மறுமையின் முதல் நிலை மண்ணறை

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகள் பற்றி அறிந்து அதனிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும்.

மண்ணறை வேதனை குறித்து அல்-குர்ஆன்:

“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 40:46)

மார்க்க அறிஞர்களில் அநேகர் இந்த வசனம் மண்ணறை வேதனைக்குரிய ஆதாரமாகக் கருதுகின்றர்.

மண்ணறை வேதனை குறித்து நபி (ஸல்) அவர்கள்:

“மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” ஆதாரம் : திர்மிதி.

கப்றுகளில் கிடைக்கும் தண்டனைகள:

“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான்.

அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி);ஆதாரம் : புகாரி.

“நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களின் (கூக்) குரலைச் செவியுற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(இவர்கள்) இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. ஆனாலும், அது ஒரு (வகையில்) பெரிய
(பாவச்) செயல்தான். இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இன்னொருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை ‘இரண்டு துண்டாக’ அல்லது ‘இரண்டாகப்’ பிளந்து ஒரு துண்டை இவரின் மண்ணறையிலும் மற்றொரு துண்டை இவரின் மண்ணறையிலும் (ஊன்றி) வைத்தார்கள். அப்போது ‘இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி); ஆதாரம் : புகாரி.

மண்ணறையில் கொடுக்கப்படுகின்ற தண்டனைகள் குறித்து ஹதீஸ்களில் காண முடிகிறது. அவைகளில் சில:

  • இரும்பு போன்ற சுத்தியால் அடிக்கப்படுவது அல்லது விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பினையும் அளவுக்கு நெருக்கப்படுவது
  • மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது
  • நெருப்பிலான விரிப்பு விரிக்கப்படுவது
  • நரகிலிருந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது
  • அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள, அருவருப்பான மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது

இவ்வாறு பல விதங்களில் ஏற்படும்.

மரணித்தவன் இறை நிராகரிப்பாளனாகவோ அல்லது முனாஃபிக்காகவோ (நயவஞ்சகனாகவோ) இருந்தால் மண்ணறையின் வேதனை மறுமை நாளில் அவன் எழுப்படும் வரையில் இருக்கும். மறுமையிலோ அவர்களுக்கு இறைவன் திருமறையில் வாக்களித்திருக்கின்ற நிரந்தர நரக வேதனைகள் காத்திருக்கின்றது.

மரணித்தவன் பாவம் செய்த முஸ்லிமாக இருப்பானேயானால் அவன் செய்த பாவத்தின் அளவிற்கு பல்வேறு வேதனைகள் கொடுக்கப்படும். இறைவன் நாடினால் சில சமயம் வேதனை நிறுத்தப்படும்.

ஆனால் மரணித்தவன் ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு அவன் கட்டளைப்படி வாழ்தவனாக இருந்திருந்தால் அவனுடைய மண்ணறையில் அவனுக்கு அருள்பாலிக்கப்படும். அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிபாச்சப்படும். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சொர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனுடைய நற்செயல் அழகிய மனித வடிவில் உருவெடுத்து மண்ணறையில் அவனை மகிழ்விக்கும்.

கப்றுடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுதல்: –

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மாமத்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி);ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃக்ரமி, வல்மஃஸம். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபிந் நாரி, வ ஃபித்னத்திந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃம்னா, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். வபாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷரிக்கீ வல்மஃக்ரிப்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கடனிலிலிருந்தும் பாவத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நரகத்தின் வேதனை, நரகத்தின் சோதனை, மண்ணறையின் சோதனை, மண்ணறையின் வேதனை, செல்வத்தின் தீமை, வறுமையின் தீமை, (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி); ஆதாரம் : புகாரி.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed