சுன்னத் ஜமாஅத் கொள்கை வேறு! சூஃபித்துவக் கொள்கை வேறு! – இரண்டும் ஒன்றல்ல!

நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு உதுமான் (ரலி) மற்றும் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அவர்களுக்குப் பின்னரும் தொடர்ந்தன! உதுமான் (ரலி) அவர்களின் கொலைக்காகப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறம்!

மறுபுறமோ அலி (ரலி) அவர்களை ஆதரித்து அரசியல் பேசியவர்கள் காலப்போக்கில் அலி (ரலி) அவர்களுக்கு விசேச அந்தஸ்தத்துகளை வழங்கி அவர்களை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர்!

அலி (ரலி) அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் உயர்வாக கருதி பல பொய்களையும் புரட்டுகளையும் ஹதீஸ்கள் என்ற பெயரில் அவிழ்த்து விட்டனர்! இவ்வாறு இவர்கள் இட்டுகட்டி அவிழ்த்துவிட்ட பொய்யான ஹதீஸ்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கின்றன என்கின்றனர் ஹதீஸ்கலை ஆய்வாளர்கள்!

இறைவன் அருளால் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்த இமாம்களும், ஹதீஸ் கலை மேதைகளும் அவற்றில் மிகப் பெரும்பாண்மையானவற்றை வடிகட்டி அவைகள் இட்டுக்கட்டப்பட்வைகள் என்று இனம் காட்டிவிட்டனர்! ஆயினும் அவ்வப்போது இன்றளவும் ஷிஆக்கள் அஹ்லுல் பைத் சம்பந்தப்பட்ட அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பரப்பிவிட, அதை சூஃபித்துவவாதிகள் நம்மவர்களிடையே வாட்சப் குழுமங்களில் எவ்வித அறிவிப்பாளர் பெயரோ அவை இடம்பெற்ற நூலின் பெயரோ இன்றி பரப்புவதைப் பார்க்கலாம்!

சரி இப்போது நமது தலைப்பின் விசயத்திற்கு வருவோம்!

அலி (ரலி) அவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் பொய்யாக புனைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்களின் நடுவில் அரசியல் குழுப்பங்கள் நிறைந்திருந்த காலக்கட்டத்தில் அதில் எதிலும் தலையிடாத உண்மை முஃமின்கள் அல்-குர்ஆனின் வழிகாட்டுதலிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தமது வாழ்வை அமைத்துக் கொண்டனர்!

அலி (ரலி) அவர்களைப் பின்பற்றியவர்கள் தங்களை ஷிஆ அன் அலி -அலியின் கட்சியினர் என அழைத்துக் கொள்ள (இதுவே பின்னர் ஷிஆ என்ற தனி மதமானது), அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட முஸ்லிம்கள் தங்களை அஹ்லெ சுன்னாஹ் வல் ஜமாஅஹ் – சுன்னாவைச் சேர்ந்த கூட்டத்தினர் என அழைத்துக் கொள்ளலாயினர். இன்றளவும் குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் முஸ்லிம்கள் அந்தப் பெயரிலே உலகளவிலே அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்!

அலியின் கட்சியினடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தங்களை அஹ்லெ சுன்னாஹ் என்று அழைத்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் வழிகேட்டுக் கொள்கையான சூஃபித்துவம் இஸ்லாத்தில் ஊடுருவியிருக்கவில்லை! எனவே அப்போது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே அவ்வாறு வேறுபாடு தோன்றியது! என்பதை நினைவில் வைக்க வேண்டும்!

பின்னர் காலப்போக்கில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிரேக்க மற்றும் இந்திய தத்துவங்களின் மற்றும் கடவுள் கொள்கைகளின் சித்தாந்தங்கள் காப்பியடிக்கப்பட்டு அவைகள் சூஃபித்துவம் என்ற பெயரில் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டன!

ஆரம்பகால சூஃபிகளைப் பொருத்தவரையில் தற்போதுள்ள சூஃபித்துவ வழிகேடர்களைப் போலில்லாமல் உலக வாழ்வின் இன்பங்களை முற்றிலும் துறந்து சன்னியாச வாழ்வை மேற்கொள்வதும் அதிகப்படியான இபாதத்துகளில் தன்னை இணைத்துக் கொள்வதையுமேமே சூஃபித்துவம் என்று நம்பியிருந்தனர்! ஆயினும் இது கூட இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது இல்லை என்பது வேறு விசயம்!

ஆனால் பிற்காலத்தில் தோன்றிய இப்னு அரபி, மன்ஸூர் ஹல்லாஜி, ஜலாலுத்தீன் ரூமி போன்றவர்கள் தான் எல்லாமே அல்லாஹ் தான் என்ற அத்வைத சித்தாந்தத்தையும் நானே கடவுள் என்ற கேடுகெட்ட சித்தாந்தத்தையும் இஸ்லாத்தினுள் நுழைத்து அவர்கள் வழிகெட்ட முர்ததுதகளாக ஆனதோடல்லாமல் இலட்சக்கணக்கணக்கான முஸ்லிம்கள் வழிகேட்டில் செல்லவும் காரணமாகவும் இருந்தனர்.

அவர்களோடு மாமேதை என்றறியப்பட்ட இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்த வழிகேட்டு சூஃபித்துவ சிந்தனையின்பால் ஈர்க்கபட்டு அதிலே உழன்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதிய இஹ்யா உலூமித்தீன் என்ற வழிகேட்டு நூலும் பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வழிதவற காரணமாக இருந்தது!

ஆயினும் ஆரம்பக் காலம் முதற்கொண்டு தற்போது வரையிலும் அஹ்லெ சுன்னாஹ் வல்ஜமாஅஹ் கொள்கையில் பிடிப்புள்ள அல்-குர்ஆன், சுன்னாவை பின்பற்றும் உலகளவிலுள்ள உண்மையான முஸ்லிம்கள் இன்றளவும் வழிகேட்டுக் கொள்கையான சூஃபித்துவத்தை தங்களது சுன்னத் ஜமாஅத் கொள்கை என ஒருபோதும் ஏற்றுக் கொள்வதேயில்லை! அவர்களை சூஃபிகள் என்றும் அவர்களின் கொள்கையை சூஃபித்துவக் கொள்கை என்றே வேறுபடுத்தி அழைக்கின்றனர்!

ஆரம்பக் காலத்தில் இருந்த சூஃபியிஸம் என்றால் துறவறம் பூணுதல் என்ற நிலை, இப்னு அரபி, மன்ஸூர் ஹல்லாஜி, மௌலானா ரூமி போன்றவர்களால் முற்றிலும் மாறி தற்போது சூஃபித்துவம் என்றாலே எல்லாம் அல்லாஹ் எனும் பனாஃ நிலையை அடைவதே என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்!

இதுவே இவர்கள் எந்த அளவிற்கு வழிகேட்டின் உச்சத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கு போதுமான சான்றாகும்!

இந்த சூஃபித்துவக் கொள்கைக்கும் முஸ்லிம்களில் பெரும்பாண்மையாக இருக்கக்கூடிய சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை!

நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாண்மையான சுன்னத் ஜமாஅத்தினருக்கு இந்த சூஃபியிஸம் என்றாலோ அதன் கொள்கைகள் என்ன கூறுகின்றது? என்பதோ முற்றிலும் தெரியாது!

அளவில் சொற்பமாக உள்ளவர்களாகிய இந்த சூஃபிகள், தாங்கள் சூஃபித்துவம் என்ற பெயரில் தங்களின் கொள்கைகளை மக்களிடம் தினித்தால் அவைகள் எடுபடாது என்பதை அறிந்துக் கொண்டதன் காரணத்தால் தான் இவர்கள் எப்போதுமே தங்களை சுன்னத் ஜமாஅத் என்றே அழைத்துக் கொள்வார்கள்!

ஆனால் உண்மையான சுன்னத் ஜமாஅத்தினர் யார் எனில், அல்லாஹ் தான் இப்பிரபஞ்சங்கள் அனைத்தையும் மற்றும் அதிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் என்றும் படைத்தவனான அல்லாஹ் வேறு! அவனது படைப்பினங்கள் என்பவை வேறு! என்பதில் எவ்வித குளறுபடியும் இன்றி படைத்தவனான அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான இறைவன் என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவனது அடிமை என்றும் நம்பிக்கை கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஆவர்!!

ஆயினும் இவர்களில் பலர் நான்கு இமாம்களின் பெயரால் உருவாக்கப்பட்ட மத்ஹபு சட்டங்களை தங்களின் பிக்ஹ் சட்டங்களாக ஏற்றுக் கொண்டிருப்பவர்! இந்த பிக்ஹ் விசயத்தில் ஏகத்துவவாதிகளுக்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்குமிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது! அது தனிவிசயம்! இந்த தலைப்பிற்கு அப்பாற்பட்டது!

இப்போது நாம் இங்கு குறிப்பிடுவது தமிழக சுன்னத் ஜமாஅத்தினருக்கும் சூஃபி மதத்தினருக்கும் இருக்கும் அடிப்படைக் கொள்கை வேறுபாட்டைப் பற்றித் தான்! 

எல்லாமே அல்லாஹ் என்றும் அல்லாஹ்வே அவனது தூதராக அவதரித்திருக்கின்றான் என்ற அவதாரக் கொள்கையுடையவரும் தங்களை சுன்னத் ஜமாஅத் என்று எப்படிக் கூறிக்கொள்ள இயலும்?

சூஃபிகளின் இந்த வழிக்கெட்ட கொள்கை தமிழக சுன்னத் ஜமாஅத்தின் அடிப்டைக் கொள்கைக்கே முற்றிலும் முரணாகவல்லவா இருக்கிறது?

அதனால் தான் நாம் கூறுகிறோம்:

சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் வழிகேடான சூஃபித்துவ போதனைகளைப் பற்றி நன்கறிந்து அவர்களை விட்டும் வெகு தூரவிலகி இருந்து தங்களின் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்!

Hits: 98

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *