அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்?
அல்லாஹ்வுக்காக தான, தர்மம் செய்பவர்களுக்கு அல்லாஹ்விடம் பெரியதொரு கூலி இருக்கிறது:-
“நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது” (அல்-குர்ஆன் 57:7)
அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தால் அதை அல்லாஹ் இரட்டிப்பாக்குகிறான்!
“அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு” (அல்-குர்ஆன் 57:11)
“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் – அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது” (அல்-குர்ஆன் 57:18)
இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயை ஆகும்!
“அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)
சுவர்க்கத்திற்கு நீங்கள் முந்துங்கள்!
“உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் – அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்” (அல்-குர்ஆன் 57:21)
அதிக சந்தோசமும் அதிக துக்கமும் பட வேண்டாம்!
“பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்-குர்ஆன் 57:22-23)
கஞ்சத்தனம் செய்பவர்கள் நஷ்டவாளிகளாவார்கள்!
“எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ – (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்” (அல்-குர்ஆன் 57:24)