அன்பும் கருணையும் பொழியும் மார்க்கம் இஸ்லாம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலம் முதற்கொண்டே இஸ்லாம் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. ஏன் இன்றளவும் இஸ்லாத்தின் எதிரிகளுடைய பொய் பிரச்சாரங்களையெல்லாம் முறியடித்து விட்டு உலகில் இருக்கும் அனைத்து மதங்களை விடவும் இஸ்லாமிய மார்க்கமே வேகமாக வளர்ந்து வருகிறது. காரணம் இஸ்லாம் வலியுறுத்தும் சமாதானம் அன்பு மற்றும் கருணையுமாகும். இஸ்லாம் என்ற சொல்லிற்கு அமைதி என்ற பொருளும் உண்டு.

முஸ்லிம்கள் தாங்கள் செய்யும் எந்தச் செயலின் துவக்கத்திலும் கூறுவது ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்’ என்பதாகும். அதன் பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”என்பதாகும்.

அது போல் ஒரு முஸ்லிம் பிறரை சந்திக்கும் போதெல்லாம் கூறும் முகமன் கூட ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். இதன் பொருள் : ‘சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக’ என்பதாகும். இவ்வாறு வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் அன்பையும் சாந்தியையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் மார்க்கத்தில் வன்முறை மற்றும் தீவிரவாதம் என்பது எப்படி சாத்தியமாகும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்து உணர்வார்கள்.

மேலும் முஸ்லிம்கள் வழிபடுகின்ற அகில உலகங்களின் ஏக இறைவனும் தன்னைப் பற்றி அவனுடைய இறுதிவேதத்தில் கூறும் போதும் அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன் (அல்-குர்ஆன் 85:14) என்கிறான். “மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்-குர்ஆன் (2:163) என்றே கூறுகிறான்.

அது போல உலக இறுதி நாள் வரை தோன்றக் கூடிய மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்ட இறைவன் அனுப்பிய தன்னுடைய இறுதி தூதரைப் பற்றி அவனுடைய திருமறையில் கூறும் போதும் “(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை (அல்-குர்ஆன் 21:107). நபி (ஸல்) அவர்களின் கனிவைப் புகழ்ந்து இறைவனும் தனது வேதத்திலே பாராட்டவும் செய்கின்றான்.

“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:159)

நபி (ஸல்) அவர்களும் அன்பையும் கருணையையும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இறைவனுடைய அனைத்துப் படைப்பினங்களிடமும் அன்பு காட்டாதவர் இறைவனால் அன்பு காட்டப்பட மாட்டார்: –

“(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்: –

“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் ஒன்றுவிடாது பின்பற்றுவது மிக மிக முக்கியமானது. இந்த வகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களும் முஸ்லிமான ஒவ்வொருவரும் பின்பற்றி நடக்க வேண்டிய முன்மாதிரிகளாகும். ஒருவர் இதை விட்டும் வேறு ஒரு பாதையை பின்பற்றினால் அவர் வழிதவறியவராகவே கருதப்படுவார். இந்த வகையில் முஹம்மது நபி கட்டளையிட்டிருக்கின்ற அன்பையும் கருணையையும் மற்ற ஜீவன்களிடத்தில் காட்டாத எவரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவராக மாட்டார்.

நாய்க்கு கருணை காட்டிய விபச்சாரிக்கு கிடைத்த சுவர்க்கம்!

இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரம் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் விபச்சாரி ஒருவர் தாகத்தினால் தவித்த நாய் ஒன்றுக்கு தண்ணீர் புகட்டியதன் காரணமாக அவரின் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவள் சுவர்க்கம் செல்ல அவளின் கருணையே காரணமாக இருந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறி கருணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

போர்க்கைதிகளிடம் கூட கருணைகாட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள்!

தற்காலத்தைப் போல் போர்க்கைதிகளை அடைத்து அவர்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளிக்கும் வசதியில்லாத அந்தக் காலக் கட்டங்களில் சிறைக் கைதிகளை போரில் வென்றவர்கள் பங்கிட்டுக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து அவர்களைப் பாதுகாத்து வந்தனர். இந்த வகையில் முஸ்லிம்களை அழிக்கத் துடித்த எதிரிகள் சிலருடன் ஹூனைன் என்ற இடத்தில் போர் நடந்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.

“உமர்(ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்கு கருணை காட்டி அவர்களை சுதந்திரமாகவிட்டு விட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது?’ என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், போர்க் கைதிகளின் மீது கருணை புரிந்து அவர்களை சுதந்திரமாக விட்டு விட்டார்கள்” என்றார்கள். (உடனே) உமர் (ரலி), அப்படியென்றால் நீ சென்று அந்த இரண்டு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டு விடு” என்று கூறினார்கள்.” ஆதாரம் : புகாரி.

தன்னைக் கொல்ல வந்தவரிடமே கருணை காட்டி மன்னித்து விட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்கள்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார் (‘தாத்துர் ரிகாஉ’ எனும்) நஜ்துப் போருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக் கொண்டு திரும்பிய போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கினை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே நிழல் பெற்று ஓய்வெடுத்தார்கள். தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று நிழல் பெற்று (ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் (அவர்களிடம்) வந்தோம். அப்போது ஒரு கிராமவாசி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னிடம் இவர் வந்து என்னுடைய வாளை உருவி எடுத்தார். உடனே நான் விழித்துக் கொண்டேன். என்னுடைய வாளை உருவிய நிலையில் என்னுடைய தலைமாட்டில் இவர் நின்றிருந்தார். ‘என்னிடமிருந்து உங்களைக் காப்பது யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்” என்று பதிலளித்தேன். உடனே அவர் வாளை உறையிலிட்டார். பிறகு அவர் அமர்ந்தார். அது இவர்தான்” என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் (மன்னித்து)விட்டார்கள். ஆதாரம் : புகாரி.

கோபம் கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்!

“ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டு பிணங்காதீர்கள்!

அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார். “நபி (ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், ‘நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழம் (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்!

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டுவதிலும் இரக்கம் காட்டுவதிலும் முஸ்லிம்கள் ஓர் உடலைப் போல் இருக்க வேண்டும்!

“ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’இதை நுஅமான் இப்னு பஷீர் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் இஸ்லாம் அமைதியையும், அன்பையும், சமாதானத்தையும் கருணையையும் போதிக்கும் மார்க்கம் என்பதை உணர்த்துவதை நாம் அறியலாம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed