நிச்சயிக்கப்பட்ட மரணம்

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு,

அது மரணம் என்பது மட்டுமே!

இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம்,

நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா?

அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?

புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நரை போட
இரத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!

மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!

உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?

மரணம் உனை அரவணைக்கு முன் முளங்காளிட்டு வணக்கம் செலுத்தியவன் கூட,

நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின் தள்ளி நின்றுவிடுவான்.

நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!

கட்டு நோட்டுக்களும் கடை வாசல்களும்,

காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே உன் கடந்த காலத்தை அசை போடு!

மீதி வாழ்க்கையை நிறை போடு!

உன் உடலுக்காய்த் தொழும் நாள் வருமுன்
நீயே – உனக்காய்த் தொழுது கொள்!

உதிர்ந்து போகும் உன் வாழ்க்கையை நினைந்து
உன் உதிரா வாழ்க்கைக்காய் உனை வார்த்துக் கொள்!

நாளைய பொழுதுகள் நமக்காய் காத்துக் கிடக்கின்றன
அது – சுட்டெரிக்கும் சுடு நெருப்பா?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா?
யாவும் அறிந்தோன் வல்லோன் ரஹ்மானே!!

உலக நெருப்பு நமக்குப் புதிதல்ல
உலகையே உருக்கிடும் நெருப்புத்தான் நமக்குப் புதிது!

உன் நிஜங்களை ஒரு முறை நிறுத்துக் கொள்!
போலிகளை அவ்வப்போது கலைந்து கொள்!

கடைசி நாளிகைகள் கண்சிமிட்டும் போது
கண்ணீர் மழைகளெல்லாம் அந்த நெருப்பை அனைக்கமாட்டா!

கபனும், கப்ரும் உனை அழைக்கு முன் மீண்டும் ஒரு முறை அழுது கொள்!
மலக்குல் மெளத்தும் வரும் முன்னே
மண்ணறை வாழ்க்கைதனைப் பெறு முன்னே
மன நிலை மாற்றி மறுமைக்காய் வாழ்க்கையை வரைவோமே!!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed