சரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் சூஃபித்துவம்

அல்லாஹ்வை ஏக இறைவனாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் இறுதித் தூதராகவும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷரீஅத் சட்டங்கள் என்பது அவனது உயிர் மூச்சாகும்!

ஒரு முஸ்லிம் அவன் சாகுல் வரையில் ஷரீஅத் சட்டங்களின் அடிப்படையில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஏவல் விலக்கல்களை முறையாகப் பின்பற்றி வாழ்வது அவசியம்!

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை வேண்டுமென்றே மீறுபவனோ அல்லது அவற்றை உதாசீனப்படுத்துபவனோ ஒரு போதும் தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்ள சிறிதும் அருகதையற்றவன் ஆவான்!

இது சாதாரண பாமர முஸ்லிமும் அறிந்து வைத்திருக்கின்ற இஸ்லாத்தின் மிக மிக அடிப்படையான விசயமாகும்!

ஆனால் தங்களை இறைவனோடு நெருக்கமாகவுள்ள அல்லது இறைவனோடு ஒன்றிவிட்டதாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் சூஃபிகளுக்கோ ஷரீஅத் சட்டங்களெல்லாம் தேவையில்லை!!

அவர்கள் தங்களின் மனம் போனபோக்கில் இறைவனால் தடை செய்யப்பட்ட ஹரானமானவற்றையெல்லாம் கூட சர்வசாதாரணமாக செய்யலாம்! இறைவன் விதித்த எந்தவொரு கடமைகளையும் செய்யத் தேவையில்லை!!

ஆச்சரியமாக இருக்கிறதா? படியுங்கள் சூஃபிகளின் பார்வையில் ஷரீஅத் என்றால் என்னவென்பதை!

சூஃபிகளின் கருத்துப்படி, ‘ஆரம்ப நிலையிலுள்ள, உண்மை – யதார்த்தத்தை அறியாத பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆத்மீகப் பயிற்சி நெறிகளே தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்களாகும். இவற்றால் மனிதனுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை,

நெல்லை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீஅத் சட்டங்கள்.

உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹக்கீக்கத்.

ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியம்தான்! எனினும் காலப் போக்கில் கதிர் முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசிவிடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை – மார்க்க அனுஷ்டானங்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்’

என்பதே இவர்களின் கோட்பாடு.

‘ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசிவிடுவது அவசியம் போன்று ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை – மார்க்க அனுஷ்டானங்களை விட்டுவிட வேண்டும்’ என்பதே இவர்களது கோட்பாடு.

தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஜக்காத்தைக் கொடுத்து வாருங்கள்! என்று அல்-குர்ஆன் முழுவதிலும் பற்பல இடங்களில் இறைக் கட்டளைகள் நிறைந்திருக்க இந்த சூஃபிகளோ அந்த இறைக் கட்டளைகளையெல்லாம் உமியைத் தூக்கி வீசிவிடுவது போன்று விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி பிதற்றுகிறார்களே!

சுன்னத் ஜமாஅத்தினர்களின் போர்வையில் செய்குமார்கள் எனவும் பீர்கள் எனவும் போலிகளாக உலாவரும் இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ள எங்ஙனம் இயலும்?

சுன்னத் ஜமாஅத் என்பது வேறு! சூஃபியிஸம் என்பது வேறு!

இந்த சூஃபிகள் தங்களையும் சுன்னத் ஜமாஅத் என்று அடையாளப்படுத்திக் கொண்டு போலியாக நடித்து முஸ்லிம்களாக வாழுகின்ற சுன்னத் ஜமாஅத் மக்களை முஷ்ரிக்குகளாக மாற்ற துடிக்கின்றனர்.

பிரபல சூஃபியான கஸ்ஸாலி இமாம் தான் இவ்வாறான ஒரு வழிகெட்ட கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி லட்சக்கணக்கான மக்களின் வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர். இவர் ஒரு மார்க்க அறிஞரும் கூட. எனினும் சூஃபித்துவத்தால் கவரப்பட்டு இந்நிலைக்கு ஆளாகிவிட்டார். இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து விட்டதாகவும், சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு என்பது தனி விஷயம்.

இவர் எழுதிய ’இஹ்யா உலூமுத்தீன்’ எனும் நூல் பிரபலமானது. இதை இவர் நான்கு பகுதியாகப் பின்வருமாறு வகுத்திருக்கின்றார்.

அ) இபாதாத் – வணக்கங்கள்.

ஆ) ஆதாத் – பழக்க வழக்கங்கள்.

இ) முஹ்லிகாத் – மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள்.

ஈ) முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள்.

இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது பகுதி இருக்கின்றதே – அதாவது முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர் குறிப்பிடுவது என்ன தெரியுமா? நரகை விட்டும் பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே!!

தரீக்கத்தை – அதாவது

ஆத்மீகப் பாதையை அடைய வேண்டுமா? ஷேக்கிடம் பைஅத் செய், அவருக்கு அடிமையாகு, அவரிலே அல்லாஹ்வைக் காண், அவர் சொல்வதைச் செய்.

அப்படி நீ தரீக்கத்தின் வழி நடந்தால்தான் உன்னால் ஹக்கீக்கத்தை அடைய முடியும், ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை விட்டும் உன்னைக் காக்கும்!

என்பதே அதன் விளக்கம்.

இதன்படி, ‘இபாதத்கள், தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை விட்டும் காப்பாற்றாது. மாறாக ஹக்கீக்கத்தைத் தெரிந்தால் தான் சுவர்க்கம்’ என்பது தான் கஸ்ஸாலியின் கொள்கை என்பது தெளிவாகின்றது.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் வழிகெட்ட சூஃபித்துவத்தில் உழன்று கொண்டிருந்தபோது கிறுக்கித் தள்ளிய இந்த வழிகேடுகளைத் தான் அவற்றை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் தற்காலத்திய சூஃபித்துவவாதிகளும் அச்சுப் பிசகாமல் அப்படியே பின்பற்றுகின்றனர்!

ஆனால் அல்-குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில்..

நரகவாதிகளைப் பார்த்து சுவர்க்கவாதிகள் நீங்கள் நரகத்துக்கு வரக் காரணம் என்ன? என்று கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு கூறுகின்றான்..

சுவன வாதிகள் நரகுக்குச் சென்ற பாவிகளிடம் ‘நீங்கள் நரகம் வரக் காரணம் யாது? என்று வினவுவார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் தொழக் கூடியவர்களில் இருக்க வில்லை, ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை, வீணர்களுடன் கூடித்திரிந்தோம், நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தோம்’ என்பார்கள்.

(ஸூரா முத்தஸ்ஸிர் 41)

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து,

‘அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையைத் தொழுது, ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும், ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன். இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை. இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள், ஆம் என்று கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

இவ்விரு ஆதாரங்களின் மூலமாக, தொழாதிருத்தல், இபாதத் செய்யாதிருத்தல் தான் ஒருவன் நரகம் செல்லக் காரணமாகின்றது என்பதும் தொழுவதும் இதர இபாதத்களைச் செய்வதும் சுவனம் சேர்க்கும்’ என்பதும் தெளிவாகின்றது.

ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில் சேராவிட்டால் சொர்க்கமே கிடையாது என்கின்றாரே??

அல்-குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சட்டங்களையெல்லாம் உதாசீனப்படுத்தி ஷரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் இவர்களை என்னவென்பது?

இவ்வாறே கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கின்றார்.

உலக அறிவு, மறுமையின் அறிவு என்று.

மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே.. இதிலென்ன தவறு? என்பார்கள். ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும் வழிகெட்ட வியாக்கியானத்தைப் பாருங்கள்..

‘உலக அறிவென்பது உலகில் செய்யும் இபாதத், நல்ல கெட்ட காரியங்கள் ஹராம் ஹலால் பற்றிய அறிவாகும். மறுமையின் அறிவென்பது ஹக்கீகத்துடைய அறிவாகும். அதாவது ‘அல்லாஹ் தான் இப்பிரபஞ்சமாக வெளியாகியுள்ளான்’ எனும் ஹக்கீக்கத்தை–யதார்த்தத்தை சூஃபித்துவப் பாசறையில் தரீக்காவின் வழியில் பயின்று அறிவதே மறுமையின் அறிவாகும்.

(இஹ்யாஉலூமுத்தீன் பக்கம் 1-114)

இவ்வாறு முதல் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனுக்குக் குழையடித்து, மூளையைச் சலவை செய்து இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி, ‘எல்லாமே அல்லாஹ்’ என்ற வழிகெட்ட தத்துவங்களைப் போதித்து, ‘நீயும் அல்லாஹ்! நானும் அல்லாஹ்’ என்று பைத்தியக்காரத் தனமாய் உளறி அவர்களின் சிந்திக்கும் திறனை சிதைத்து மூளையை மழுங்கடித்து அவர்களைத் தமது தரீக்காவிற்குள் (தரீக்கத்துன்நார் – நரகத்துகின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச் செல்கின்றனர்.

‘எல்லாமே அல்லாஹ்’ தான் என்ற வழிகெட்ட கொள்கையை ஹகீகத் என்ற பெயரில் போதிக்கும் இந்த சைத்தானிய தரீக்கத்தினுள் நுழைந்த ஒருவனுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் என்பதே இல்லாது போய்விடுவதால் அதன் பிறகு அவர்களுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து எதைப் போதித்தாலும் அவர்களின் மண்டையில் ஒன்றும் உரைப்பதில்லை! அல்லாஹ் நாடினால் தான் இவர்களுக்கு நேர்வழி கிடைக்கும்!

இஸ்லாத்தின் பாதையோ மிகத் தெளிவானது! அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என்ன கூறினார்களோ அதுவே இஸ்லாம்! இதை தவிர மற்றவை அனைத்தும் வழிகேடுகளுக்கு அழைத்துச்செல்லும் பாதைகளாகும்! அவற்றை எவ்வளவு பெரிய அல்லாமாக்கள் கூறியிருப்பினும் சரியே!

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.”

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

”வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்லுகிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டான்.”

அறிவிப்பவர் : உமர்(ரழி): நூல் : ரஜீன்.

முஸ்லிம்கள் சூஃபித்துவ வழிகேடுகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருந்து தங்களின் ஈமானைப் பாதுகாத்துக்கொள்ள முன்வரவேண்டும்!

சூபித்துவ தரீக்காக்கள் – அன்றும் இன்றும் என்ற நூலிலிருந்து

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed