ஒப்பாரி வைத்து அழுதல் – ஓர் இஸ்லாமியப் பார்வை!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் தன்பங்கள், துயரங்கள், சோதனைகள் ஏற்படுவதுண்டு. அவைகள் சிலருக்கு பொருளாதாரம் மூலமாகமாகவோ, சிலருக்கு வியாதிகள் மூலமாகவோ ஏன் சிலருக்கு நெருங்கிய உறவினர்களை இழப்பதின் மூலமாகவோ கூட ஏற்படலாம். இவை அனைத்துமே தமக்கு இறைவனால் ஏற்படுத்தப்பட்ட சோதனை என்றுணர்ந்துமுஸ்லிமான ஒருவர் பொறுமை காத்தல் மிக மிக அவசியமாகும். இவ்வாறு பொறுமை காப்பவர்களுக்கே மகத்தான நற்கூலி இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 2:155-157)

மேற் கூறிய இறைவசனங்கள் ஒரு முஃமின் துன்ப நேரங்களின் போது எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது. நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடக்கின்றது என்று ஒரு முஃமின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமை காத்து அல்லாஹ்விடம் உதவி கோரவேண்டும்.

ஆனால் அதைவிடுத்து ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தவுடன் தலையில் அடித்துக் கொண்டும், வாய் மற்றும் வயிறுகளில் அடித்துக் கொண்டு அழுது அரற்றுவது என்பது இறைவனின் ஏற்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல் சோதனையின் போது நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென்ற இறைக்கட்டளையை நிராகரிப்பதாகும். மேலும் அறுவருக்கத்தக்க இச்செயல்கள் உண்மையான ஒரு முஃமினுக்குரிய செயல் ஆகாது. இவ்வாறு செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கவும் முடியாது என்று ஏராளமான நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

அபூமூஸா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) மயக்கமடைந்து விட்டார்கள். அப்போது அவர்களின் மனைவியான உம்மு அப்தில்லாஹ் சப்தமிட்டு (ஒப்பாரி வைத்து) அழுது கொண்டே (அங்கு) வந்தார். அபூமூஸா (ரலி) அவர்கள் மயக்கம் தெளிந்த போது, “தலையை மழித்துக் கொண்டவர், ஓலமிட்டு அழுதவர், ஆடையைக் கிழித்துக் கொண்டவர் ஆகியோரிடமிருந்து நான் எனது பொறுப்பை விலக்கிக் கொண்டேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) அவர்களின் மகனார் அபூபுர்தா (ரஹ்).

குறிப்பு: இயாள் அல்-அஷ்அரீ(ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “(அவர்களுக்கான) எனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டேன்” என்பதற்குப் பதிலாக “(அவர்கள்) நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. ஆதாரம் : முஸ்லிம்

“பரம்பரையைக் குறை கூறுவதும் இறந்தவருக்காக ஒப்பாரிவைப்பதும் மக்களிடம் இருக்கும் இறைமறுப்பின் இரு குணங்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்

ஒப்பாரி வைத்து அழுபவர்களுக்கான தண்டனைகள்:

ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபா செய்யவில்லையானால் தாரால் (தாரினால்) சட்டை போடப்பட்டு நரகத்தில் வேதனை செய்யப்படுவாள். ஆதாரம் : முஸ்லிம் மற்றும் இப்னுமாஜா

ஒப்பாரி வைத்து அழுபவர்கள் நரகத்தில் இரு வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஒரு நாயைப் பார்த்து இன்னொரு நாய் குரைத்துக் கொண்டிருப்பது போல குரைத்துக் கொண்டிருப்பார்கள். ஆதாரம் : தப்ரானி.

எனவே சகோதர, சகோதரிகளே! மறுமையில் இத்தைகைய வேதனை தரும் இழிசெயலாகிய ஒப்பாரி வைத்தலை நமது சகோதரிகளில் சிலர் தமக்கு மிக நெருக்கமானவரை இழந்துவிடும் போது அறியாமையினால் செய்கின்றனர். நாம் அவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூறி தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பொறுமையயைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அல்லாஹ் தரவிருக்கின்ற வெகுமதியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா நேரங்களிலும் பொறுமையைக் கடைபிடிக்கும் ஆற்றலைத் தந்தருள்வானாகவும். ஆமீன்.

Hits: 152

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *