இஸ்லாத்தின் பார்வையில் தனி மனித வழிபாடு

அகிலங்களின் ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்!

தனிமனித வழிபாடு என்பது காலங்காலமாக மக்கள் பலரால் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வழிபடக் கூடியவர் ஒரு மத போதகராகவோ அல்லது ஒரு சமுதாயச் சீர்திருத்தவாதியாகவோ அல்லது ஒரு சிறந்த ஆண்மீக குருவாகவோ அல்லது ஒரு சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவராகவோ கூட இருக்கலாம்.

தற்காலத்தை எடுத்துக் கொண்டால் அதைவிடக் கேவலமான அரசியல் தலைவர்களையும், சினிமா நடிக நடிகர்களையும் தங்களின் வழிகாட்டுபவர்களாக எடுத்துக் கொண்டு அவர்களின் பேச்சுக்கு, கொள்கைகளுக்கு கட்டுப்படுவதன் மூலம் அவர்களை வழிபடுகின்றனர்.

இவ்வகையான தனிமனித வழிபாடுகள் பொதுவாக அனைத்து மத நம்பிக்கையாளர்களிடமும் காணப்படுகிறது. ஆனால் இஸ்லாம் இந்த வகையான தனிமனித வழிபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறது. இருப்பினும் பிற்காலத்தில் வந்தவர்களால் இஸ்லாமிய கொள்கைகளைச் சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரான கொள்கையுடைய ‘ஸூஃபியிசம்’ என்று சொல்லப்படக் கூடிய புதிய தனிமனித வழிபாட்டுக் கொள்கையை இஸ்லாத்தில் தோற்றுவித்து சில மனிதர்களை இறைவனுக்கு நெருக்கமான மஹான்களாக சித்தரித்து அவர்களின் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் மோட்சம் அடையலாம் என்ற தவறான கொள்கையை இஸ்லாத்தில் புகுத்தினர். இந்தக் கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இஸ்லாமிய மார்க்கம் என்பது இறைவனின் இறுதி தூதருக்கு அருளப்பட்ட இறுதி வேதமான அல்-குர்ஆன் மற்றும் அந்த தூதரின் வழிமுறைகளான ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் ஆகும். ஏனென்றால் இறைவனின் கூற்றுப்படி (அல்-குர்ஆன் 5:3) இஸ்லாம் என்பது ஒரு முழுமை பெற்ற மார்க்கமாகும்.

இந்த தனிமனித வழிபாடு என்பது ஒருவரை அளவு கடந்து நேசிப்பதன் மூலம் அவரின் வாக்குகளையெல்லாம் வேதவாக்காக நினைத்து அவற்றுக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் அவர்களை வழிபடுவதாகும். இது இஸ்லாத்தின் பார்வையில் மிக மோசமான தண்டனைக்குரியது. இவ்வாறு பாமர மக்களால் வழிபடக் கூடியவர்கள் சமூகத்தில் எவ்வளவு தான் மதிப்பும் அந்தஸ்தும் உடையவராகவோ அல்லது சிறந்த பேச்சாற்றல் உள்ளவராகவோ அல்லது சிறந்த கல்விமானாகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் பின்பற்றக் கூடிய ஓர் இயக்கத்தின் தலைவராகவோ அல்லது மதங்களின் மார்க்கத்தின் பெயரால் தோன்றிய அமைப்புகளின் தலைவராகவோ இருப்பினும் முஸ்லிமான ஒருவர் தம்முடைய வாழ்க்கை நெறியாக, கொள்கைகளாக அவர்களுடைய கொள்கைளையோ அல்லது கருத்துக்களையோ பின்பற்றக் கூடாது; மாறாக இறைவனுடைய இறுதி வேதம் மற்றும் அவனுடைய இறுதி தூதரின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஆணையிடுகின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: –

“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

தனிமனித வழிபாடு எப்போது ஆரம்பிக்கின்றது?

தனிமனித வழிபாடு என்பது ஒருவரிடம் இருக்கும் அபிரிதமான ஆற்றல்களான கல்வியறிவு, சிறந்த பேச்சாற்றல், மார்க்க அறிவு, எதாவது ஒரு துறையில் நிபுனத்துவம் போன்ற சாதாரன மக்களிடம் காணப்படாதவற்றைச் சிறப்பிப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை அளவு கடந்து புகழ்வதன் மூலம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்களை அதிகமாகப் புகழ்வதன் மூலம் சிலர் அவருக்கு கடவுள் தன்மையைக் கொடுத்து அவர் கூறுவதையெல்லாம் அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்களிடம் மார்க்கம் பற்றிய எதைக் கூறினாலும் அவர்களிடம் அது எடுபடுவதில்லை. இவ்வகையான தனிமனித துதிபாடுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: –

“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (புகாரி)

மேலும் ஒரு தனிமனிதனின் கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்கள் எத்தகைய பெரும்பான்மையுடையவராக இருந்தாலும் அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.

“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)

யூதர்களுக்கு சன்மார்க்க போதகராக வந்த இறைத் தூதரான இயேசு நாதர் (அலை) அவர்களையும், அவருடைய தாயார் மேரியையும் கிறிஸ்தவர்கள் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து அவரையே கடவுளாக்கி விட்டனர். மேலும் சிலர் தங்களின் பாதிரிமார்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் என்ன கூறினாலும் அதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு இறைவனின் வேதங்களைப் புறக்கனிப்பதன் மூலம் அவர்களை வழிபடுகின்றனர். இதைக் குறித்து இறைவன் கூறுகிறான்.

“அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்-குர்ஆன் 9:31)

தனிமனித வழிபாடு மூலம் மக்களிடத்தில் பெரும் புகழையும் அந்தஸ்தையும் பெற்றவர்களோ அந்த மக்களின் பொருட்களையே விழுங்கவாரம்பிக்கின்றனர். பாதிரிகளும், சன்னியாசிகளும் தங்களை தெய்வீகத் தன்மை பெற்றவர்களாக உயர்த்திக் கொண்டதன் நோக்கம் இதுவே என்பதை இது உணர்த்துகிறது. இறைவன் கூறுகிறான்: –

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்!” (அல்-குர்ஆன் 9:34)

முற்காலத்தில் யூத, கிறிஸ்தவ மதங்களின் ரப்பிகளும், பாதிமார்களும், சன்னியாசிகளும் மக்களின் செல்வத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் வசதிக்கேற்றவாறு இறைத்தூதர்களுக்கு இறைவன் இறக்கியருளிய வேதங்களையே மாற்றி அமைத்துக் கொண்டு அவற்றையும் இறைவனிடமிருந்து வந்தது என்று அபாண்டமாக பொய் கூறி அற்ப ஆதாயம் தேடி வந்தனர். மக்களில் பெரும்பாலோர் ரப்பிகளையும், பாதிரிமார்களையும், சன்னியாசிகளையும் அளவு கடந்து புகழ்ந்து அவர்களின் வாக்கை வேதவாக்காக கருதுவதன் மூலம் அவர்களை தனிநபர் வழிபாடு நடத்தி வந்தமையால் இறைவன் இறக்கியருளிய உண்மையான இறைவசனங்களை விட்டுவிட்டு அந்த போலியானவர்களைப் பின்பற்றலாயினர்.இதைக் கண்டிக்கும் முகமாக இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: –

“அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!” (அல்-குர்ஆன் 2:79)

“அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் – நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை” (அல்-குர்ஆன் 9:9)

“எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” (அல்-குர்ஆன் 2:174)

இன்னும் சிலர் தாங்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் தங்கள் மூலமே பாமரர்கள் முக்தி மோட்சம் அடைய முடியும் என்று கூறி அற்ப உலகாயாதங்களுக்காக பாமர மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஒன்றுமறியா பாமர மக்கள் அவர் கூற்றை நம்பி அவரை வழிபட்டு வருகின்றனர். ஆனால் இந்த வாசலையும் இஸ்லாம் அடைத்து இறைவனை நெருங்குவதற்கு சாமியார்களும், சன்னியாசிகளும், பாதிரிமார்களும், ஹஜ்ரத் மார்களும், மஹான்களும் தேவையில்லை! மாறாக ஒருவன் இஸ்லாம் கூறும் நற்செயல்களைச் செய்வதன் மூலம் நேரடியாக இறைவனின் நெருக்கத்தைப் பெறலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறு இறைவனுக்கும் ஒரு தனிமனிதனுக்கும் இடையில் ஒரு புரோகிதரையோ அல்லது இடைத் தரகரையோ ஏற்படுத்தி வழிபடுவதை வன்மையாகக் கண்டித்து அதை மன்னிக்கப்படாத பாவம் எனக் கூறுகிறது.

இறைவன் கூறுகிறான்: –

“அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.)” (அல்குர்ஆன் 39:43)

“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக” (அல் குர்ஆன் 2:186)

எனவே ஒரு தனிமனிதன் முக்தி, மோட்சம் அடைய எவரையும் வழிபடத் தேவையில்லை! இறைவனை நேரடியாக வழிபட்டாலே போதுமானது. இறைவனின் வேதத்தையும் அவனின் தூதரின் வழிகாட்டுதல்களையும் விட்டுவிட்டு பிறரைப்
பின்பற்றுவதன் மூலம் தனிநபர் வழிபாடு நடத்துபவர்களை இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.

“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’ (என்பர்). (அல்-குர்ஆன் 33:66-68)

செயல்கள் பலனற்று போன நஷ்டவாளிகள்: –

இறை வேதத்தையும் இறைத் தூதரின் வழகாட்டுதல்களையும் பின்பற்றாமல் தம் மனம் போன போக்கில் தனிநபர் வழிபாடு மூலம் பிறரின் கொள்கைகளை ஏற்று அவற்றுக்கு கட்டுப்பட்டு வாழ்வதால் இவ்வுலகில் செய்த அனைத்தும் வீணானவைகளாகிவிடும் என இறைவன் எச்சரிக்கின்றான்.

“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள் அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும் மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். அதுவே அவர்களுடைய கூலியாகும் – (அது தான்) நரகம் – ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள் என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். (அல்-குர்ஆன் 18:103-106)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed