நயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்!!

بسم الله الرحن الرحيم

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு). (முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும் மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள், உங்களுக்கு முன் இருந்தவர்கள், அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள், இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள் தான் நஷ்டவாளிகள்)” சூரா அத்தவ்பா 68,69

நபியவர்களது காலத்தில் வாழ்ந்த முனாஃபிக்குளைப் பற்றிப் பேசும் மேற்படி வசனங்கள் அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நயவஞ்சகர்களும் உடற்பலம், பணப்பலம், குழந்தை மற்றும் ஏனைய செல்வங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் உலக இன்பங்களில் தமது காலத்தை கழித்ததுடன் அல்லாஹ்வைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாதவர்களாக வாழ்ந்தனர்.

அவர்களுக்கு அனுப்பட்ட நபிமார்களுக்கு எதிராக செயற்பட்ட அதே வேளை நபிமார்களை கொலை செய்யவும் தயங்கவில்லை. உலக இன்பத்தின் மீதிருந்த போதை அவர்களுக்கு பாவம் செய்வதற்கு பல வழிகளை திறந்து விட்டது. மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறக் கூடிய இமாம் அப்துர் ரஹ்மான் அஸ்ஸஅதி அவர்கள் தமது தப்ஸீரிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“(அவர்களது நல்லரங்கள் பாலாகிவிட்டன. அந்நல்லரங்கள் ஈருலகிலும் அவர்களுக்கு பிரயோசனம் அளிக்க மாட்டாது. நபியவர்களது காலத்தில் வாழ்ந்த முனாஃபிக்குகளை விழித்து நீங்களும் அவர்களைப் போன்றவர்கள் தான் உங்களது இறுதி முடிவும் மிகவும் மோசமானதாக இருக்கும்) என்கின்றார்.” தப்ஸீருல் கரீமுர்ரஹ்மான் 3-262

“நிபாக் என்ற அரபுப் பதத்திற்கு மொழிக் கருத்தை சொல்ல முனைந்த இமாம் இப்னு ரஜப் அவர்கள் (ஏமாற்றுதல் மற்றும் சதிசெய்தல் மேலும் நன்மைகளை வெளிக்காட்டி நன்மைக்கு எதிரானதை மறைத்தல்) என்றார்.” ஜாமிஉல் உலூம் 375

எனவே “நிபாக் என்ற நயவஞ்சகத்திற்கு இவ்வாறு வரைவிலக்கணம் வழங்கலாம்.” (நம்பிக்கையை (ஈமான்) நாவின் மூலமாக வெளிப்படுத்துதல், நிராகரிப்பை (குப்ர்) உள்ளத்தில் மறைத்தல்) நல்ரத்துன் நஈம் 11-5604, 5605

அல்லாஹ் இந்த நயவஞ்சகர்களது முகத்திரையை பல இடங்களிலே கிழித்து அவர்களை தோலுரித்துக் காட்டுவதன் மூலம் அவர்களது பண்பு மற்றும் குணாதிசயங்கள் நல்ல மனிதர்களிடம் வந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றான்.

சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலே மனிதர்களின் மூன்று முக்கிய பிரிவினரான முஸ்லிம்கள், காபிர்கள், முனாஃபிக்குகள் பற்றி குறிப்பிடும் போது முஸ்லிம்களைப் பற்றி 4 வசனங்களிலும், காபிர்களைப் பற்றி 2 வசனங்களிலும், முனாஃபிக்குகளைப் பற்றி 13 வசனங்களிலும் சுட்டிக் காட்டுகின்றான்.

முனாஃபிக்குகள் எந்த அளவு ஆபத்தானவர்கள்; ஏன் காபிர்களை விடவும் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரானவர்கள். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் நயவஞ்சகத்தின் அடையாளங்கள் தன்னில் ஏற்பட்டு விடாமல் காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரமுடிகின்றது.

“இன்னும் மனிதர்களில் ‘நாங்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்’ என்று கூறுவோரும் இருக்கின்றனர், ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.”

சூரா அல்பகராவின் 8ம் வசனத்திலே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

“அவர்களது குழப்பங்கள் பூமியிலே பல வடிவங்களில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். அதனை பல மனிதர்கள் உணரவே மாட்டார்கள்” என பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்’ என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் ‘நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.”

“‘(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், ‘மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல் நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ள வேண்டுமா?’ என்று அவர்கள் கூறுகிறார்கள், (அப்படியல்ல,) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.” அல் பகரா 11,12,13

முஸ்லிம்களிடம் முஸ்லிமாகவும், இஸ்லாத்தின் விரோதிகளிடம் நண்பனாகவும் (பாசாங்கு) வேலை பார்ப்பர்:

“இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்), ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்’ என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்’ எனக் கூறுகிறார்கள்.” அல் பகரா 14

அவர்களது யதார்த்தை வெளிக்கொணரும் முகமாக அவர்களுக்கு உதாரணங்கள் கூறி விளங்கப் படுத்துகின்றான்.

“இத்தகையோருக்கு ஓர் உதாரணம்: நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பானது அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்து விட்டான், இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.” அல் பகரா 17

அவர்களில் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்தவர்களைப் பற்றி வர்ணக்கும் போது:

“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, ‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர் என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்’ என்று கூறுகின்றனர். மேலும் அல்லாஹ் ‘நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்’ என்பதை நன்கு அறிவான். ஆனால் அல்லாஹ், ‘நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்’ என்பதாகச் சாட்சி சொல்கிறான்’. இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின்; பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர், நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது. இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதானாலேயாகும், ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது, எனவே அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.”

என அல் முனாஃபிக்கூன் அத்தியாயத்தின் 1,2 மற்றும் 3 ஆகிய வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

அவர்கள் ஈமான் கொண்டதால் ஏற்பட்ட ஒளியின் மூலம் பிரயோசனம் அடைந்தனர். பின்னர் நிராகரித்தமையினால் செய்வதறியாது மீண்டும் தமது அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுகின்றனர். இந்நிலையை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகின்றான்:

“(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர் எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.” அல் பகரா 18

இவர்களின் உண்மைக்கு தூரமான நிலையையும் இவர்களது மரணத்திற்கு அஞ்சும் கோழைத்தனத்தையும் பின்வரும் உதாரணத்தின் மூலம் கோடிட்டுக் காட்டுகின்றான்:

“அல்லது (இன்னும் ஓர் உதாரணம்:) காரிருளும் இடியும் மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம், (இதில் அகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால் தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்த வனாகவே இருக்கின்றான்.” அல் பகரா 19

பாலைவனத்திலே காரிருலில் பயணம் செய்யும் போது இவர்களது நிலையையும் அல்லாஹ் எந்த அளவு அவர்கள் மீது சக்தி கொண்டவன் என்பதையும் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம்மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம் அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள், அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்று விடுகிறார்கள், மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் போக்கிவிடுவான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.” அல் பகரா 20

இவ்வாறு அவர்களது உண்மை நிலையை அல்லாஹ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தங்களை அம்பலப்படுத்தி விடுவானோ என அவர்கள் பயந்த போதிலும் நயவஞ்சகத்தின் பல பண்புகளை அவ்வப்போது சுட்டிக் காட்டி உண்மை விசுவாசிகளை பாதுகாக்க விரும்புகின்றான்.

“முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் – (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.” அத் தவ்பா 64

நயவஞ்சகர்களின் பண்புகள்:

1) அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் பின்பற்றும் கூட்டத்தில் தாமும் இருப்பதாக புளுகுவார்கள்:

இந்த முக்கியமான பண்பை இன்று பல தரப்பட்ட ஜமாத்துக்கள் மற்றும் இயக்கங்கள் தமதாக்கிக் கொண்டு ‘தாமும் குர்ஆன் ஸுன்னாவை பின்பற்றுகின்றோம்’ என வெறுமனே பீற்றிக்கொண்டு முனாஃபிக் தனமாக நடந்து கொள்கின்றனர். அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகளோடு கூட்டாளிகளாகவும் இருந்துக் கொண்டு உண்மையான தீனைச் சொல்லக் கூடியர்களை எதிர்க்கவும் செய்கின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால் அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்’ என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே, நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்து விடுவான்.”

“(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர், அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (அவர்கள் உங்களிடம் வந்து) ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று கூறுகின்றனர், மாறாக காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப்பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) ‘உங்களை நாங்கள் வெற்றிக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா? என்று கூறுகின்றனர், எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான், மெய்யாகவே காஃபிர்கள் முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.” அந்-நிஸா 140,141

2) கேட்பவர்களை கவரும் பாணியிலே தமது பேச்சை அமைத்துக் கொள்வர்:

இன்றும் இவ்வாறான பேச்சாளர்களை அதிகமாகவே காணமுடிகின்றது. ‘உண்மையைச் சொல்ல வேண்டும்’ என்பதை மறந்து ‘தமது இமேஜை’ பாதுகாத்துக் கொள்ள எத்தனிக்கும் தாயிகளை அதிகமாகவே காணமுடிகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கின்றான், உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும், தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான், (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.” அல்-பகரா 204

3) அவர்களது முன்னோர்களைப் போன்றே பூமியில் குழப்பம் விளைவிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்வதுடன் மற்றவர்களையும் குழப்பம் செய்ய ஏவுவர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவன் (உம்மை விட்டுத்) திரும்பியதும் பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளைநிலங்களையும் கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.” அல்-பகரா 205

4) தீமைகளை மற்றவர்களுக்கு ஏவுவர்; நன்மையான காரியங்களுக்கு தடையாக இருப்பர்; அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதில் உலோபித்தனமும் படுவர்:

அல்லாஹ்வின் பள்ளியிலே அல்-குர்ஆனிய வகுப்புக்கள் நடைபெறுவதற்கு தடையாக இருக்க கூடியவர்கள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நயவஞ்சகர்களான ஆடவரும் நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் பாவங்களைத் தூண்டி நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள், ஆகவே அவன் அவர்களை மறந்துவிட்டான் – நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.” அத்-தவ்பா 67

5) வஹியின் அடிப்படையில் தீர்ப்பளித்தால் விரண்டோடுவர். அல்லாஹ்வின் வேதத்தில், நபியவர்களது வாழ்வில் உள்ள சட்டங்களை அமல்படுத்தினால் அதனையும் கண்டு கொள்ளமாட்டார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“மேலும் அவர்களிடம், ‘அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும் (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்’ என்று கூறப்பட்டால் அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.” அந்-நிஸா 61

6) உடல் அமைப்பு, பேச்சு போன்றவற்றை அழகாக்கிக் கொள்வர். இவர்களின் உள்ளமோ மிகவும் மோசமானதாக இருக்கும்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“இவர்களை நீர் பார்த்தால் இவர்களுடைய உடல்( அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும், அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர், எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்: சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள் தான் (உம்) பகைவர்கள். ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக! அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?” அல்-முனாஃபிக்கூன் 04

7) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவோருக்கு ஏதாவது நன்மை நடந்துவிட்டால் கவலைப்படும் அதேவேளை ஏதாவது தோல்வி அல்லது கொடுதி ஏற்பட்டால் சந்தோஷப்படுவர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது, உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அவர்கள் ‘நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்’ என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள். ‘ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்’ என்று (நபியே!) நீர் கூறும், முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக இருப்பர்!” அத்-தவ்பா 50,51

8) இறைவழிகாட்டுதலை மிகவும் பாரமாக எண்ணி வெறுப்பர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“ஏனெனில் அல்லாஹ் இறக்கிய(வேதத்)தை திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கிவிட்டான்.” முஹம்மத் 09

9) அல்லாஹ்வை நம்பி சாட்சி சொல்வதாக புளுகிக் கொண்டிருப்பர். பொய்ச் சத்தியமும் செய்வர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, ‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர் என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்’ என்று கூறுகின்றனர். மேலும் அல்லாஹ் ‘நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்’ என்பதை நன்கு அறிவான். ஆனால் அல்லாஹ் நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்’ என்பதாகச் சாட்சி சொல்கிறான்.” அல்-முனாஃபிக்கூன் 01

“(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் ‘நீங்கள் வெளியேற்றப்பட்டால் உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம், அன்றியும் (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும் எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம், மேலும் உங்களுக்கெதிராக போர் செய்யப் பெற்றால் நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்’ என்று கூறுகின்றனர், ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.” அல்-ஹஷ்ர் 11

“எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதற்காகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.” அல்-முஜாதலா 14

“மேலும் அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) ‘யஸ்ரிப்வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்’ என்று கூறியபோது அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: ‘நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன’ என்று – அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் – கூறி (போர்க் களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் – இவர்கள் (போர்க் களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.” அல் அஹ்ஸாப் 13

10) தொழுகையை பிற்படுத்துவதோடு அதில் சோம்பேரிகளாகவும் இருப்பர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக அந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர், ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான், தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்), இன்னும் மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.” அந்-நிஸா 142

“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்தார்கள், மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.” அத்-தவ்பா 54

‘(தொழுகைக்கு செல்லும் போது உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து அதனை நிறைவேற்ற வேண்டும்; மேலும் முனாஃபிக்குகளை ஒத்து இருக்கக் கூடாது)’ என இமாம் அப்துர் ரஹ்மான் அஸ்ஸஅதி தனது தப்ஸீரிலே குறிப்பிடுகின்றார். தப்ஸீருல் கரீமுர்ரஹ்மான் 3-249

11) உடன்படிக்கை செய்தால் அதனை பேண மாட்டார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களில் சிலர் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான) தர்மங்கள் செய்து நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கி விட்டனர்.

எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்தாலும், அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததனாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.” அத்-தவ்பா 75,76,77

12) காபிர்களிடம் கௌரவத்தை வேண்டி நிற்பர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு ‘நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு’ என்று நன்மாரயங் கூறுவீராக! இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் எல்லாம் அல்லாஹ்வு;க்கே உரியது”. அந்-நிஸா 138,139

13) மதிமேல் பூனையாய் இருப்பர். இன்றும் சில இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய சட்டப் பிரச்சினைகள் வரும் போது இந்நடைமுறையை கடைபிடிப்பர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை; காஃபிர்களின் பக்கமுமில்லை, இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ் எவரை வழி தவறச் செய்து விட்டானோ அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.” அந்-நிஸா 143

“(போரில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள் தாம், அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன, ஆகவே அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்குமங்கும்) உழலுகின்றனர்.” அத்-தவ்பா 45

14) ஜமாஅத் தொழுகையில் பங்கு கொள்ள மாட்டார்கள். சில அறிஞர்களே ‘தம்மீது ஜமாஅத் தொழுகை கடமையில்லை’ என்ற பானியிலே நடந்து கொள்கின்றனர்:

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

“நிச்சியமாக நாம் பார்க்கின்றோம் தெளிவான முனாஃபிக்கைத் தவிர ஜமாத் தொழுகையை விட்டுவிட மாட்டான்.” (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 654

15) பஜ்ர், இஷா தொழுகைகள் மிகவும் பாரமாக இருக்கும்:

“நயவஞ்சகனுக்கு மிகவும் பாரமான தொழுகை பஜ்ர், இஷா என்பனவாகும். அவை இரண்டிற்கும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களேயானால் தவண்டு தவண்டாது வந்துவிடுவார்கள்” என நபியவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

16)அஸர் தொழுகையை மஃரிப் உடைய நேரம் வரை பிற்படுத்துதல்:

அனஸ் (ரழி) நபியவர்களிடம் கேட்டதாக கூறுகின்றார்கள்:

“நயவஞ்சகனின் தொழுகை, சூரியன் ஷைத்தான் உடைய இரு கொம்புகளுக்கிடையே மறையக்கூடிய நேரத்திலே பறவைகள் கொத்துவதைப் போன்று (அவசரமாக) அல்லாஹ்வை கொஞ்சம் ஞாபகப்படுத்தி நான்கு ரகாஅத்துக்கள் தொழுவார்கள்.” முஸ்லிம் 21- 434- 622

17) மோசடி செய்தல், உடண்படிக்கையை மீறுதல்:

“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: பேசினால் பொய் சொல்வான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பினால் மோசடி செய்வான்.” அறிவிப்பர்: அம்ரு இப்னு ஆஸ் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

18) பாதுகாப்பான சூழ்நிலையிலும் யுத்ததைப் பற்றி பேசுதல், யுத்த காலங்களில் கோழையாய் இருத்தல்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில மரணத்தருவாயில் மயங்கிக் கிடப்பவர் போல் அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர், ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ (போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள் மீது பேராசை கொண்டவர்களாய் கூரிய நாவு கொண்டு (கடுஞ்சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள், இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை, ஆகவே அவர்களுடைய (நற்)செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதாகும்.” அல்-அஹ்ஸாப் 19

நயவஞ்சகத்தால் ஏற்படும் விளைவுகள்:

1) நரக வேதனை:

அல்லாஹ் கூறுகின்றான்:

“நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.” அத்-தவ்பா 68

“(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால் அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்’ என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே, நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்து விடுவான்.” அந்-நிஸா 140

2) நரகத்தின் அடித்தளத்தில் இருப்பர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தின் தான் இருப்பார்கள், அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காணமாட்டீர்.” அந்-நிஸா 145

3) அவர்களது செல்வம், குழந்தைகள் அவர்களுக்கு வேதனையே அளிக்கும்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம், அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும் அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.” அத்-தவ்பா 55

4) மறுமையில் நிகழும் கேவலம்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டு விடும் அந்நாளில் மனிதனுக்கு எந்தப் பலமும் இராது. (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.” அத்-தாரிக் 9,10

5) அல்லாஹ் மறுமையில் தனது முழங்காலுக்கு கீழ் பகுதியை (கெண்டைக் காலை) வெளிப்படுத்தும் போது ஸுஜுது செய்ய முடியாது தினறுவர்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள் அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும். அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டு தானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சிமாக இருந்தனர்.)” அல்-கலம் 42,43

6) நரகத்தின் மேல் உள்ள பாலத்தை கடக்க முடியாது படும்பாடு:

அல்லாஹ் கூறுகின்றான்:

“முனாஃபிக்கான ஆண்களும் முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: ‘எங்களை கவனியுங்கள். உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்’ என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக), அவர்களுக்குக் கூறப்படும்: ‘உங்களுக்குப் பின்னால் திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்’. பிறகு அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் – (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்” அல்-ஹதீத் 13

7) முஃமின்களைப் பார்த்து கைசேதப்படுவர், முஃமின்களின் பதில்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள். ‘மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள், (இந் நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள், அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய) வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தான் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்’ என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.”

‘ஆகவே இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப் படமாட்டாது, உங்களுடைய தங்குமிடம் நரகம் தான், அதுதான் உங்களுக்குத் துணை – அதுவே சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்’ (என்றும் கூறப்படும்)”. அல்ஹதீத் 14,15

நபித்தோழர்கள் இவர்களது பண்புகள் வந்து விடக்கூடாது என என்றும் பயப்படக்கூடியவர்களாக இருந்தனர்:

இப்னு அபீ முலைக்கா கூறும் போது:

“நான் நபித்தோழர்களில் முப்பது பேரை அடைந்து கொண்டேன் அவர்கள் அனைவரும் நயவஞ்சகத்தை பயந்தனர்” என்கின்றார்.

முஸ்லிமிலே 2750 இலக்கத்தில் பதியப்பட்ட செய்தியிலே நபியவர்களிடம் வஹியை எழுதுபவராக இருந்த ஹன்லலா அல் உஸைதி (ரழி) அவர்கள் மற்றும் அபுபக்கர் (ரழி) ஆகியோர் “தாம் முனாஃபிக் ஆகிவிட்டோமோ” என பயந்த சம்பவங்களை காண முடிகின்றது.

இவ்வாறு பெரும் பெரும் ஸஹாபாக்களே நயவஞ்சகத்தை பயந்திருக்க நம்மில் சிலருக்கு தெளிவான முனாஃபிக்கின் பண்பு தன்னிடம் வந்து விட்டது என உணர்ந்த போதிலும் அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.

நபியவர்கள் கூட முனாஃபிக் தனத்தை விட்டு அல்லாஹ்விடம் பிராத்தித்தமை குறிப்படத்தக்கது. எனவே நாமும் நமது ஈமானை பாதுகாத்துக் கொள்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நல்லறங்களை தூய்மைப்படுத்தி அதற்கு முழுமையான கூலியைத் தந்து முஃமின்களோடு சுவர்க்கம் நுழையக் கூடிய பாக்கியத்தை ஏற்படுத்துவானாக!

அரபு மூலம்: அத்-தவ்ஹீத் இதழ் 451 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1430

தொடர்புடைய ஆக்கங்கள்:

Hits: 433

மற்றவர்களுக்கு அனுப்ப...

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *