சிந்தனையை தூண்டும் சிறந்த அறிவுரைகள்

ஒரு மனிதர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வந்து, நான் பாவங்கள் புரிந்து எனக்கு நானே அநீதம் இழைத்து விட்டேன். எனக்கு அறிவுரை கூறுங்கள் எனக் கேட்டார்.

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : என்னிடமிருந்து ஐந்து விஷயங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைச் செய்ய முன் வந்தால் எந்தப் பாவமும் உனக்கு எந்த தீங்கும் அளிக்காது.

அந்த மனிதர் : அவைகள் யாவை?

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய நினைத்தால் அவனுடைய உணவை உண்ணாதே!

அந்த மனிதர் : பிறகு நான் எதை உண்பேன்? இப்புவியில் உள்ள அனைத்தும் அவனுடைய உணவே!

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : அப்படியானால் அல்லாஹ்வினுடைய உணவை உண்டு அவனுக்கு மாறு செய்வது சரியாகுமா?

அந்த மனிதர் : சரியாகாது. இரண்டாவது என்ன?

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய பூமியில் வசிக்காதே!

அந்த மனிதர் : இது முந்தயதை விடவும் கொடுமையானது! பிறகு நான் எங்கு தங்குவேன்?

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : அல்லாஹ்வினுடைய உணவை உண்டு, அவனுடைய பூமியில் தங்கி இருந்துக் கொண்டு அவனுக்கு மாறு செய்வது முறையாகுமா?

அந்த மனிதர் : அது முறையல்ல. மூன்றாவது என்ன?

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய விரும்பினால் அவன் உன்னைக் காணாத இடத்திற்குச் சென்று விடு!

அந்த மனிதர் : நான் எங்கு செல்வேன்? அவனோ இரகசியத்தையும் பரகசியத்தையும் அறபவனாக இருக்கிறானே!

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : அல்லாஹ்வினுடைய உணவை உண்டு, அவனது பூமியில் தங்கிக் கொண்டு, அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு மாறு செய்வது முறையாகுமா?

அந்த மனிதர் : அதுவும் முறையல்ல. நான்காவது என்ன?

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : உயிரைக் கைப்பற்றும் வானவர் உன் உயிரைக் கைப்பற்ற வந்தால், எனக்கு இன்னும் கால அவகாசம் தாருங்கள்! நான் திருந்தி நற்செயல் புரிந்து வருகிறேன் என்று அவரிடம் சொல்லி விடு!

அந்த மனிதர் : அவர் என் கோரிக்கையை ஏற்க மாட்டார். எனக்கு அவகாசமும் தரமாட்டார்.

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : நீ பாவமீட்சி பெற்று திருந்தி வாழ்வதற்காக உன்னால் உன் மரணத்தைத் தடுக்க முடியவில்லையென்றால் இறைவனுக்கு நீ எப்படித் தான் மாறு செய்கிறாய்?

அந்த மனிதர் : ஐந்தாவது என்ன?

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : மறுமையில் தண்டனை தரும் வானவர்கள் உன்னை நரகத்திற்கு அழைத்துச் செல்ல வரும் போது நீ அவர்களுடன் செல்லாதே!

அந்த மனிதர் : அவர்கள் என்னை விடமாட்டார்களே! என் கோரிக்கையை ஏற்க மாட்டார்களே!

இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) : அப்படியானால் நரகத்திலிருந்து விடுதலையை நீ எப்படி எதிர்பார்க்க முடியும்?

அந்த மனிதர் : எனக்கு இவ்வளவு போதும்! என் இறைவனிடம் நான் பாவமன்னிப்பு கோருகிறேன். அவனிடமே திரும்புகிறேன்.

என தருமை சகோதர சகோதரிகளே! நாமும் நமது தவறுகளுக்கு வருந்தி நமக்கு மரணம் வருமுன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவோம். இறைவன் நம்மை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்தருள போதுவமானவன்.

அல்லாஹ் கூறுகிறான்: –

‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் மன்னிப்புக் கோரி மீளுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்!’ (அல்-குர்ஆன் 24:31)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed