அத்வைதம் போதிக்கும் தப்லீக் மௌலானாக்கள்

தலைப்பைப் பார்த்தவுடனே பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்! ஏன் ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஏகத்துவவாதிகளுக்கு கூட இந்த கட்டுரை அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கலாம்!

‘இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே’ ஸூபிகளின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது என்பதை நமது முந்தைய கட்டுரைகளின் மூலமாக அறிந்தோம்!

அதே சூபித்துவத்திலே வாழையடி வாழையாக வந்துதித்தவர்களே தப்லீக் ஜமாஅத்தின் பூர்வீக காலம் தொட்டு இன்று வரை பொறுப்பு வகிக்கும் தப்லீக்கின் முக்கியஸ்தர்கள்என்பதுதான் ஆச்சரியமிக்க உண்மை.இதனை ஜீரணிப்பது சற்று கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை!

இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் தப்லீக்கின் உயர் பொறுப்பில் இருக்கும் மௌலானாக்கள், பெரியார்கள் அனைவரிடத்திலும் இதே சூபித்துவக் கொள்கை இருந்தது – இன்றும் இருக்கின்றது!

ஆனால் மூன்று நாள், நாற்பது நாள் என்றெல்லாம் வக்துக் கொடுத்து வெளிக் கிளம்பிச் செல்லும் அப்பாவி மக்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரிவதில்லை. அது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதுமில்லை.

சூபித்துவவாதிகள் எப்படி தம்மிடம் வரும் முரீதீன்களுக்கு பக்தர்களுக்கு தம்மீது முழு நம்பிக்கை வரும்வரை தமது விசக்கருத்துக்கள் எதையும் வெளியிடுவதில்லையோ அவ்வாறே இவர்களும் சாதாரண ஆரம்ப நிலையிலுள்ள தப்லீக் பக்தர்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

தப்லீக் வழிதனிலே பல காலம் ஒருவர் பயிற்றுவிக்கப்பட்டதன் பின் ஒரு வருடம் இருவருடம் என்றெல்லாம் ஒருவர் டில்லி மர்க்கஸூக்கெல்லாம் சென்று வந்து தப்லீக்கின் மௌலானாக்கள், பெரியார்கள் மீது நீக்கமுடியாத ஒரு பிடிப்பு பற்று, அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டதன் பின்பே சூபித்துவக் கருத்துக்களைப் படிப்படியாக அவருக்குக் கற்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

குர் ஆன் ஹதீஸ் போதனைகள் எப்படியிருந்தாலும் தனக்கு தன் டில்லி பெரியார் – மௌலானா சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு அங்கு அவர்களுக்கு மூளைச் சலவை இடம் பெறும். சூபித்துவப் போதனைகள் வெளிரங்கத்தில் ஆத்மீக சிந்தனையின் பக்கம் அழைப்பது போல் — இவர்கள் தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கம் என்று பாமரர்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பம் வரும் போதே தம் சூபித்துவக் கருத்துக்களைப் புகுத்துகின்றனர்.

இனி தப்லீக் பெரியார்கள் ஒருவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் அத்வைத போதனைகளை எப்படி போதிக்கின்றனர் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

ஆதாரம்: 1:

ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள்..

‘அல்லாஹூத்தஆலாதான் உண்மையில் அனைத்து அழகினதும் ஊற்றாக இருக்கின்றான். உண்மையில் உலகில் இருக்கும் அழகு அனைத்தும் அவனது அழகேயன்றி வேறில்லை. (தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 300)

அதாவது உலகிலுள்ள ‘அழகானவை அனைத்தும் அவனது பிரதிபலிப்பே’ என்பதே இதன் அர்த்தம்.

தனது மற்றுமொரு நூலில்…

‘ஒரு அடியான் தன் எஜமானான அல்லாஹ்வின் கட்டளை, வரம்புகளை மீறுவதன் ரகசியம் யாதெனில் அல்லாஹ் அடியார்களைத் தனது வடிவத்திலேயே படைத்துள்ளான். எனவே *அல்லாஹ்வுக்கு ஜலாலியத்தான (அதிகாரமிக்க) பண்புகள் இருப்பதால் அவனது அடியார்களிடத்திலும் அந்தப் பண்பின் வெளிப்பாடுகள் தோன்றுகின்றன! அதனால்தான் அவனிடமிருந்து பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன. (உம்முல் அம்ராழ் ப: 7)

‘அல்லாஹ் மனிதனின் உருவத்தை உடையவன்’ என்று சொல்வது மட்டுமின்றி அவன் ஏன் பாவம் புரிகின்றான்? என்பதன் காரணத்தை விளக்கி பாவம் புரிவதை நியாயப்படுத்தும் விதத்தைப் பாருங்கள்! என்னே விளக்கம்?? அப்படியானால் பாவம் புரிந்தவனைத் தண்டிப்பதும் அர்த்தமற்றது தானே!

ஆதாரம்: 2

ஜக்கரிய்யா மௌலானா தனது குருநாதர் ஷேக் இம்தாதுல்லாஹ் அவர்கள் நவின்றதாகக் கூறுகின்றார்கள்..

‘ஷேக் அவர்கள் ஹக்கீக்கத் (யதார்த்தத்தைக்) காணக் கூடியவர்களாக இருந்தார்கள். (அதாவது அல்லாஹ்வை நேரடியாகக் காண்பவர்கள் என்பது அர்த்தம்) அவர்கள் சொல்வார்கள் ‘ஒரு ஆண்; பெண்ணின் தோற்றத்தில் இருக்கின்றான். பெண்ணோ அல்லாஹ்வின் தோற்றத்தில் இருக்கின்றாள்.

ஆண்பெண்ணுக்குக் கண்ணாடியைப் போன்றவன். பெண் அல்லாஹ்வுக்குக் கண்ணாடியைப் போன்றவள். எனவே பெண்ணும் அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி தானே! அதனால் தான் அவளிலே அல்லாஹ்வின் அழகு வெளிப்பட்டுள்ளது. அதை அவசியம் நாம் காண வேண்டும். (ஸமாயில் இம்தாதிய்யா ப:70)

ஆதாரம்: 3

மேலும் ஜக்கரிய்யா மொலானா கூறுகின்றார்கள்.

‘ஸூபித்துவத்தின்’ ஆரம்பமே ‘வஹ்தத்துல் வுஜூத்’ (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில் ‘இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும்! அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்! என்று கூறுகின்றார்கள். (திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95)

இப்போது புரிந்து விட்டதா? இவர்களது சுயரூபம்…

எல்லாமே அல்லாஹ்தான் என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருனம் இதுவே என்கின்றார்களே! அப்படியானால் இவர்கள் ‘எல்லாமே அல்லாஹ்வே’ எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது?

ஆதாரம்: 4

மற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்…

அல்லாஹூத்தஆலா குர்ஆனிலே ‘ஹூவல் லாஹிறு’ ‘அவனே வெளியானவன்’ என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள்! ‘ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான்!’

இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் ‘அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது’ என்பதை சிந்திப்பான். (ஸக்காலத்துல் குலூப் ப: 89)

மௌலானா அவர்களின் கொள்கை ‘எல்லாமே அல்லாஹ்தான்’ எனும் சூபிகளின் கொள்கைதான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?

அவர்கள் எல்லாம் இறைவனே எனும் கொள்கையில் இருந்தார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது?

ஆதாரம்: 5

சூபித்துவ பித்தரான ‘எல்லாமே அல்லாஹ்தான்’ எனும் கொள்கையின் ஆரம்பப்ப் பிரச்சாரகனாகிய மன்ஸூர் அல்ஹல்லாஜி என்பவனைப் பாராட்டிக் கூறிய கவிதையொன்றில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள். ….

‘மன்ஸூர் ஹல்லாஜியை (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) சிலுவையில் அறைந்ததற்குக் காரணம், ‘அவர் அல்லாஹ்வுடைய விடயத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்! நான் தான் அல்லாஹ் என்று சொன்னார்! அவரது இந்த வார்த்தை உண்மைதான்! எனினும் அதை அவர் அப்படிப் பகிரங்கப் படுத்தியிருக்கக் கூடாது! (வலிய் காமில் ப: 249)

‘நான் தான் அல்லாஹ்’ என அந்தக் கிறுக்கன் கூறியதையும் உண்மையெனக் கூறும் மௌலானாவை என்னவென்று கூறுவது? என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஆதாரம்: – 6

திக்ர் செய்யும் ஒழுங்குகள் பற்றி மௌலானா ஜக்கரிய்யா அவர்கள் சொல்லும் போது…

‘திக்ரின் போது – ‘அல்லாஹூ நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழ் – அல்லாஹ் வானங்கள், பூமியுடைய ஒளியாவான்’ எனும் வசனத்தை மனதில் முன்னிறுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றான்! அவனது ஒளி அண்ட சராசரங்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது! என்று எண்ணிக் கொண்டு அவனது ஒளியில் தானும் சங்கமித்து மூழ்கி விட்டதாக எண்ண வேண்டும். (ஸகாலதுல் குலூப் ப: 144)

இவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில் கலிமாவுக்குரிய அர்த்தத்தை விளங்குவதில் இவர்களும் சூபித்துவவாதிகளை ஒத்த அதே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கின்றனர்.

அதே அத்வைதக் கருத்துக்களைத் தமது புத்தகங்களில் பரவலாகக் கூறியிருப்பதிலிருந்தும், அன்றைய உலமாக்களால் வழிகேடர்கள் என்று பத்வா – தீர்ப்புக் கொடுக்கப்பட்ட சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து சூபியாக்கள், பெரியார்கள், ஞானவான்கள் என்று தமது நூல்களில் போற்றுவதிலிலிருந்தும் இவை தெளிவாகின்றன.

அன்றாடம் தப்லீக் சகோதரர்களால் தஃலீம் எனும் பெயரில் வாசிக்கப்படும் நூற்களான அமல்களின் சிறப்பு, ஸதகாவின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்ற நூல்களில் கூட இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் பரவலாகக் காணப்பபடுகின்றன. ஆனால் இவற்றை மொழிபெயர்த்த வல்லவர் தந்திரமாக இப்படியாக அத்வைதக் கருத்துக்களை பாமர மக்களுக்கு எழிதில் புரியாத வண்ணம் மிக்க சமயோசிதமாக மொழிபெயர்த்துள்ளார்.

ஆனால் இதுவரை தமிழில் பெயர்க்கப்படாத தப்லீக் பெரியார்களின் நூல்களில் இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் தாராளமாக பச்சை பச்சையாகச் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!

ஒருசிலர் ‘தப்லீக்கில் குறைபாடு இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். எதில்தான் குறைபாடு இல்லை. குறைகளை விட்டு விட்டு நிறைய நல்ல விடயங்கள் இருக்கின்றன அவற்றை எடுத்து நடப்போமே’ என்று நடுநிலைவாதம் பேசுகின்றனர்!

இவ்வாதம் அர்த்தமற்ற வாதமே. உலகிலுள்ள எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலே அவற்றில் சமூகத்துக்கு நன்மை தீமை இரண்டுமே இருக்கத்தான் செய்கின்றன. மது பானத்தில் கூட நன்மையும் இருப்பதாகவே அல்குர்ஆன் சொல்கின்றது.

‘நபியே நீங்கள் சொல்லுங்கள் அதிலே (சாராயத்தில்) அதிகம் தீங்கிருக்கின்றது, அத்துடன் அதில் மக்களுக்கு நன்மையுமிருக்கின்றது. அதனால் ஏற்படும் தீமை அதன் நன்மையை விட மிக அதிகமாகும்’ எனக் கூறுகின்றது. (ஸூரத்துல் பகரா 219).

எனவே நன்மை இருக்கின்றதென்பதால் ஒரு விடயத்தை நல்லதென நியாயப்படுத்த முடியாது. அதனால் ஏற்படும் விபரீதம் தீமை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும்.

அந்த வகையில் சூபிகளிடம் இருப்பதாகக் கூறிய இஸ்லாத்தைத் தகர்த்தெறியும் ஷிர்க்கான- இஸ்லாமிய அகீதாவைக் குழிதோண்டிப் புதைக்கும் குப்ரான விசயங்கள் அனைத்துமே இதன் ஸ்தாபகர்களான தப்லீக் மர்கஸ் மௌலானாக்களிடமும், டில்லிப் பெரியார்களிடமும் குடிகொண்டிருப்பதால் அந்தவழிகேடுகளை விட்டும் ஒரு முஸ்லிம் விலகியிருக்கவேண்டியது அவருடைய ஈமானைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மிக அவசியமானதாகும்!

நன்றி: சூபித்துவ தரீக்காக்கள் – அன்றும் இன்றும் என்ற நூலிலிருந்து…

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
3 thoughts on “அத்வைதம் போதிக்கும் தப்லீக் மௌலானாக்கள்”
  1. assalamu alaikom,

    the article about thableeq is very well , it will be useful to Islamic people of thmizh,

    A.BASHEER AHAMED,SIVAGANGAI

  2. அல்ஹம்துலில்லாஹ்

    தப்லீக் ஜமாஅத்தின் உண்மை முகத்தை கிழித்தெரிந்த உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed