக் கருத்துப்படி, யார் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அழைக்கிறாரோ அவர் இணை வைத்தவராகிறார். (அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை இணை வைத்து பல தெய்வ வணக்கமுடையவராகிறார்). ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘எவரொருவர் வானவர்களையும், நபிமார்களையும் இடைத்தரகர்களாக்கிக் கொண்டு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களை அழைத்து தனக்கு நலவானவற்றை தருமாறும், தன்னுடைய பாவத்தையும் துன்பத்தையும் நீக்கி விடுமாறும், தமக்கு வழிகாட்டி தம்முடைய தேவையை நிறைவேற்றுமாறும் கேட்கிறாரோ அவர் முஸ்லிம்களின் ஏகோபித்தக் கருத்துப்படி நிராகரித்தவராவார் (காஃபிராவார்)’ ஆதாரம் : மஜ்மூ அல் ஃபதாவா.
இப்னு அல்-கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘இறந்தவர்களை அழைத்து தேவைகளை கோருவது, அவர்களின் உதவியை நாடுவது, அவர்களின் பால் திரும்புவது ஆகியவைகள் அனைத்தும் ஷிர்கின் வகைகளாகும். இவைகள் தான் ஷிர்கின் முக்கிய அடிப்படைகளாகும்’ ஆதாரம் : பத்-அல் மஜீத்
எனவே தான் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் ‘அவனைத் தவிர வேறு ஒருவரை அழைப்பவர்கள் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள்’ என்று கூறுகிறான்.
“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்” (அல்-குர்ஆன் 46:5-6)
இவ்வாறு அழைக்கப்படுபவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வதற்கு சக்தியற்றவர்களாக இருக்கின்றனர் என அல்லாஹ் கூறுகிறான்: –
“அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 35:13-14)
‘தன்னைத் தவித்து அழைக்கப்படும் மற்றவர்களின் (வானவர்கள், நபிமார்கள், சிலைகள், இறை நேசர்கள், வலிமார்கள்) உதவியற்ற நிலை, இயலாமை, ஆட்சி அதிகாரத்தில் திறமையின்மை, அழைப்பவர்களின் அழைப்பை கேட்டு அதற்கு பதிலளிக்க இயலாமை குறித்து (மேற்கண்ட வசனங்களில்) அல்லாஹ் கூறுவதாக ஷைகு அப்துர் ரஹ்மான் இப்னு அல்-ஹசன் அல் ஷைகு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்’ ஆதாரம் : பத்-அல் மஜீத்
அல்லாஹ் தன் தூதரிடத்தில், ‘(நபியே!) கூறுவீராக: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்’ (அல்-குர்ஆன் 72:21) என்று கூறுமாறு கட்டளையிட்டிருக்க நாம் எவ்வாறு நபி (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேட முடியும்?
மேலும், “நீங்கள் கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேளுங்கள்! நீங்கள் உதவி கோருவதானால் அல்லாஹ்விடடே உதவி கோருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆதாரம் : திர்மிதி.
எனவே ஆபத்து நேரங்களில் முஹம்மது (ஸல்) அவர்களை ‘யாரஸூலுல்லாஹ்’ என்று அழைத்து உதவி தேடுவது என்பது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.
அறிஞர் ஷைகு அப்தல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தம்முடைய பத்-அல் மஜீத் என்ற நூலில் புஷைரியின் புர்தா என்ற கவிதைக்கு விமர்சனம் அளிக்கும் போது அடிக் குறிப்பில் கூறுகிறார்கள்: –
‘கிறிஸ்தவர்கள் மர்யமின் ஈஸா (அலை) அவர்களைப் புகழ்ந்ததைப் போல நீங்கள் என்னைப் புகழாதீர்கள்! நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதருமாவேன்’. என்று நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்திருக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்). முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களுடைய வழிமுறையை முழுமையாக பின்பற்றுவதும் அவர்களின் மார்க்கத்தை நிலை நாட்டுவதும் ஆகும். மேலும் அறியாதவர்கள் அவர்கள் மீது சுமத்தக் கூடிய கட்டுக்கதைகளை நிராகரிப்பதும் ஆகும். மேலும் ஒரே ஒரு ஸஹாபி (நபித்தோழர்) கூட நபி (ஸல்) அவர்களை அழைத்து உதவி கேட்டதாக பார்க்க முடியவில்லை. மேலும் மரியாதைக் குரிய இமாம்களிடமும் இத்தகைய வழக்கம் காணப்படவில்லை. இது வழிதவறிப் போனவர்களின் தவறான கொள்கையாகும்.
உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் ‘யா அல்லாஹ்’ என்றே கூறுங்கள்! ஏனென்றால் அவனே பிரார்த்தனைக்கு பதிலளித்து துன்பங்களை நீக்கி அனைத்தையும் கட்டுப்படுத்துபவன் ஆவான்’
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.