சபர் மாதமும் மூட நம்பிக்கைகளும்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்: “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது. ‘ஸஃபர்’ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது’ என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே!

அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ஆதாரம்: புகாரி.

மூடப்பழக்க வழக்கங்களும் அறியாமையும் நிரம்பி வழிந்து ஜாஹிலிய்யாக் காலமக்களிடம் சபர் மாதம் என்பது பீடை நிறைந்த மாதம் என்றொரு தவறான நம்பிக்கை இருந்தது. ஆனால் மூடப்பழக்க வழக்கங்களை முற்றாக மறுக்கின்ற விதத்தில் நபி (ஸல்) அவர்களுடைய மேற்கண்ட நபிமொழியில் ‘சபர் மாதம் என்பது பீடை மாதமல்ல’ என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து அக்கால மக்களிடம் காணப்பட்ட ‘சகுனம் பார்ப்பது’ என்ற மூடப்பழக்க வழக்கங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தாற் போல் அவற்றை மறுக்கிறது.

அல்லாஹ்வை மட்டுமே ஏக இறைவனாக ஏற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், ‘நடப்பவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன’ என்ற அல்லாஹ்வின் முன்னேற்பாட்டை உறுதியாக நம்ப வேண்டியது அவசியமாகின்றது.  ஏனென்றால் இது அவனுடைய ஈமான் சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.

அல்லாஹ் ஒருவனுக்கு நன்மையையோ அல்லது தீமையையோ நாடிவிட்டால் அதை விட்டும் தடுப்பவர் இந்த பிரபஞ்சத்திலேயே எவரும் இல்லை என்பதை ஒருவர் உறுதியாக நம்பும் வரை அவர் உண்மையான ஈமானுடையவராக மாட்டார்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.” (10:107)

மூடநம்பிக்கைகளை முற்றாக ஒழக்கவந்த மார்க்கத்திலேயே முஸ்லிம்களாக இருக்கும் நம்மிடம் நபி (ஸல்) அவர்களால் ஒழித்துக்கட்டப்பட்ட இத்தகைய நம்பிக்கைகள் இன்னமும் இருக்கிறதென்றால் இதை விட அறியாமை வேறென்ன இருக்கமுடியும்?

மாற்று மதத்தவர்களும் வெட்கித் தலைகுணியும் நிலைக்கு நம்மவர்களின் செயல்கள் இந்த மாதத்தில் இருப்பதோடல்லாமல் மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய தப்பெண்ணம் கொள்வதற்கும் இவர்களுடைய மூடநம்பிக்கைகள் வழிவகுக்கிறது.  இதனால் முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகின்ற சபர் மாத மூட நம்பிக்கைகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிப்பதால் இத்தகைய மூட நம்பிக்கையுடையவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை அதனின்றும் விலக வைக்கவேண்டியது நமது பொறுப்பாகின்றது.

முஸ்லிம்களிடம் காணப்படும் சபர் மாத மூடநம்பிக்கைகளில் / பித்அத்களில் சில:

  1. சபர் மாதத்தை பீடை மாதமாக கருதி அதில் திருமணம், வீட்டு விஷேசங்கள் போன்ற நல்ல காரியங்களை செய்வதில்லை
  2. சபர் மாதத்தின் இறுதி புதனை ஒடுக்கத்து புதன் என்று அழைத்து அந்நாளிலே கடற்கரை, ஆற்றங்கரை சென்று அங்கு தங்களிடம் இருக்கும் பீடைகளைத் தொலைப்பதற்காக நீரிலே முழ்கி குளிக்கிறார்கள்.
  3. இன்னும் சிலர் புள்வெளிக்குச் சென்று புற்களை மிதித்து அதன் மூலம் சபர் மாத பீடையைத் தொலைக்கிறார்கள்.
  4. வாழை இழை அல்லது மாவிலையில் ஒரு சில குர்ஆன் வசனங்களை எழுதி அவற்றைக் கரைத்துக் குடிப்பதால் பிடை தொலையும் என நம்பி அதன்படி செயல்படுகின்றனர்.
  5. ஒரு சில இடங்களில் கொழுக்கட்டைகளை பிடித்து அவற்றை பீடை பிடித்தவராகக் கருதப்படுபவரின் தலையிலே கொட்டி அதன் மூலம் பீடையைக் கழிப்பார்கள்.

இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப் படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் சபர் மாதத்துடன் ஷவ்வால் மாதத்தையும் பீடையாகக் கருதப்பட்டது.  ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்

எனவே ஈமானின் ஒரு அங்கமாகிய ‘நல்லது கெட்டது அனைத்தும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றது’ என்ற விதியின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் காரணமாகத்தான் நோய் நொடிகள் மற்றும் பீடைகள் உண்டாகின்றது என்று நம்பிக்கை கொள்ளாமல் நமது காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு நோய் மற்றும் சங்கடங்கள் என்பது சபர் மாதத்தில் மட்டும் தான் வருவதென்பது கிடையாது.  அனைத்து மாதங்களிலும் வரும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed