மனிதப் படைப்பின் துவக்கம்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட விதம்:

அல்லாஹ் தனது கையால் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்த பிறகு தன்னுடைய ஆன்மாவை ஆதமின் மீது ஊதி, மலக்குமார்களை ஆதமுக்கு ஸஜ்தா செய்யுமாறு கூறினான். அல்லாஹ் ஆதமை மண்ணால் படைத்தான். இதை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

“அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.” (3: 59)

அல்லாஹ் ஆதமை படைத்து தன்னுடைய படைப்பை முழுமையாக்கி, மலக்குகளை ஆதமுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளை இட்டபோது, இப்லீஸை தவிர்த்து அனைவருமே ஸஜ்தா செய்தனர். இப்லிஸ் தன்னுடைய ஆணவத்தின் காரணமாக ஆதமுக்கு ஸஜ்தா செய்ய மறுத்துவிட்டான்.  இதை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்

“(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்: “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்); அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள். இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.” (38: 71-74)

ஆதம் (அலை) அவர்கள் குறித்து இறைவன் மலக்குளிடம் உரையாடியது!

பிறகு அல்லாஹ் மலக்குகளிடம், நான் ஆதமை மண்ணுலகத்துக்கு அனுப்பி அவர்களுடைய சந்ததிகளை அதிகரிக்கச் செய்வேன் என்று கூறினான். இதை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

“(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.” (2: 30)

அல்லாஹ் ஆதமுக்கு அணைத்து பெயர்களையும் கற்றுக்கொடுத்தான்.

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி,

“நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது,

“நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.” (2:31-33)

இப்லிஸின் ஆணவமும் இறைவனின் சாபமும்!

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (2:34)

“நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்: “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);

அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள். இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.

“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.

“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்

(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான். “இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).” (38: 71-78)

“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு – நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.” (7:13)

இப்லீஸ் இறைவனிடம் கால அவகாசம் வேண்டுவதும் சபதம் இடுவதும்!!

இப்லீஸ் தன்னுடைய நிலையை உணர்ந்தவுடன், இறைவனிடத்திலே மறுமை நாள் வரை அவகாசம் கேட்டான்.

“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.

“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.

“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).” (38: 79-81)

கியாம நாள் வரை ஷைத்தானுக்கு அல்லாஹ் அவகாசம் அளித்ததும் ஆதமையும் அவரின் சந்ததிகளையும் வழிகெடுப்பேன் என்றும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதையும் வழிகேடுகளையும் ஆதமின் சந்ததியினர்களுக்கு அழகாக்கி அவர்களை வழிகெடுக்கப் போவதாக அல்லாஹ்விடம் சபதம் செய்கின்றான். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

“அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான். “(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).

(அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான். “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)” (38: 82-85)

மற்றொரு வசனத்தில்,

“(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால்,

(ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;

ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்.

அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.” (7:16-18)

மனிதர்கள் அனைவரும் ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களின் சந்ததியினர்களே!

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்தும் பின்னர் ஹவ்வா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கிலிருந்தும் படைத்தான். பின்னர், அவ்விருவரின் சந்ததியினர்களாக ஆனேக ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் படைத்தான். இதை பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்:

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்,

அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;

பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;

ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.” (4: 1)

ஆதம் (அலை) அவர்களுக்கு ஷைத்தானைப் பற்றிய இறைவனின் எச்சரிக்கையும் ஏற்பட்ட சோதனையும்!!

ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பிறகு அல்லாஹ் சோதனை செய்வதற்காக ஆதமையும் அவருடைய மனைவியையும் சுவர்க்கத்தில் வசிக்கச்செய்தான். ஒரே ஒரு மரத்தைத்தவிர, சொர்க்கத்தில் உள்ள மற்ற அனைத்து மரத்தின் கனியை புசிப்பதற்கு கட்டளை இட்டான்.

முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை. “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.

அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். “நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். “இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).” (20:115-119)

சைத்தான், ஆதமையும் அவருடைய மனைவியையும் தூண்டிவிட்டு தடுக்கப்பட்ட மரத்தில் இருந்து சாப்பிட வைத்துவிட்டான். ஆதமும் அவருடைய மனைவியும், அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறந்து சைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி, இறைவனுக்கு மாறு செய்து அந்த மரத்திலிருந்து சாப்பிட்டுவிட்டனர்.

“ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி:

“ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழிபிசகி விட்டார்.”  (20: 120-121)

மற்றொரு வசனத்தில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்:

“(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:)

“ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).

எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி,

“அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.

“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.” (7:19-21)

“இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் –

அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்;

(அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு:

“உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்”. (7:22)

ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதலும் அல்லாஹ் அவர்களை மன்னிப்பதும்!

அவர்கள் இருவரும் அந்த மரத்திலிருந்து சாப்பிட்டதற்காக வருந்தி பின்வருமாறு கூறினார்கள்;

“அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.” (7:23)

மனோயிச்சை, ஆசையின் காரணமாக அவர்கள் தவறு செய்தார்களே தவிர ஆணவத்தின் காரணமாக அல்ல. ஆகையால் இறைவன் அவர்களின் மன்னிப்புக்கு உதவிசெய்து அதை ஏற்றுக்கொண்டான்.

“பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.”  (2:37)

இவ்வாறே இறைவன் ஆதம், அவர்களின் சந்ததியினர் மற்றும் யாரெல்லாம் தவறு செய்து மன்னிப்பு கேட்கிறார்களோ அதை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.

“அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை – பாவ மன்னிப்புக் கோறுதலை – ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (42:25)

மண்ணுலகிற்கு அனுப்பப்படுதல்!

பிறகு ஆதம், அவரின் மனைவி மற்றும் இப்லீஸ் அனைவரையும் இந்த மண்ணுலகுக்கு  அனுப்பி, அவர்களுக்கு வஹியையும், தூதர்களையும் அனுப்பினான். இவ்வாறே யாரெல்லாம் இதை நம்புகிறார்களோ அவர்கள் சொர்க்கத்துக்கும் இதை மறுக்கிறவர்கள் நரகத்திலும் நுழைவார்கள்.

“(பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது,

யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.” (2:38-39)

அவர்கள் அனைவரையும் பூமிக்கு இறக்கிய பிறகு,

 • இறை நம்பிக்கை மற்றும் இறை நிராகரிப்புக்கிடையே;
 • சத்தியம் மற்றும் அசத்தியத்திற்கிடையே;
 • நல்லது மற்றும் கெட்டதற்கிடையே

பகைமையும், குரோதமும் மோதல்களும் ஆரம்பமாயின!. மேலும் இந்த மோதல்கள் கியாம நாள்வரையிலும் நீடிக்கும்.

“(அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.” (7:24)

இறைவனின் பிரம்மிக்க வைக்கும் மனிதப் படைப்பு!

அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்.

 • ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்  தந்தையின்றி படைத்தான்.
 • ஹவ்வாவை (அலை) அவர்களை தாயில்லாமல் தந்தையை வைத்து மட்டும் படைத்தான்.
 • ஈசா நபியை தந்தையின்றி தாயை வைத்து மட்டும் படைத்தான்.
 • தாய் தந்தையை வைத்து நம்மை படைத்தான்.
 • ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அவர்களின் சந்ததிகளை விந்திலிருந்து படைத்தான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

 • “அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும்,
 • அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
 • பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
 • பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் –
 • இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்;
 • (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.” (32:7-9)

மணிதனை கருவில் உருவாக்கி, அதிலிருந்து ஒவ்வொரு நிலையாக மாற்றி வியக்கத்தக்க வகையில் படைக்கிறான்.

 • “நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
 • பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
 • பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்;
 • பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்;
 • பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்;
 • பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்;
 • பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்.
 • (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்” (23:12-14)

ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ படைப்பது இறைவனின் விருப்பம்!

அல்லாஹ் ஒருவனே தான் நினைத்தவாறு படைக்கிறான்.  கருவறையில் உள்ளவற்றையும், அதனின் வாழ்வாதாரங்களையும் மற்றும் வாமும் காலத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்.

 • “அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்;
 • தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்;
 • மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
 • அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்;
 • அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் –
 • நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.” (42:49-50)

மனிதன் பிறப்பதற்கு முன்னரே அவனின் விதி தீர்மானிக்கப்படுதல்!

முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்:

 • ‘அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர்,
 • ‘யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது ‘அலக்’ (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது’ என்று கூறிவருவார்.
 • அல்லாஹ் அதை உருவாக்க நாடினால்,
 • அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான்.
 • மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன’

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.  (புகாரி 318)

வானம் மற்றும் பூமியில் உள்ளவைகள் மனிதர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது!!

அல்லாஹ் ஆதமுடைய மக்களை கண்ணியப்படுத்தி அவர்களின் நலனுக்காக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் படைத்து வைத்துள்ளான்.

“நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.” (31:20)

மனிதனின் ஓரிரைக் கொள்கையும் வழிதவறுதலும்!

அல்லாஹ் மனிதனை படைத்து எப்படியாவது வாழ்ந்துகொள் என்று விட்டுவிடவில்லை.  மாறாக அவர்களின் நேர்வழிக்காக வேதங்களையும் தூதர்களையும் அனுப்பி வைத்தான். இயற்கையிலே இறைவன் மனிதனை ஓரிறைக்கொள்கையை பின்பற்றுமாறு படைத்துள்ளான். எப்போதெல்லாம் அவர்கள் அதிலிருந்து விலகுகிறார்களோ, அப்போது அவர்களுக்கு தூதர்களை அனுப்பி நேர்வழிப்படுத்துகிறான். அதிலே முதலாவதாக ஆதம் நபியும் கடைசியாக முஹம்மது நபி ( ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டார்கள்.

“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.” (2:213)

இறத்தூதர்கள் அனுப்பட்டதன் நோக்கம்!

அனைத்து தூதர்களும் மக்களை உண்மையின் பக்கம் அழைத்து, இறைவன் ஒருவனையே வணங்குமாறு அழைத்தார்கள்.

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.” (16:36)

அனைத்து தூதர்களும் நபிமார்களும் அனுப்பப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் தான்.

“நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.” (3:19)

இறுதியாக அனுப்பப்பட்ட தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்:

“முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (33:40)

“(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (7:158)

இறுதியாக இறக்கப்பட்ட வேதம்!!

மனிதர்களுக்கு நேர்வழிகாட்ட முன்னால் உள்ள வேதங்களை மெய்ப்பிக்கும் வகையில் கடைசியாக அருளப்பட்ட வேதம் திரு குர்ஆன் ஆகும்.

“அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).” (14:1)

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!

இறைவன் குர்ஆனை அனைவரும் நம்பக்கூடிய கடைசி வேதமாக்கி, முன்னால் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களையும்  ரத்து செய்து விட்டான்.  இஸ்லாத்தையும், தூதர்களையும் ஏற்றுக்கொண்டு  குர்ஆனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களின் செயல்கள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

“இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.” (3:85)

சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்ற இறைக் கட்டளை!

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கொண்டு வரப்பட்ட இஸ்லாம் மார்க்கம், அவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களின் தூதுத்துவத்தையும், அடிப்படை கொள்கைகளையும் உறுதிசெய்கிறது.

 • “நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்:
 • “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே –
 • இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது –
 • தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.” (42:13)

 

Hits: 1109

மற்றவர்களுக்கு அனுப்ப...

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *