சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?

கேள்வி: –

முஸ்லீம்களில் ஹனஃபி, ஷாபி, மற்றும் தவ்ஹீது வாதிகள் என பலவாறாகத் தொழுகை நடத்துகிறார்களே? சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?

பதில்: –

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் (33:21)

மேலும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள்.

‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்’

எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட திருமறை வசனம் மற்றும் நபிமொழி நமக்கு உணர்த்துவது என்னவென்றால்: –

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.
  2. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே நம் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் முக்கியமாகப் பின்பற்ற வேண்டும்.
  3. நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க அவர்கள் இறைவனை எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறே நாம் தொழ வேண்டும்.

முதலில் நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளைப் சரியான முறையில் பேணி நடந்ததில் இந்த உலகத்தில் நபி (ஸல்) அவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது.

எனவே ஒருவர் தொழுகையின் செயல்களான தக்பீர் கூறி கையை உயர்த்துதல், கை கட்டுதல், குர்ஆன் ஓதுதல், ருகூவு செய்தல், சஜ்தா செய்தல், இருப்புகளில் இருத்தல் மற்றும் அவைகளில் ஓத வேண்டிய துஆக்கள் போன்றவைகளை ஆய்வு செய்து தமது இந்த செயல்கள் நபி (ஸல்) அவர்களின் செயல் முறைகளுக்கு உட்பட்டது தானா? தாம் செய்யும் இந்த செயல்முறைகளுக்கு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இந்த செயல்களை அவர் எத்தனை தலைமுறைகளாகப் பின்பற்றி வந்திருந்தாலும் சரியே!. அவைகள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் நிச்சயமாக தொடர வேண்டும். இல்லையெனில் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன என்பதை தேட வேண்டும்.

இறைவனருளால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபி வழித்தொகுப்புகள் எளிய தமிழில் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நபி வழியில் எவ்வாறு தொழவேண்டும் என ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன.

மேலும் ‘நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை எவ்வாறிருந்தது’ என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பல இணைய தளங்களில் இலவசமாக தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

எனவே இன்றைய காலகட்டத்தில் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறையை எளிதில் அறிந்துக் கொள்வதற்குரிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றது.

மரியாதைக்குரிய நான்கு இமாம்கள்: –

மரியாதைக்குரிய நான்கு இமாம்களும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற செய்திகளின்  அடிப்படையிலே கூறியிருக்கிறார்கள். நான்கு இமாம்கள் பின்பற்றிய வழிமுறைகளிலும் தொழுகையின் அடிப்படைக் கடமைகளான கிப்லாவை முன்னோக்குதல், தக்பீர் கூறுதல், நிலை நிற்றல், சூரத்துல ஃபாத்திஹா ஓதுதல், ருகூவு செய்தல், சஜ்தா செய்தல் போன்றவற்றில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. அனைத்து இமாம்களின் கருத்துக்களும் ஒருமித்ததாகவே இருக்கிறது.

இருப்பினும் தொழுகையின் மற்ற செயல்களான கையை எங்கே கட்டுவது, சூரா பாத்திஹாவிற்குப் பிறகு சப்தமிட்டு ஆமீன் கூறுவது அல்லது மெதுவாக கூறுவது, இருப்புகளில் விரல் அசைத்தல், தொழுகையில் ஓதக்கூடிய துஆக்கள் போன்வற்றில் அவர்களுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படுகிறது.

இச்சிறிய வேறுபாடுகளைக் களைந்துக் கொள்ள அந்த்தந்த இமாம்களைப் பின்பற்றுபவர்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை ஆராய்வாரேயானால் அவற்றிலிருந்து இன்ஷா அல்லாஹ் தெளிவு பெறுவார்.

எனவே மிகச்சரியான முறையில் தொழ விரும்பும் ஒருவர் தம்முடைய தொழுகையின் அனைத்து செயல்களையும் ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்ற நபிமொழிக்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் அனைத்து வழி முறைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நபி (ஸல்) அவர்களின் வணக்க முறைகள் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்துக் கொண்டு அதையே தம்முடைய வணக்க முறைகளாக தேர்ந்தெடுத்துக் கொள்வதே மிக சரியான வழியாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் தொழுத முறையில் தொழக் கூடியவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

You missed