காரியங்களனைத்தும் அல்லாஹ்வின் விதியின் படியே

மனிதனின் பிறப்பிற்கு முன்பே எழுதப்படும் விதி!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தாயின் கருப்பைக்கென வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், “இறைவா! இது (ஒரு துளி) விந்து. இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டம்” என்று கூறிக்கொண்டிருப்பார். அதை அல்லாஹ் படைத்(து உயிர் தந்)திட நாடும்போது, “இறைவா! இது ஆணா,பெண்ணா? நற்பேறற்றதா? நற்பேறு பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் தெரிவிக்கப்பட்டு) தாய் வயிற்றில் அது இருக்கும் போதே பதிவு செய்யப்படுகின்றன. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); ஆதாரம்: புகாரி

மனிதனின் இறுதி முடிவு அவனின் விதியின் படியே அமையும்!

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார்.  அவர் அதில் உயிரை ஊதுகிறார்.  (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே செல்வார்.  அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: புகாரி

விதி முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் நாம் செயலாற்றாமல் இருக்கலாமா?

நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடியில் இருந்தோம்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.

பிறகு, “உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா” என்று கேட்டார்.  அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது.  நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள்.

பிறகு “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்” (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி); ஆதாரம்: புகாரி

மக்களின் பார்வையில்படுவதை வைத்து ஒருவரை செர்க்கவாதியா அல்லது நரகவாதியா என்பதை தீர்மானிக்க முடியாது!

ஒரு மனிதர், மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துகொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராய் இருப்பார். ஒரு மனிதர், மக்களின் பார்வையில் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராய் இருப்பார். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி); ஆதாரம்: புகாரி

இப்படி செய்திருந்தால் அப்படி ஆயிருக்குமே! என்று கூறாதீர்கள்!

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.  உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) “லவ்” எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed