பெண்கள் அழைப்புப் பணி செய்வதன் அவசியம்

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது!

ஆண்களைப் போலவே பெண்களுகளும் தங்களை தாஃவா – இஸ்லாமிய அழைப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும் இதுவாகவேயிருக்கிறது.  அல்-குர்ஆன் மற்றும் சுன்னா வலியுறுத்தும் ‘நன்மையை ஏவி தீமையைத் தடுக்கவேண்டும்’ என்ற கடமையை பெண்களும் இஸ்லாமிய ஷரீஅத் காட்டும் வழிமுறைகளில் அழகிய முறையில் தாஃவா செய்வது அவசியமாகிறது.

தாஃவாவில் ஈடுபடும் போது மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடுமே! மேலும் பலர் தங்களை உற்று நோக்க நேருமே என்ற தயக்கத்தினால் அவர்கள் தாஃவா செய்வதிலிருந்து சற்றும் பின்வாங்க கூடாது. இந்தப் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இருக்கிறது! ஆனால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் கூச்ச சுபாவமுடையவர்களாகவும் வெட்கப்படுபவர்களாகவும் இருப்பதால் தங்களை அழைப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள தயங்குகின்றனர். இறைவனின் கட்டளையை மேற்கொள்கின்ற வேளையிலே ஷைத்தானின் தூண்டுதலினால் தமக்கு எதிராக செய்யப்படுகின்ற கேலி மற்றும் கிண்டல்களை பெண்கள் பொறுமையுடன் சகித்துக்கொண்டு தமது பணியினைத் தொடரவேண்டும்.

தாஃவாவில் ஈடுபடும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:

1) இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவையும், அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலான இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களை அறிந்துக்கொள்ள வேண்டும்.

2) பல்வேறு ஃபித்னாக்களும், அநாச்சாரங்களும் மலிந்துக்காணப்படும் இக்காலக்கட்டத்தில் சினிமா, சீரியல் போன்ற தீமையான காரியங்களில் நமது பொண்ணான நேரத்தை வீணடிக்காமல் குர்ஆன் மொழிபெயர்ப்புகள், தப்ஸீர் மற்றும் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

3) ஷிர்க் மற்றும் பித்அத்களில் ஈடுபடாத, குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் உரைகளைக் கேட்பது, அவர்களின் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வாசிப்பது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு தாமும் பயன்பெறுவதோடு மற்றவர்களுக்கும் பயனளிக்கின்ற வகையினிலே செயலாற்ற வேண்டும்.

4) மற்றவர்களுக்கு ஒரு நன்மையை ஏவும் போதோ அல்லது மற்றவர்களுடைய தீமையை தடுக்கும் போதோ முதலில் நாம் அந்த நன்மையான காரியத்தை முறையாகச் செய்கின்றோமா என்பதையும் அதுபோல் நாம் பிறரை தடுக்கின்ற செயலை நாமும் செய்யாது தவிர்ந்திருக்கின்றோமா? என்பதையும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!. இல்லையேல் ‘முதலில் நீ ஒழுங்கா இருக்கிறியா?’ என்ற ஏச்சுக்கும் ஏளனத்திற்கும் ஆளாக நேரிடும்.

5) மார்க்க மேதைகளும் அறிஞர்களும் மட்டும் தான் தாஃவா செய்யவேண்டும் என்பது கிடையாது.  தாஃவா செய்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக இருப்பதால் நமக்குத் உறுதியாக தெரிந்த விசயங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

6) தாஃவா செய்கின்ற வேளையிலே தமக்குத்தெரியாத ஒன்றைப் பற்றி பிறர் கேள்வி கேட்கின்ற வேளையிலே சற்றும் தயங்காமல் இதைப் பற்றிய விளக்கத்தை அறிந்தவர்களிடம் கேட்டுவந்து பிறகு விளக்குகிறேன் என கூறவேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு, ‘தமக்கு ஒன்றும் தெரியாது’ என மற்றவர்கள் தம்மைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக குர்ஆன் ஹதீஸின் அடிப்படையினில்லாமல் தமது மனதிற்கு பட்டவிளக்கத்தை கூறுவதற்கு ஒருபோதும் முயல்வது கூடாது.

7) மஹ்ரமில்லா ஆண்களுக்கு முன்னிலையில் தாஃவா செய்கின்ற சூழல் ஏற்படுகின்ற போது பெண்கள் இஸ்லாமிய முறையில் முறையான ஹிஜாப் அணிந்து செய்யவேண்டும். மேலும் ஆண்களுடன் சகஜமாக கலப்பது, அவர்களுடன் கலந்துரையாடுவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.

8) பெண்கள் மஹரமில்லா ஆணுடன் சேர்ந்து தனிமையில் தாஃவா பணியில் ஈடுபவது கூடாது.

9) தங்களின் தாஃவா எவ்வித எதிர்வினைகளையும் ஏற்படாதவாறு மிகுந்த கவனமுடன் பேசவேண்டும்.

10) தங்களின் அழகு அலங்காரத்தை அப்படியே காட்டும் ஆடைகளை அணிந்துக்கொண்டு தாஃவா செய்வதை தவிர்க்கவேண்டும். மேலும் குழைந்து பேசுவதையும் தவிர்க்கவேண்டும்.

11) தாஃவா செய்கின்ற பெண்கள் தங்களின் தாஃவா பணிகள் தங்களின் மற்ற மார்க்க கடமைகளையும் குடும்ப பொறுப்புகளையும் பாதிக்காதவாறும் பார்த்துக்கொள்ளவேண்டும். முழுவதுமாக ஒன்றில் ஈடுபட்டு மற்ற கடமைகளை விட்டுவிடுவதற்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை! நடுநிலையோடு நடந்துக்கொள்ளவேண்டும்.

பெண்கள் எந்தெந்த வழிகளில் தாஃவா செய்யலாம்?

தற்போதைய நவீன உலகில் எத்தனையோ வழிகளில் பெண்கள் தங்களை தாஃவாவில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

1) ஷிர்க் மற்றும் பித்அத்களில் உழன்று நரகத்தின் அடிபாதாளத்தை நோக்கி சென்றுகொன்றிருக்கும் நமது உற்றார் உறவினர்களுக்கு அதன் தீமைகளைப் பற்றியும் மறுமையில் நிரந்தர நரகில் செல்ல நேரிடும் என எச்சரிக்கை செய்யலாம்.

2) அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு ஏகத்துவத்தைப் பின்பற்றுகின்ற மார்க்க அறிஞர்கள் எவ்வாறெல்லாம் பதிலளித்திருக்கிறார்களோ அவற்றை அறிந்து அவர்களுக்கு பொறுமையுடனும் பதில் கூறுவதற்கு முயற்சிக்கவேண்டும். எந்தச் சூழ்நிiயிலும் கோபப்படுவதோ அல்லது உறவை முறிப்பதோ கூடாது.

3) பெண்கள் ஒன்று கூடும் இடங்களில் பிறரைப் பற்றி புறம்பேசுதலோ அல்லது அவதூறு கூறுதலோ இடம்பெறுகின்ற வேளையில் அவற்றின் தீமைகளைப் பற்றி எடுத்துக்கூறலாம். அல்லது தம்மிடம் யாராவது பிறரைப் பற்றி புறம்பேசினால் அவ்வாறு கூறுவது பெரும் தண்டணைக்குரிய செயல் என்று புறம்பேசுபவர்களுக்குரிய தண்டணைகளைப் பற்றி எச்சரிக்கலாம். அல்லாஹ் நாடினால் உங்களிடம் புறம்பேசிய அவர் தம்மைத் திருத்திக்கொள்ளலாம்! அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களைப் பற்றி உங்களிடம் புறம் பேசினால் அது உங்களுக்குப் பிடிக்காது என்று உங்களிடம் புறம்பேசுவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

4) நமது வீட்டு விஷேசங்களிலோ அல்லது பெண்களின் ஒன்று கூடலின்போதோ நாமோ அல்லது நமக்குத் தெரிந்த ஆலிமா மூலமாகவோ 10 அல்லது 15 நிமிடங்கள் சிறிய பயான் ஒன்றை குறிப்பிட்ட தலைப்பில் ஆற்றலாம். அவர்களுக்கு சலிப்படையும் வகையில் செய்வதை அவசியம் தவிர்க்கவேண்டும்.

5) மார்க்க அறிஞர்களின் வீடியோ, ஆடியோ ஆகியவற்றை நமக்குத் தெரிந்தவர்களிடம் கொடுத்து அவர்கள் அவற்றை பார்க்குமாறும் கேட்குமாறும் செய்யலாம். புத்தகங்களை கொடுத்து படிக்குமாறு கூறலாம்.

6) ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் அதன் மூலம் தங்களுக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் தோழிகளுக்கு எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ வடிவிலான தாஃவா செய்யலாம். அதே நேரத்தில் ஸ்மார்ட் ஃபோன்களினால் ஏற்படும் ஃபித்னாக்களைப் பற்றியும் அறிந்து சர்வ ஜாக்கிரதையுடன் செயல்பட்டு அந்நிய, மஹரமில்லா ஆண்களுக்கு நமது அலைபேசி எண்கள் கிடைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிக மிக முக்கியமான ஒன்றை பெண்கள் நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். அதாவது, நமது கடமை எடுத்துச்சொல்வது மட்டுமே என்பதையும்; அவர்களின் மனதை மாற்றி அவர்களை நேர்வழியில் சேர்ப்பது அல்லது அவர்களை வழிகேட்டிலேயே விட்டுவிடுவது என்பது நம்மைப் படைத்த இறைவனின் நாட்டம் என்பதை நன்றாக உணர்ந்துக் கொள்ளவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed