மறுமையில் நபியவர்களின் பரிந்துரை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள்.

பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள்.

அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். ‘நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்’ என்று சொல்வார்கள்.

உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் (அலை) அவர்களிடம்) செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் – அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.

(அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.   உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து)

‘உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும்

அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன்.

அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், ‘குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை’ என்று சொல்வேன்.

என அனஸ் (ரலி) அறிவித்தார்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:   உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), ‘நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்’ எனும் சொற்றொடர் குறிக்கிறது.

இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.

ஆதாரம்: புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “மறுமையில் நபியவர்களின் பரிந்துரை”
  1. மறுமை நாளில் எந்த நபியின் பரிந்துரை நமக்கு கிடைக்கும் எத்தனை முறை கிடைக்கும்

  2. மறுமையில் ஒரு மனிதன் இருப்பான் . அவனுக்கு எதிராக எத்தனை பாவ ஏடுகள் திறக்கப்படும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed