ஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிரச்சாரம்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
மூஸா (அலை) அவர்கள் இறைவனின் அனுமதி கொண்டு நிகழ்த்திக் காட்டி பேரற்பதமான அவர்களுடைய கைத்தடி பாம்பாக மாறி அனைத்து சூனியக்காரர்களின் பொய்பாம்புகளை விழுங்கிய நிகழ்வுக்குப் பின்னர் சூனியக்காரர்கள் அனைவரும் மூஸா (அலை) அவர்கள் மூலம் நிகழ்ததது ‘சூனியம் அல்ல’ என்பதை உணர்ந்து சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாக மாறினர். அதனால் கடும் சினமுற்ற ஃபிர்அவ்ன் அவர்களை கடுமையான முறையில் தண்டித்தான்.
ஆயினும் மூஸா (அலை) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த அற்புதங்களுக்குப் பின்னர் ஃபிர்அவ்ன், மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் மூலம் தம்முடைய அரசாட்சிக்கு பேராபத்து ஏற்படும் என அஞ்சினான். அப்போது அவன் அவசரமாக தன்னுடைய அரசவையைக் கூட்டி மூஸா (அலை) அவர்களைக் கொன்றுவிடலாமென்று ஆலோசனைக் கூறினான். அப்போது அவன் அரசவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அதை ஆமோதிக்க, அதுவரை ஈமானை தம் உள்ளத்தில் அறைத்து வைத்திருந்த ஃபிர்அவ்னின் உறவினர்களுள் ஒருவர் மூஸா (அலை) அவர்களைக் கெலை செய்ய வேண்டிய அந்த சதி ஆலோசனையை மறுக்கும் முகமாக துனிச்சலுடன் அவர்களுக்கு அறிவுரை கூறலானார்.
திருமறையில் அந்த நம்பிக்கைக் கொண்டவரின் பெயர் கூறப்படவில்லை! எனினும், அவர் கூறியதாக அல்லாஹ் கூறியிருக்கும் வசனங்களில் பொதிந்திருக்கும் அறிவுரைகளை ஒருவர் தம் வாழ்நாளில் பின்பற்றி வாழ்ந்தால் அவர் இறைவனின் அனுமதி கொண்டு நேர்வழியை அடைவார்.
அவருடைய அந்த அழகிய ஏகத்துவப் பிரச்சாரத்தை அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே பின்வருமாறு கூறுகின்றான்.
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
“மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்- ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ:
“(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்”
என்று கூறினர். ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்:
“இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்”
என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை. மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்:
“மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்”
என்று. மூஸா கூறினார்:
“கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்:
“என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா?
மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார்.
எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே!
நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”
“என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;)
அதற்கு:
“நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை”
என ஃபிர்அவ்ன் கூறினான்.
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்:
“என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்.”
“நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்);
ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
“அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது);
அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
“மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்;
இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
“(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்;
இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:),
“ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக – நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு! “(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;”
என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்:
“என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ – அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்;
எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
“என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பினால் அழைக்கிறீர்கள்.
“நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள்.
ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம்.
இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்;
மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் – நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான்.
மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
(அல்-குர்ஆன் 40:23-45)