செல்வத்தைப் பெருக்கும் ஆசை

செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!

“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)

கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!

“செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 102:1-8)

பொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்!

“செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன” (அல்-குர்ஆன் 18:46)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!

அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)

இவ்வுலகில் செல்வங்கள் தரப்பட்டிருப்பது ஒரு சோதனைக்காதத் தான்!

“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 8:28)

அல்லாஹ் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்!

“அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்” (அல்-குர்ஆன் 16:71)

செல்வமும் வறுமையும் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவை!

“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் – எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 34:36)

அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வ செழிப்பைக் கொண்டு ஆணவம் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் காரூனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும் படிப்பினை பெறுங்கள்!

“நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ‘நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். ‘மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை’ (என்றும் கூறினார்கள்). (அதற்கு அவன்) கூறினான்: ‘எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!’ இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ‘ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்’ என்று கூறினார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களோ; ‘உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள். ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், ‘ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள்” (அல்-குர்ஆன் 28:76-82)

செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்!

“இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்” (அல்-குர்ஆன் 9:85)

நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்தைக் கண்டு அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!

“நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்” (அல்-குர்ஆன் 43:33)

உங்களின் பிள்ளைகளும், செல்வங்களும் இறைவனை மறக்கச் செய்ய வேண்டாம்!

“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 63:9)

இவ்வுலகின் செல்வம், செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் யாவும் அழிந்து விடக் கூடியவைகள்!

“ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ‘என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ‘அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ‘(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ‘என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!’ (என்று அரற்றுவான்)” (அல்-குர்ஆன் 69:25-29)

நிலையற்ற இவ்வுலக செல்வத்தின் மீது காதல் கொண்டுள்ள மனிதன்!

“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)

மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!

“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா” (அல்-குர்ஆன் 26:88)

இம்மையின் செல்வ சுகங்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் செயல்கள் யாவும் அழிந்து விடும்!

“(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள்தான் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன் 9:69)

நரகத்தில் விழுந்து விட்டால் நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எவ்விதப் பயனும் அளிக்காது!

“ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது” (அல்-குர்ஆன் 92:11)

இறைவனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் ஆற்றல் செல்வத்திற்கு இல்லை! மாறாக ஒருவரின் நற்கருமங்களே இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும்!

“இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்” (அல்-குர்ஆன் 34:37)

கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் அல்லாஹ் இரு மடங்கு கூலி தருவான்!

“(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் – அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 2:245)

தான தர்மங்கள் செய்வதினால் வறுமை உண்டாகாது! மாறாக செல்வம் பெருகும்!

“(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:268)

ஒவ்வொரு முறை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போதும் 1x7x100=700 மடங்கு நன்மைகள் கிடைக்கும்!

“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:261)

செய்த தர்மங்களை சொல்லிக்காட்டாதிருந்தால் நற்கூலிகள் கிடைக்கும்!

“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:262)

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்!

“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம்
பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:265)

அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள்!

பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்” (அல்-குர்ஆன் 2:273)

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்!

“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:92)

பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது!

“அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்” (அல்-குர்ஆன் 59:7)

தான தர்மங்கள் செய்வதினால் உள்ளும் புறமும் தூய்மையடையும்!

“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை
அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:103)

பயபக்தியுடையவர்களின் செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு!

“நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்¢ நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு” (அல்-குர்ஆன் 51:15-19)

எல்லா செல்வங்களை விட மிக்க மேலான செல்வம் அல்-குர்ஆன்!

“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது’ என்று (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 10:57-58)

உண்மையான முஃமின்கள் யார்?

“நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் – இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்” (அல்-குர்ஆன் 49:15)

பொன்னையும் பொருளையும் சேகரித்து வைத்துக் கொண்டு தான தர்மம் செய்யாதிருப்பவருக்கான தண்டணைகள்!

“எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 9:34-35)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “செல்வத்தைப் பெருக்கும் ஆசை”
  1. (Assalam alaikum wa rahamathulahi wa barakathahu,)
    நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் – இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்?

  2. Dear brother,

    This article is very useful for all Muslim bro &sisters. May Allah bless and guide you to get more knowledge, which will be essenial for Muslim Umma.

    Jazaakumullahu Khairan.

    Ayyanna Nasurudeen
    Inco Ltd, alkhobar.KSA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed