இவ்வுலக வாழ்க்கையின் யதார்த்த நிலை

இவ்வுலக வாழ்வின் உண்மை நிலை!

“அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீர வேண்டும்! இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப் பொருளேயன்றி வேறில்லை!

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 21:35)

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச்
சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல்-குர்ஆன் 3:185)

இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்!

“இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ
பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்” (அல்-குர்ஆன் 10:24)

இறைவன் தான் நாடிவர்களை செல்வந்தர்களாக்குகிறான்! மேலும் தான் நாடியவர்களுக்கு அளவோடு கொடுக்கிறான்!

“அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை” (அல்-குர்ஆன் 13:26)

சிலருக்கு இறைவன் சோதிப்பதற்காக கொடுத்திருக்கின்ற உலக வாழ்வின் இன்பங்களை அடைய ஆசைப்படாதீர்கள்!

“ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம். இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்” (அல்-குர்ஆன் 20:130-132)

நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது!

“நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்” (அல்-குர்ஆன் 2:212)

நிராகரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட செல்வங்கள் அவர்களுக்கு மரணம் வரும் வரையில் இவ்வுலகில் கிடைத்துக்கொண்டே இருக்கும்! மரணத்தருவாயிலோ அவர்கள் மிகக் கைசேதப்படுவார்கள்!

“எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக – இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 7:37)

நிராகரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகப்படியான செல்வங்களைக் கண்டு ஆசைப்படாதீர்கள்!

“அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற
நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்” (அல்-குர்ஆன் 9:55)

“நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்” (அல்-குர்ஆன் 43:33-35)

“உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்” (அல்-குர்ஆன் 10:70)

நிராகரிப்பாளர்களின் உல்லாச நகர வாழ்க்கையைப் பார்த்து அதில் மயங்கிவிடாதீர்கள்!

“காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம். (அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்” (அல்-குர்ஆன் 3:196-197)

இவ்வுலக இன்பங்களைக் கண்டு மயங்கி யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்! அவர்கள் என்ன தான் நஷ்ட ஈடு கொடுத்தாலும் அவைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது! “(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” (அல்-குர்ஆன் 6:70)

அவகாசம் அளிக்கப்படாத மரணவேளையை அஞ்சிக் கொள்ளுங்கள்!

“நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும். அப்பொழுது அவர்கள்: ‘எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?’ என்று கேட்பார்கள். நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்? நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும், பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்- அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது. இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை. ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) – நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை” (அல்-குர்ஆன் 26:201-209)

உலக வாழ்வின் அலங்காரங்களில் மயங்கிவிடாதீர்கள்!பொறுமையுடன் இறைவனை துதி செய்யுங்கள்!

“(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது” (அல்-குர்ஆன் 18:28)

இந்த மாய உலகில் நாம் தங்கி இருக்கப்போவது எவ்வளவு காலம்?

“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?’ என்று கேட்பான். ‘ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!’ என்று (இறைவன்) கூறுவான். ‘நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?’ (என்றும் இறைவன் கேட்பான்.) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!” (அல்-குர்ஆன் 23:110-116)

“அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை” (அல்-குர்ஆன் 10:45)

“நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்” (அல்-குர்ஆன் 79:46)

இவ்வுலக இன்பம் மிகவும் அற்பமானது! மறுமையின் இன்பங்களோ மிக்க மேலானது!

“(நபியே!) நீர் கூறுவீராக: ‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 4:77)

இவ்வுலக வாழ்வையே மேலானதாகக் கருதி, தன்னுடைய மனோ இச்சைகளையே பின்பற்றியவனுக்கு உதாரணம்!

“(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் – அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான். நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்” (அல்-குர்ஆன் 7:175-177)

இவ்வுலக இன்பங்களில் இன்புற்ற நிலையில் இறைவனை வணங்காதவர்கள் மறுமையிலும் இறைவனுக்கு ஸூஜூது செய்ய இயலாதிருப்பார்கள்!

“கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்)” (அல்-குர்ஆன் 68:42-43)

இவ்வுலக பலன்களை மட்டும் விரும்பினால் அது இங்கேயே கிடைத்துவிடும்! ஆனால் மறுமையில் ஒன்றும் இல்லை!

“மனிதர்களில் சிலர், ‘எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு’ என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. இன்னும் அவர்களில் சிலர், ‘ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!’ எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்” (அல்-குர்ஆன் 2:200-202)

“எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்” (அல்-குர்ஆன் 17:18-21)

“எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!” (அல்-குர்ஆன் 11:15-16)

இவ்வுலகில் நிலைத்திருப்போம் என்றென்னி செல்வத்தைச் சேர்க்கின்றீர்களா?

“குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில்
நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)” (அல்-குர்ஆன் 104:1-9)

“அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் – ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்” (அல்-குர்ஆன் 30:7)

இவ்வுலகில் இறைவனை மறந்து வாழ்ந்தவர்களின் மறுமை நிலை!

“அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். இன்னும், ‘நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றைய தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை’ என்று (அவர்களுக்குக்) கூறப்படும். நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 45:33-35)

இவ்வுலக வாழ்க்கையை மிகவும் விரும்பி, அதில் திருப்தியடைந்து இறைவசனங்களைப் புறக்கணித்தவர்களின் நிலை!

“நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ – அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்” (அல்-குர்ஆன் 10:7-8)

இவ்வுலகில் இறைவனை வணங்காமல், அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றாமல் சுகபோகமாக வாழ்ந்தவர்களின் மறுமை நிலை!

“அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், ‘உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், ‘ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்’ (என்று அவர்களுக்குக் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 46:20)

மறுமையின் வேதனையைக் கண்டு உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே தனக்குப் பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும் அந்நாளை அஞ்சிக் கொள்ளுங்கள்!

“(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் – (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது” (அல்-குர்ஆன் 10:54)

மக்கள் செல்வங்களிலும் பொருட்செல்வங்களிலும் மூழ்கித் திளைத்து மறுமையின் நற்பேறுகளை இழந்து விடாதீர்கள்!

“(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள்தான் நஷ்டவாளிகள்” (அல்-குர்ஆன் 9:69)

மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தவனின் கதி!

“எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ-இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்” (அல்-குர்ஆன் 79:34-39)

நற்கருமங்களைச் செய்பவர்களுக்கு இம்மை மறுமையில் கிடைக்கும் நற்பேறுகள்!

“ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும்
(மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 16:97)

“பயபக்தியுள்ளவர்களிடம், ‘உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?’ என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ‘நன்மையையே (அருளினான்)’ என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!” (அல்-குர்ஆன் 16:30)

அல்லாஹ் கொடுத்த செல்வத்திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உனக்கு விதித்திருப்பதையும் மறந்து விடாதே!

‘மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை’ (என்றும் கூறினார்கள்)” (அல்-குர்ஆன் 28:77)

வீண் விளையாட்டாகிய இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கிவிட வேண்டாம்!

“அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும் பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?” (அல்-குர்ஆன் 6:31-32)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed