மதீனா ஓர் புனித பூமி

மூல நூல் ஆசரியர்: அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத்

மொழியாக்கம்: மௌலவி எம். ரிஸ்கான் முஸ்தீன் மதனி

முன்னுரை:

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இஸ்லாத்தின் ‘வளர்ப்புத் தாய்’ என உவமிக்கப்படும் மதீனா நகரின் சிறப்புக்களையும், இந்த வரலாற்றுப் புகழ்மிக்க பூமியை தரிசிக்க வருபவர்களுக்கான ஒழுங்குகளையும் ‘புனித பூமி’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளேன்.

இந்நூல் ‘மதீனாவின் சிறப்பு’ எனும் தலைப்பில் அரபு மொழியில் சவூதி அரேபியாவின் மதீனா நகரத்தைச் சேர்ந்த சமகால மிகப் பெரும் மார்க்க அறிஞரான அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் முஹம்மது அல் அப்பாத் அல் பத்ர் அவர்கள் மதீனாவின் சிறப்பையும் அங்கு வசிக்கக் கூடியவர்கள், மதீனாவுக்கு வரக்கூடியவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளை அல்-குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் ஒளியில் மிகவும் அழகாக தொகுத்துள்ளார். கடந்த வருடம் ஹி 1430 இப்புத்தகத்தின் ஒன்பதாவது பதிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான பிரதிகள் இதுவரை மதீனாவுக்கு வரக்கூடிய மக்களுக்கு இலவசமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன.

இச்சிறு நூலை நமது தமிழ் பேசும் மக்கள் வாசித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும் குறிப்பாக மதீனாவை தரிசிக்க வருகின்றவர்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி நூதன செயல்களில் (பித்அத்), அல்லாஹ்வை படைப்பினங்களுக்கு இணையாக்கும் (ஷிர்க்) போன்ற இஸ்லாம் வன்மையாக கண்டித்த செயல்பாடுகளில் நமது மக்கள் ஈடுபடுவதை கடந்த சில வருடங்களாக கண்கூடாவே அவதானித்த அடியேன் நம்மவர்களுக்கு மதீனாவின் உண்மையான சிறப்புக்களையும் இங்கு தரிசிக்க வருபவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளையும் தெளிவுபடுத்துவதற்காக இந்நூலை மொழியாக்கம் செய்துள்ளேன்.

மதீனாவில் வசிப்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளை நூலாசிரியர் குறிப்பிட்ட போதிலும் புத்தகம் நீண்டு விடக்கூடாது என்பதற்காக அதனை நீக்கம் செய்துள்ளேன். மிகக் குறுகிய காலத்திற்குள் இப்பணியை பூர்த்தி செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி கூறி, என்னை ஈன்றெடுத்த பெற்றோரையும் இம்முயற்சியில் எனக்கு ஒத்துழைத்த நண்பர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இச்சிறு முயற்சியினூடாக மதீனாவை தரிசிக்க வருபவர்களுக்கும், மதீனாவின் உண்மையான சிறப்புக்களை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கும் தெளிவைக் கொடுத்து சத்திய மார்க்கத்தை பூரணமாக பின்பற்றி ஈருலகிலும் வெற்றி பெறக்கூடிய கூட்டத்தினராக நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரது நல்லறங்களையும் பொருந்திக் கொள்வானாக. நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! ஆமீன்.

இவண்,
மௌலவி எம். ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
21-02-2010

புனித பூமி

மதீனாவின் சிறப்பும், மதீனாவை தரிசிப்பவர்களுக்கான ஒழுங்குகளும்:

அல்லாஹ்வை புகழ்ந்து அவனது இறுதித் தூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நபி (ஸல்) அவர்களின் பட்டிணமாகிய மதீனா உலகில் உள்ள பட்டிணங்களில் முதன்மையான பட்டிணமாக மாறுவதற்கு காரணம் அங்கு இறைச்செய்தி இறக்கப்பட்டமையும் அவ்விறைச் செய்தியை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்து அதே மண்ணிலே நபியவர்களுக்கு கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மக்காவில் இருந்து வந்த முஹாஜிரீன்களையும் மதீனத்து வாசிகளையும் சங்கமிக்க வைத்து பெரும் சகோதர வாஞ்சையை ஏற்படுத்தி முஸ்லிம்களின் முதண்மை தலைநகரமாக இருந்தமை என அதன் சிறப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இவ்வாறு மதீனாவின் சிறப்புகளை பன்மடங்காக்கியுள்ள அல்லாஹ் மக்கமா நகரத்திற்கு அடுத்த இடத்தையே மதீனாவுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை நபியவர்கள் ஹிஜ்ரத் செய்ய முற்பட்ட போது மக்கமா நகரத்தைப் பார்த்து கூறிய வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றது.

“அல்லாஹ்வின் மீது ஆனையாக, ‘நீ தான் அல்லாஹ்வின் பூமியிலே சிறந்த பகுதி! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பூமியும் நீயே! நான் உன்னை விட்டு வெளியேற்றப்படாவிட்டால் (நானாக உன்னை விட்டு) வெளியேறி இருக்கமாட்டேன்” திர்மதி, இப்னுமாஜா.

நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும்,

“அல்லாஹ்வே நீ எனக்கு விருப்பமான பூமியில் (மாக்காவில்) இருந்து வெளியேற்றி உனக்கு விருப்பமான பூமியில் (மதீனாவில்) என்னை குடியமர்த்தினாய்”

என்ற செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

காரணம் இங்கு நபியவர்களது விருப்பமும் அல்லாஹ்வின் விருப்பமும் முரண்படுகின்றது. ஆனால் நபியவர்கள் ‘எதை விரும்பினாலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஒப்பாகவே தமது விருப்பத்தை மாற்றிக் கொள்வார்கள்’ என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

எனவே, இந்த சிறு நூலின் ஊடாக மதீனா நகரின் சிறப்புக்களையும் பின்னர் அதனை தரிசிக்க வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன்.

மதீனாவின் சிறப்புக்கள்:

1) மக்கா நகரை எப்படி புனித பிரதேசமாக அல்லாஹ் ஆக்கியுள்ளானோ அவ்வாறே இந்தப் பூமியையும் புனித பிரதேசமாக அவனது நபியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றான்:

நபியவர்கள் கூறினார்கள்:

“இப்றாஹீம் (அலை) மக்காவை புனிதப் பிரதேசமாக்கினார்கள். நானோ மதீனாவை புனித பிரதேசமாக்குகின்றேன்” முஸ்லிம்

அல்லாஹ்வின் பூமியில் இவ்விரண்டு பிரதேசங்களைத் தவிர வேறு எந்தப் பிரதேசத்தையும் புனித பிரதேசமாக அல்லாஹ் குறிப்பிடவில்லை. சிலர் மஸ்ஜிதுல் அக்ஸா புனித பூமி (மூன்றாவது ஹரம்) என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவ்வெண்ணம் பிழையானது. உண்மையான கணிப்பு யாதெனில் மஸ்ஜிதுல் அக்ஸா அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட பள்ளிகளில் மூன்றாம் இடத்தை பெறுகின்றது என்பதே சரியானதாகும்.

இம்மூன்று பள்ளிகளின் சிறப்பையும் இவற்றில் தொழுவதன் சிறப்பையும் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“மூன்று பள்ளிகள் தவிர்ந்த வேறு எந்தப் பள்ளிக்கும் (நண்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு) பிரயாணம் மேற்கொள்ளதீர்கள். மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மதீனா), மஸ்ஜிதுல் அக்ஸா” புகாரி, முஸ்லிம்.

மக்கா மற்றும் மதீனா புனிதப் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளமை இங்குள்ள இரண்டு பள்ளிகளுடன் அதன் புனிதம் சுருங்கிவிடாது! மாறாக அதன் ‘குறிப்பிட்ட எல்லைகள் வரை புனிதம் பாதுகாக்கப் படவேண்டும்’ என்பதை விளங்கலாம். மேற்குறிப்பிட்ட ‘இரு பள்ளியின் எல்லைகள் வரை மாத்திரம் தான் சிறப்பு உண்டு’ என எண்ணினால் அதுவும் தவறாகும்.

காரணம் ‘இரண்டு பள்ளிகள் மாத்திரம் ஹரம் கிடையாது’! மதீனாவின் புனித எல்லையை குறிப்பிட்ட நபியவர்களின் கூற்று இதனை தெளிவு படுத்துகின்றது.

“மதீனாவின் புனிதம் (ஹரம்) என்பது அய்ர் மற்றும் சவ்ர் ஆகிய இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும்” புகாரி, முஸ்லிம்.

மற்றும் ஒரு அறிவிப்பில்,

“மதினாவின் இருமலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் தாவரங்களை வெட்டுதல், வேட்டை பிராணிகளை கொலை செய்வதையும் நான் ஹராமாக்கியுள்ளேன்” என்றார்கள். முஸ்லிம்.

தற்போதைய மதீனாப் பிரதேசம் மிகவும் விசாலமாக உள்ளதால் ‘மதீனாவின் எல்லப் பகுதிகளையும் ஹரம் எனக் கூறுவது தவறு’. மாறாக, எப்பிரதேசங்கள் ‘ஹரம் எல்லைக்குள்’ இருக்கின்றதோ அவற்றுக்கு ‘புனிதப் பிரதேசம்’ என்றும் ஏனைய பிரதேசங்களை பொதுவாக ‘மதீனா’ என்று கூறுவதுமே மிகவும் பொருத்தமானது.

துற்போதைய ‘மதீனா ஹரம்’ பிரதேச நிர்ணயத்தில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். காரணம் நபியவர்கள் மூலமாக இந்நிர்ணயம் தொடர்பாக கிட்டத்தட்ட மூன்று அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன என்றாலும் இவை மூன்றும் ‘ஒத்த கருத்திலே உபயோகிக்கப்பட்டுள்ளன’ என்பதனை கூர்ந்து அவதானிக்கின்ற போது விளங்கலாம்.

ஆனால் யாராவது ‘இந்த இடம் ஹரமாக இருக்காதோ’ என்று சந்தேகப்பட்டால் இச்சந்தேகம் வழுவற்றதாகும். காரணம் நபியவர்கள் குறிப்பிட்ட செய்தியில் பெரும் பிரதேசம் உள்வாங்கப்படுவதனால் வீண் சந்தேகம் தேவை இல்லை. வீணாக சந்தேகப்பட்டு சில விடயங்களில் தலையைப் பித்துக் கொள்வது பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அறிவிக்கும் ஹதீஸின் சுருக்கம்:

“யார் சந்தேகங்களை விட்டும் தன்னை காத்துக் கொள்கின்றாரோ அவர் தனது மார்க்கத்தையும், தனது மானத்தையும் காத்துக் கொண்டார் (நிரபராதியாகிவிட்டார்); யார் சந்தேகங்களில் விழுந்துவிடுகின்றாரோ அவர் ஹராத்தில் விழுந்து விட்டார்” புகாரி, முஸ்லிம்.

2) அல்லாஹ்வே இந்நகரத்திற்கு பெயர் சூட்டியமை:

‘தய்யிபா’ (நல்லது) ‘தாபா’ (சிறந்தது) போன்ற பெயர்கள் மதீனாவுக்கு காணப்படுகின்றன. இவற்றில், ‘தாபா’ என்ற பெயரை அல்லாஹ் சூட்டியதாக நபியவர்கள் நமக்கு தெளிவுபடுத்தினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

இவ்விரண்டு பெயர்களும் ‘தய்யிப்’ நல்லது, சிறந்தது, ‘நறுமணம் மிக்கது’ என பல கருத்துக்களை தரக்கூடிய சொல்லில் இருந்து வந்தவையாகும். எனவே ஒரு சிறந்த பிரதேசத்திற்கே இப்பெயர் சூட்டப்படுவதற்கு மிகவும் ஏற்றமானது என்பதை விளங்கலாம்.

3) ஈமான் மதீனாவில் ஒதுங்கிவிடும்:

நபியவர்கள் ஒரு முறை கூறும் போது,

“பாம்பு பொந்தில் ஒதுங்குவதைப் போன்று ஈமானும் மதீனாவில் ஒதுங்கிவிடும்” என்றார்கள். புகாரி, முஸ்லிம்.

ஈமான் மதீனாவை நோக்கி இருப்பதுடன் முஸ்லிம்கள் மதீனாவை மையமாகக் கொள்வார்கள்; அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்ட இப்பூமியில் முஸ்லிம்களுக்கு பற்று ஏற்படும் என பல விளக்கங்களை வழங்கலாம்.

4) ஏனைய கிராமங்களை மிகைத்த பிரதேசம்:

நபி (ஸல்) அவர்கள்,

“‘கிராமங்களை சாப்பிட்டு (மிகைத்து) விடக்கூடிய கிராமத்தின் பால் ஏவப்பட்டுள்ளேன்’ என அல்லாஹ் தனக்கு ‘மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய ஏவியுள்ளான்’ என்பதை கூறி அதற்கு மக்கள் ‘யஸ்ரிப்’ என்பர். அது தான் மதீனா எனக்கூறுவார்கள்.” புகாரி, முஸ்லிம்.

‘மற்ற கிராமங்களை விழுங்கிவிடும்’ என நபியவர்கள் கூறியதில் இருந்து ‘மற்ற பிரதேசங்களை வெற்றி கொண்டு ஏனைய பகுதிகளை (இஸ்லாமியத் தூதின் மூலம்) மிகைத்து விடும்’ என விளங்கலாம்.

அதேவேளை, ‘யுத்தங்களின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், கால்நடைகள் மதீனாவை நோக்கி கொண்டு வரப்படுவதாலும் மிகைத்தது’ எனலாம். இவை இரண்டும் நபியவர்களின் வருகைக்கு பின்னரே இடம் பெற்றமை உள்ளங்ககை நெல்லிக் கணியே.

இஸ்லாத்திற்கு கிடைத்த பெரும் பெரும் வெற்றிகள் இம்மண்ணில் இருந்தே ஆரம்பிக்கப்ட்டன. முழு மனித சமுதாயத்திற்கும் ‘இணைவைப்பு எனும் இருளில் இருந்து ஏகத்துவம் எனும் ஒளியை’ ஏற்படுத்தி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கமும் இம்மண்ணின் பக்கமும் விரைந்தனர். பூமியில் உள்ளவர்களுக்காக வெளியாக்கப்பட்ட அவ்வளவு நண்மையும் இந்த கண்ணியமான பூமியில் இருந்தே வெளியாயிற்று. ‘இஸ்லாமிய சாம்ராஜியம் இங்கு தான் ஆரம்பத்தில் கட்டியெழுப்பப்பட்டு பெரும் வல்லரசுகள் கூட இம்மண்ணில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டமை என்பன’ நபியவர்களின் கூற்றை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது.

5) இங்கு பொறுமையாக இருப்போருக்கு விஷேட சிறப்பு:

இங்கு ஏற்படக்கூடிய எவ்வகையான கஷ்டமாக இருந்த போதிலும் அதனை சகித்துக் கொள்கின்றாரோ அவருக்கு நபியவர்கள் நன்மாராயம் கூறியுள்ளார்கள்:

“அவர்கள் அறிவார்களேயானால் மதீனா அவர்களுக்கு சிறப்புக்குரிய இடமாகும். யாராவது அங்கு தனது விருப்பத்தை விட்டுவிடுவாரேயானால் அல்லாஹ் அவருக்கு அதை விட சிறந்ததை இலகுவாக்கிக் கொடுப்பான். இங்கு ஏற்படும் கஷ்டங்களை பொருமையாக ஏற்றுக் கொள்வாரோ அவருக்கு நான் நாளை மறுமையில் சாட்சியாகவோ அல்லது பரிந்துரை செய்யக் கூடியவனாகவோ இருப்பேன்” முஸ்லிம்.

இங்கு ஏற்படும் கஷ்டங்களின் போது இதைவிட விசாலமான சிறந்த இடத்தை நோக்கி செல்லாமல் பொருத்துக் கொள்வோருக்கு இம்மாபெரும் நன்மாராயமாகிய நபியவர்களது பரிந்துரை, அவர்கள் நமக்காக சாட்சி சொல்லக்கூடிய நிலை என்பன ஏற்படும். அவ்வாறே மறுமையில் பெரும் நண்மைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்பதையும் விளங்கலாம்.

6) பித்அத் செய்வதை விட்டும் கடும் எச்சரிக்கை:

இந்தப் பூமியின் கண்ணியத்தைக் குறிப்பிட்ட நபியவர்கள், பித்அத்தை கடுமையாக எச்சரித்ததுடன் பித்அத் வாதிகளுக்கு ஏற்படும் நிலையையும் தெளிவுபடுத்தினார்கள்:

“அய்ர், சவ்ர் ஆகிய இருமலைக்கும் இடைப்பட்ட பகுதியான மதீனா புனிதமானதாகும். யார் இங்கு ஒரு நூதன அனுஷ்டானத்தை மார்க்கத்தில் செய்கின்றாரோ அல்லது மார்க்கத்தில் புதிதாக நுளைவித்தவரை (பித்அத் செய்யும் ஆலிம்களை) சேர்ந்து நடக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வினதும் அவனது மலக்குமார்களினதும், முழு மனித சமூகத்தினதும் சாபம் உண்டாகிவிடும். அவரிடம் இருந்து அல்லாஹ் (மறுமையில்) எந்த ஒன்றையையும் (இத்தீமைக்குப்) பகரமாக அல்லது ஈடாக எடுக்கப்போவதில்லை” புகாரி, முஸ்லிம்.

மதீனாவில் வந்து இஸ்லாம் அறிமுகப்படுத்தாததை மார்க்கமாக செய்வதை கடுமையாக கண்டித்தார்கள்.

7) நபியவர்களின் விஷேட துஆ:

“யாஅல்லாஹ் நமது பழவர்க்கங்களில் அபிவிருத்தி செய்வாயாக! நமது நகரத்தின் (மதீனா) மீது அபிவிருத்தி செய்வாயாக! (நாம் உணவுத் தானியங்களை அளப்பதற்கு பயன்படுத்தும்) ஸாஃ, முத் ஆகிய அளவு கோள்களில் அபிவிருத்தி செய்வாயாக!” முஸ்லிம்.

என மதீனாவுக்கும், மதீனா வாழ் மக்களுக்குமாக அல்லாஹ்வின் பரக்கத்தை நபியவர்கள் வேண்டி நின்றார்கள்.

8) இந்தப் பூமிக்கு தஜ்ஜாலோ, தொற்று நோய்களோ நுளையமாட்டா:

“மதீனாவின் எல்லைகளில் மலக்குமார்கள் இருக்கின்றனர். (எனவே) தொற்று நோய்களோ தஜ்ஜாலோ நுளையமுடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.

இவ்வாறு மதீனாவுக்கு இருக்கும் பொதுவான சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் நான் புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் அல்லது இரண்டில் ஒன்றில் மாத்திரம் வரக்கூடிய ஆதாரபூர்வமான செய்திகளை உங்களுக்கு சுட்டிக் காட்டுவதுடன் போதுமாக்கிக் கொண்டேன்.

இது தொடர்பாக மேலதிக விளக்கங்கள் பெற நாடுபவர்கள் மதீனாவின் சிறப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றை அனுகலாம். அவற்றில் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வை கலாநிதி ஸாலிஹ் இப்னு ஹாமித் அர்ரிபாஈ அவர்கள் அருமையாக தொகுத்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் (அரபு தெரிந்தவர்கள்) வாங்கிப் படிக்குமாறு உபதேசம் செய்கின்றேன். தொடர்ந்து மதீனாவில் விஷேடமான சில இடங்களுக்குள்ள சிறப்புக்களை நோக்குவோம்.

மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புக்கள்:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதற்கிணங்க ‘பூமியில் அமல் செய்ய வேண்டும்’ என்று எண்ணத்தோடு ஒரு முஸ்லிம் பள்ளிவாசலை நாடி பயணம் செய்ய வேண்டுமானால் மூன்றே மூன்று மஸ்ஜித்களுக்கு மாத்திரம் தான் செல்ல முடியும். அதில் மஸ்ஜிதுன் நபவி இரண்டாம் இடத்தை பெருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்திலே நபி (ஸல்) அவர்களுடைய செய்தி நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

“மூன்று பள்ளிகளைத் தவிர நீங்கள் (வணக்கம் செய்வதற்காக) பயணம் செய்யாதீர்கள். (அவையாவன) மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மதீனாப் பள்ளி), மஸ்ஜிதுல் அக்ஸா”

என நபியவர்கள் பட்டவர்த்தனமாக கூறியுள்ள செய்தி புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலே பதியப்பட்டுள்ளது.

இம்மூன்று பள்ளிகளும் நபிமார்களாளே கட்டப்பட்டமை இதன் சிறப்பை இரு மடங்காக்கியுள்ளது. அதேவேளை மதீனாப் பள்ளியிலே தொழுவதன் சிறப்பைப் பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“எனது மஸ்ஜிதிலே தொழும் ஒரு தொழுகை மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகையை விட சிறந்தது.” புகாரி, முஸ்லிம்.

பத்து மடங்கு அல்ல நூறு மடங்கு அல்ல ஆயிரம் மடங்கு நண்மை என்றால் அதனை அடைந்து கொள்வதற்கு நாம் முயற்சி எடுக்கத்தான் வேண்டும். இது நண்மையை கொள்ளையடிப்பதற்கான பெரும் பாக்கியமாகும்.

இக்காலத்தில் வியாபாரிகளை எடுத்துக் கொண்டால் எங்காவது ஒரு சந்தையிலே அல்லது எதாவது ஒரு பிரதேசத்திலே ஒரு விஷேடம் அல்லது அங்கு சென்றால் தான் இருக்கக் கூடிய இடத்தில் பெரும் இலாபத்தை விட ஒரு மடங்கு அல்லது அரை மடங்கு இலாபம் அதிகமாகப் பெறலாம் என்றால் அதற்காக எத்தனை பிரயத்தணங்களை மேற்கொண்டாவது அங்கு சென்று குறித்த இலாபத்தை அடை முற்படுவான்.

ஆனால் மஸ்ஜிதுன் நபவியில் கிடைக்கும் நண்மையோ மறுமையுடன் சம்பந்தப்பட்டது. உலகத்தில் கிடைக்கும் இலாபத்தை போன்று ஒரு மடங்கு அல்லது அறை மடங்கு எல்லாம் கிடையாது. மாறாக ஆயிரம் மடங்கு! என்பதை நாம் நினைவில் வைத்து அந்த நண்மையை அங்கு சென்று அடைந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த பெரும் நண்மையை அடைய முயற்சிக்கும் நாம் சில விடயங்களில் கவணம் செலுத்தியாக வேண்டும்.

‘ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது’ என்ற நண்மை பர்ல் தொழுகைகு மாத்திரம் உரித்தான நண்மை கிடையாது. மாறாக ‘சுன்னத்தான தொழுகைகளுக்கும் ஆயிரம் மடங்கு நண்மை கிடைக்கும்’ என்கின்ற விபரத்தை நபியவர்கள் பொதுவாக தொழுகை என்று கூறியதில் இருந்து விளங்க முடிகின்றது.

அதாவாது ஒரு கடமையான தொழுகைக்கு ‘ஆயிரம் கடமையான தொழுகை’ தொழுத நண்மையும் அவ்வாறே ஒரு உபரியான தொழுகைக்கு ‘ஆயிரம் உபரியான தொழுகை’ தொழுத நண்மையும் கிடைத்துவிடும்.

இந்த மிகப்பெரும் நண்மை நபியவர்களது காலத்தில் இருந்த அந்த ‘பழைய பள்ளியில் தொழுதால் தான் கிடைக்கும்’ என்பது தவறு.

காரணம், நபியவர்களது மரணத்திற்கு பின்னால் உமர் (ரழி) மற்றும் உஸ்மான் (ரழி) ஆகியோர்களின் காலத்தில் பள்ளியின் முன் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரிசைகள் ‘ஸப்’ அதிகரிக்கப்பட்டது. உண்மையில் இவ்வாறு மாற்றம் செய்வதன் மூலம் மேற்படி ‘நண்மை கிடைக்காது’ என இவ்விரு நபித்தோழர்களும் நினைத்திருந்தால் தமது விரிவாக்கப்பணியை நிறுத்தம் செய்திருப்பர்.

அதேவேளை, அக்காலத்தில் உயிரோடு இருந்த நபித்தோழர்களும் கூட இவ்விரிவாக்கத்தை பொருந்திக் கொண்டமை ‘ஆயிரம் மடங்கு நண்மை பழைய பள்ளியில் மட்டும் தான் அந்த நண்மை’ என்ற வாதத்தை தவிடுபொடியாக்குகின்றது.

நபியவர்களின் பள்ளியிலே ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி ‘சுவனப் பூஞ்சோலை’ என்றார்கள். அது ‘ரவ்லா’ (Red Carpet) என்று மக்களால் அழைக்கப்டுகின்றது:

“எனது வீட்டுக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவனப் பூஞ்சோலைகளில் ஒன்று” என நபியவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.

இப்பிரதேசத்தை மட்டும் நபியவர்கள் வரையறை செய்தது இதன் சிறப்பை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

அதாவது இந்த இடத்தில் நபிலான தொழுகைகள் தொழுவது, குர்ஆன் ஓதுவது, அல்லாஹ்வை திக்ர் செய்வது போன்ற நல்லமல்களை மற்ற மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொள்வது வரவேற்கத்தக்கது.

ஆனால் பர்ளான தொழுகைகளைப் பொருத்தவரை, ரவ்லாவுக்கு முன்னால் இருக்கும் வரிசைகளில் இடம் இருக்க ரவ்லாவில் தொழ நினைப்பது பிழையான காரியமாகும்.

“ஆண்களின் ஸப்புகளிலே சிறந்தது முதல் ஸப்பாகும்; மோசமானது கடைசி ஸப்பாகும்.”

என நபியவர்கள் கூறினார்கள். முஸ்லிம்.

மற்றும் ஒரு அறிவிப்பில்,

“மனிதர்கள் பாங்கோசையின், முதல் ஸப்பின் நண்மையை அறிந்து அதற்கு வாய்ப்பு கிடைக்க வில்லையாயின் சீட்டுக் குழுக்கி (அவ்வாய்ப்பை பெற முயற்சித்துக்) கொள்வார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.

எனவே ரவ்லாவில் அப்படியே உட்கார்ந்து இருக்காமல் முன் ஸப்களில் இடம் இருக்கும் பட்சத்தில் அதற்கு முந்திக் கொள்ளவேண்டும்.

பள்ளிவாசல் நிரம்பி வழியும் காலங்களில் பள்ளியின் முன் பக்கம் தவிர்ந்த ஏனைய மூன்று பக்கங்களிலும் வெளியே தொழக்கூடிய தொழுகையாளிக்கு ஜமாஅத்துடன் தொழுத நண்மை கிடைக்குமே தவிர 1000 மடங்கு நண்மை கிடைக்காது. (இந்நூலாசிரியரின் மார்க்கத் தீர்ப்பு).

யார் பள்ளிவாசலின் உள்ளே தொழுகின்றாரோ அவர் அந்த நண்மையை பெற்றுக் கொள்வார். நாம் மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸிலே நபியவர்கள் ‘எனது இந்த பள்ளியிலே’ என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளதால் பாதையோரங்களில், கடைகளின் முன்பகுதியிலே தொழக் கூடியவர்களுக்கு ‘பள்ளியில் தொழுகின்றார்’ என்று சொல்ல முடியாத காரணத்தினால் 1000 மடங்கு நண்மைக்கு உரியவர் ஆகமாட்டார்.

நம்மவர்களில் அதிகமானவர்களிடம் புரையோடிப்போன ஒரு சிந்தனைதான் ‘மஸ்ஜிதுன் நபவியிலே 40 வக்துகள் ஜமஅத்தோடு தொழவேண்டும்’ என்பதாகும்.

இதற்கு ஆதாரமாக இமாம் அஹமத் அவர்கள் தமது கிரந்தத்திலே அனஸ் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் ஹதீஸைக் கூறுகின்றார்கள்:

“யார் எனது இந்த பள்ளியிலே 40 தொழுகைகள் விடாமல் தொழுகின்றாரோ அவருக்கு நரக விடுதலை கிடைப்பதுடன் நரக வேதனை, நயவஞ்சகம் இல்லாமல் செல்லும்” என நபியவர்கள் கூறினார்கள்.

உண்மையில் இது பலவீனமான ஒரு செய்தியாகும். இதனை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மாறாக ஒரு மனிதருக்கு எவ்வளவு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அந்த அளவுக்கு இப்பள்ளியிலே தொழுது கொள்வது மிகவும் சிறப்புக்குரிய காரியமாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தனை தடவைகள் தான் தொழவேண்டும் என்று இந்த ஹதீஸின் மூலம் நிர்பந்திக்க முடியாது.

அதிகமான நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஒரு பெரும் சோதனைக்கு உட்படுகின்றனர். அதுதான் கப்ருகளின் மீது பள்ளிகளைக் கட்டக்கூடிய நிலை அல்லது பள்ளிகளிலே மரணித்தவரை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு நம்மவர்கள் வைக்கக்கூடிய முதல் ஆதாரம் தான் ‘நபியவர்களின் கபுரு பள்ளியில் தானே இருக்கின்றது!’ என்ற வாதமாகும்.

ஆனால் இது புரிதலில் ஏற்பட்ட பெரும் பிழை எனலாம். காரணம் நபியவர்களே தனது பள்ளியை மதீனாவுக்கு வந்ததும் சஹாபாக்களின் துணையோடு கட்டினார்கள். பின்னர் தனது மனைவிமார்களின் அறைகளை பள்ளிக்கு அருகே கட்டினார்கள். அதிலே ஆயிஷா (ரழி) யின் வீடும் பள்ளிக்குப் பக்கத்தில் காணப்பட்டது. அதிலேயே நபியவர்கள் மரணித்து பின்னர் அடக்கம் செய்யப்பட்டார்கள். தொடர்ந்து நான்கு கலீபாக்களின் காலத்திலும் ஆயிஷா (ரழி) யின் வீடு பள்ளிக்கு வெளியே காணப்பட்டது.

தொடர்ந்து முஆவியா (ரழி) அவர்கள் காலத்திலும் அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களின் காலத்திலும் இந்நிலை காணப்பட்டது. பின்னர் உமையாவின் பிள்ளைகளின் ஆட்சிக்காலத்தில் (வலீத் இப்னு அப்துல் மலிக்) பள்ளி விஸ்தரிக்கப்பட்டதோடு ஆயிஷா (ரழி) யின் வீடும் பள்ளிவாசலுக்குள் கொண்டு வரப்பட்டது. இவருக்கு முன் ஆட்சி செய்தவர்கள பள்ளியை விஸ்தரித்த போதிலும் நபியவர்களின் கபுரை பள்ளிக்குள் கொண்டு வரவில்லை.

நபியவர்கள் மூலமாக பல செய்திகள் ‘கபுருகளை பள்ளிகளாக்குவது பெரும் குற்றம்’ என அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கும் செய்தியிலே நபியவர்கள் மரணிப்பதற்கு 5 இரவுகளுக்கு முன்னர் கூறினார்கள்

“உங்களிலிருந்து எனது உற்ற நண்பனை எடுத்துக் கொள்வதிலே அல்லாஹ் விடத்தில் நான் நிரபராதியாக இருக்கின்றேன். காரணம் அல்லாஹ் என்னை அவனது உற்ற நண்பனாக தேர்ந்தெடுத்துக் கொண்டான். நான் எனது சமூகத்திலே ஒரு நண்பனை பெற நாடினால் அபூபக்கரை உற்ற நண்பனாக்கியிருப்பேன். அறிந்து கொள்ளுங்கள்! ‘உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களது நபிமார்களுடைய, நல்லடியார்களுடைய கபுருகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள்! கபுருகளை பள்ளிகள் ஆக்காதீர்கள்! நான் அதை உங்களுக்கு தடை செய்துள்ளேன்!” முஸ்லிம்.

இது தவிர நபியவர்கள் தமது இறுதி மூச்சு உடலை விட்டும் பிரியப் போகும் சந்தர்பத்தில் கூட ‘கபுருகளை பள்ளியாக்கக் கூடாது’ என எச்சரித்தமை அவதானிக்க வேண்டிய அம்சாகும்.

ஆயிஷா (ரழி), இபனு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கும் செய்தியிலே,

நபியவர்கள் கடைசி நேரத்திலே அவர்களது மேலாடையை முகத்தின் மீது போட்டுக் கொண்டார்கள். சூடு அதிகரித்ததும் தனது மேலாடையை முகத்தை விட்டும் நிக்கி விட்டு கூறினார்கள்:

“யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அவர்கள் நபிமார்களின் கபுருகளை பள்ளியாக்கி கொண்டமையினால் (அவர்கள் மீது) அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என நபியவர்கள் அவர்களின் செயலை எச்சரித்தார்கள். புகாரி, முஸ்லிம்.

எனவே இவ்வாறு மூன்று ஸஹாபாக்கள் நபியவர்கள் இறுதிக் காலப்பகுதியில் செய்த எச்சரிக்கையை நமது சமூகத்திற்கு தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்க, இதற்கு மாற்றமாக யாராவது தனிநபராக இருந்தாலும் அல்லது ஒரு இயக்கமாக இருந்தாலும் உமையாவின் பிள்ளைகள் நபியவர்களின் கபுரை பள்ளிக்குள் கொண்டு வந்ததை ஆதாரமாகக் கொண்டு தாமும் தமது பள்ளிவாசலை கபுரின் மீது கட்டுவது அல்லது பள்ளிகளிலே அவ்லியாக்களின் கபுருகளை வைத்துக் கொண்டு இணை வைத்தலுக்கு தோல் கொடுப்பார்களேயானால் மேற்படி நபியவர்களின் கடுமையான எச்சரிக்கையில் இருந்தும் அல்லாஹ்வின் சாபத்தில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

மஸ்ஜிதுல் குபா:

மதீனாவில் இருக்கக் கூடிய இரண்டாவது சிறப்புக்குரிய பள்ளி இதுவாகும். நபியவர்களின் மதீனா வருகையின் போது முதலில் இறைச்சத்தோடு கட்டப்பட்ட பள்ளியாகும். இப்பள்ளியில் தொழுவதன் சிறப்பை நபியவர்கள் சொல்லிலும், செயலிலும் நமக்கு காட்டித் தந்துள்ளார்கள்.

“நபியவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடந்தும், வாகனத்திலும் (ஒட்டகம்) குபா பள்ளிக்கு வந்து இரண்டு ரக்கஅத்துகள் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்”

என்று அவர்களது செயலை நல்ல முறையிலே அவதானிக்கக் கூடிய இப்னு உமர் (ரழி) அவர்கள் நமக்கு அறிவிக்கின்றார்கள். புகாரி, முஸ்லிம்.

ஸஹ்ல் இப்னு ஹுனைப் (ரழி) கூறுவதாவது:

நபியவர்கள் கூறினார்கள்:“யார் தனது வீட்டிலே வுழு செய்து விட்டு மஸ்ஜிதுல் குபாவுக்கு வந்து அங்கு தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த நண்மை கிடைக்கும்” இப்னு மாஜா

மேற்படி நபியவர்களின் சொல்லில் பொதுவாக தொழுகை’ என பிரயோகிக்கப்பட்டு உள்ளமையினால் கடமையான தொழுகை, சுன்னத்தான தொழுகை எதைத் தொழுதாலும் அதற்குறிய கூலி (உம்ரா செய்த நண்மை) கிடைத்து விடும். நபியவர்களது பள்ளியையும், குபா பள்ளியையும் தவிர மதீனாவில் வேறு எந்த பள்ளிவாசலுக்கும் சிறப்பு இருப்பதாக நபியவர்ககள் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்பதை மதீனாவுக்கு வருபவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மதீனாவை தரிசிக்க வருபவர்களுக்கு சில வழிகாட்டல்கள்:

‘நபியவர்களின் பள்ளிவாசலை தரிசிக்க வேண்டும்’ என்ற நோக்கத்தோடு பயணம் மேற்கொள்வது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டுள்ளது. இப்பயணம் மதீனாப் பள்ளி, மக்கா கஃபா, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகள் தவிர்ந்த வேறு பள்ளிகளை தரிசிக்கும் நேக்கத்தோடு பிரயாணம் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ள ஹதீஸை (புகாரி, முஸ்லிம்) நாம் புத்தகத்தின் ஆரம்பத்திலே உற்று நோக்கினோம்.

இதனை மேலும் வலியுறுத்தும் முகமாக அபூஹூரைரா (ரழி), பஸ்ரா இப்னு அபீ பஸ்ரா (ரழி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடலின் போது அபூ ஹூரைரா கூறுகின்றார்கள்:

“பஸ்ரா அவர்களை நான் சந்தித்த போது, ‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘தூர் (மலை)- ல் இருந்து வருகின்றேன்’ என்றேன். அதற்கவர் ‘நீங்கள் அங்கு போவதற்கு முன் நான் உங்களை சந்தித்திருந்தால் நீங்கள் அங்கு போய் இருக்க மாட்டீர்கள்’ என்றார். ‘ஏன்’ என்றேன். அதற்கவர், ‘நான் நபியவர்கள் சொல்லக் கேட்டேன் ‘மூன்று பள்ளிகளுக்கு தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்யாதீர்கள். மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸா” (எனக் கூறினார்கள்). ஸூனன் நஸாயீ.

இந்த ஹதீஸில் தெளிவாகவே இம்மூன்று பள்ளிகள் தவிர்ந்த வேறு இடங்களுக்கு (மார்க்க ரீதியாக அமல் செய்யும் நோக்கத்துடன்) பயணம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

எனவே மதீனாவுக்கு வரக்கூடியவர் முதல் வேலையாக நபியவர்களின் பள்ளிக்குச் சென்று பள்ளிக்குரிய காணிக்கை இரண்டு ரக்கஅத்து தொழுதுவிட்டு பின்னர் குபா பள்ளிக்குச் செல்ல வேண்டியதன் சிறப்பை ஆரம்பத்திலே பார்த்தோம். அதேவேளை மூன்று இடங்களில் உள்ள கப்ருகளை தரிசிப்பது மதீனாவுக்கு வருபவருக்கு மார்க்கமாக்கப்படுகின்றது.

1) நபி (ஸல்) அவர்கள் கபுருடன் சேர்த்து நபியவர்களது உற்ற நபண்பர்களான அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோரின் கபுருகளை தரிசித்தல்.

2) பகீஃ மையவாடியை தரிசித்தல்.

3) உஹத்திலே அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷஹீத்களின் கபுருகளை தரிசித்தல்.

நபியவர்களது, அவர்களது இரு தோழர்களது கபுருகளுக்கு வரக்கூடியவர் கபுருகளை முன்நோக்கி நபியவர்கள் மீதும் இரு தோழர்கள் மீதும் அடக்கமாகவும் மிகவும் தாழ்ந்த குரலிலும் ஸலாம் சொல்ல வேண்டும். பின்னர் இம்மூவரும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் செய்த சேவைகளுக்காக பிரார்திக்க வேண்டும். அவர்களிடம் நமது தேவையைக் கேட்பது கூடாது!

அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லுவதற்கு முன் அவர்கள் இருவரின் சிறப்புகளில் இருந்து சில துளிகளை பகிர்ந்து கொள்வது சாலப் பொருத்தமாகும்:

அபூபக்கர் (ரழி) எடுத்துக் கொண்டால் நபியவர்கள் தனது நபித்துவத்தை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த போதே ‘நபியை ஏற்றுக் கொண்ட முதலாவது ஆண்’ என்ற பெருமை இவரைச் சாரும். தொடர்ந்து 13 வருடங்களாக நபியவர்களின் தஃவாக் கலத்தில் தோளோடு தோள் நின்று உழைக்கலானார்கள். பின்னர் மதீனாவுக்கு ஹிஜ்ரத் போவதற்கு அல்லாஹ்வின் அனுமதி கிடைத்ததும் நபியவர்களோடு எந்த ஒரு கேள்வியும் தொடுக்காது தியாகப் பயணம் மேற்கொண்டார். இவரது தியாகத்தை அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றான்.

“(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்புமில்லை:) நிராகரிப்பவர்கள் அவரை ஊரைவிட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தேயிருக்கின்றான், குகையில் இருவரில் ஒருவராக இருந்தபோது (நம் தூதர்) தம் தோழரிடம் ‘கவலைப்படாதீர்கள், ‘நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்’ என்று கூறினார். அப்போது அவர் மீது அல்ல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான், மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவர்களைப் பலப்படுத்தினான், நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்ல்லாஹ்வின் வாக்குத் தான் (எப்போதும்) மேலோங்கும் -அல்லாஹ் மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.” அத்-தவ்பா 40

பின்னர் மதீனாவிலும் 10 வருடங்களாக இஸ்லாத்திற்காக முழுமையான தியாகங்கள் மேற்கொண்டார். இஸ்லாமிய வரலாற்றிலே நடை பெற்ற எல்லா யுத்தங்களிலும் பங்கு கொண்டார். நபியவர்களின் மரணத்தை தொடர்ந்து தலைமைத்துவத்திற்கு தேர்வானார். நாளை மறுமையில் சுவர்கத்தில் கூட நபியவர்களோடு ஒன்றாக இருக்கக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியுள்ளான்.

உமர் (ரழி) அவர்களை எடுத்துக் கொண்டால், இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட 40 பேர்களில் ஒருவராவார். ஆரம்பத்திலே முஸ்லிம்களுக்கு கடும் எதிரியாக இருந்தார். அல்லாஹ் நேர்வழியை காட்டியதும் அவரது கடுமை, வீரம் என்பன காபிர்களுக்கு எதிராக திருப்பப்பட்டது. இவர்கள் இஸ்லாத்திற்குப் பிரவேசித்தமை முஸ்லிம்களுக்கு கண்ணியத்தை கொடுத்தது. இதனை இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது

“உமர் (ரழி) இஸ்லாத்தை ஏற்றதில் இருந்து நாம் கண்ணியத்துக்குரியவர்களாக மாறினோம்.” புகாரி.

மக்காவிலும் இஸ்லாத்திற்காக பாடுபட்டுவிட்டு மதீனாவுக்கும் ஹிஜ்ரத் மேற்கொண்டு தனது சேவையை தொடர்ந்தார். எல்லா யுத்தங்களிலும் பங்கு கொண்டு இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் எதிரிகளின் அழிவுக்கும் பெரும் பங்காற்றினார். அபூபக்கர் அவர்களின் ஆட்சியின் போது அவர்களுக்கு வலது கையாக உமர் செயல்பட்டார். அவர்களுக்கு பின் ஆட்சிபீடம் ஏறினார். 10 வருடங்களுக்கு மேற்பட்ட அவரது ஆட்சியிலே இஸ்லாமிய சாம்ராஜ்யம் பெரிதும் விசாலமடைந்தது.

ரோம், பராசீகம் போன்ற பெரும் வல்லரசுகள் கூட இவரது காலடியில் மண்டியிட்டது. நபியவர்கள் ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க ரோம், பாரசீகம் போன்ற பிரதேசங்களில் இருந்து வெற்றி கொள்ளப்பட்ட செல்வங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்பட்டன. இவரது மரணத்தை அடுத்து அல்லாஹ் இவரையும் நபியவர்களுக்கு பக்கத்தில் அடக்கப்பட நாடி கண்ணியப்படுத்தினான். இவரும் நபியவர்களோடு நாளை மறுமையில் சுவர்கத்தில் இருப்பதற்கு இவ்வுலகிலேயே நபியவர்களது நாவினாலே உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.

ஆனால் இவ்வளவு சிறப்பு மிக்க இந்த இரண்டு தோழர்கள் விடயத்தில் சிலர் அத்துமீறி இவர்கள் மீது பொறாமைப்பட்டு இவர்களைப் பற்றி தப்பான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட தீயவர்களில் இருந்து அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!

“அவர்களுக்குப் பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் ‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்’ என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்” (அல்-ஹஷ்ர் 10)

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங்கொடையாளியாவாய்!’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.” (ஆல இம்ரான் 8)

சூரதுன் நிஸாவின் 31ம் வசனமாகிய,

“(நீங்கள் தடுக்கபட்டுள்ளவற்றில் பெரும்பாவங்களை தவிர்ந்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்பு மிக்க இடங்களில் புகுத்துவோம்)”

வசனத்திற்கு விளக்கம் சொல்லக்கூடிய இமாம் இப்னு கஸீர் அவர்கள்,

“அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோரை ஏசுவது பெரும் பாவங்களில் நின்றும் உள்ளது” என்றார்கள்.

தொடர்ந்து கூறும் போது:

“இமாம் மாலிக் போன்றவர்கள் யார் ஸஹாபாக்களை திட்டுகின்றாரோ அவர் காபிராகி விட்டார்”

என்ற தீர்ப்பை வழங்குகின்றனர். முஹம்மது இப்னு ஸீரீன் (ரஹ்) கூறும் போது,

“அபூபக்கர், உமர் (ரழி) ஆகியோரை பகைத்துக் கொண்டவன் ‘நபி (ஸல்) அவர்களை விரும்புகின்றான்’ என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது”

இதனை இமாம் திர்மிதி அவர்கள் தனது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்.

எனவே ‘எவர்கள் சஹாபாக்கள் விடயத்தில் குறை காண்கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரின் விடயத்தில் குறைகண்டவராவார்’. ‘ஸஹாபாக்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டுவிட்டான்’ என ஏழுவானங்களுக்கு மேல் இருந்து வஹீ அறிவித்தன் பின் இது விடயத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டு ஸஹாபாக்களின் அந்தரங்கங்களை தோண்ட வேண்டிய தேவை யாருக்கும் கிடையாது.

மீறியும் யாராவது இவர்கள் விடயத்தில் தப்புக்கணக்கு போடுகின்றாரோ அவரிடம் இஸ்லாத்தை விட்டு வெளியே போன ஷியாக்களின் தாக்கம் ஏற்பட்டுவிட்டது எனலாம்.

அவனும் ‘ஷியாக்களைச் சேர்ந்தவன்’ என்ற முடிவுக்கு வரவேண்டிவரும். எனவே மதீனாவுக்கு வருகின்றவர்கள் நபித்தோழர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவிக்காது அவர்களின் தியாகங்களுக்காக அல்லாஹ்விடம் அவர்களுக்காக பிராத்திக்க வேண்டும்.

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய சில பித்அத்துக்கள்:

1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் கூடாது!

ஏனெனில் இவைகள் அனைத்தும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம், பிரார்தனை நமது மார்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள்:

‘துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்’ அபூதாவூத், திர்மிதி.

எனவே, ‘வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம்’ செய்யப்பட வேண்டியதாகும். இது ‘அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை’!

இதனை யாராவது மற்றவர்களுக்கு கொடுத்து விடுவாரேயானால், ‘அவர் அல்லாஹ்வின் உரிமையில் கைவைத்தவர்’ ஆகிவிடுவார். இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிராத்திக்கும் போது (அது நபியாக இருந்தாலும்) ‘அல்லாஹ்வோடு நபியை இணையாக்கி விட்டோம்’ என்ற ‘அல்லாஹ் மன்னிக்காத ‘ஷிர்க்’ என்ற பாவத்தை செய்தவர்களாக கணிக்கப்பட்டுவிடுவோம்.

நபியவர்கள் கூட நம்மைப் போன்று சாதாரனமாக தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றார்கள். பொதுவாக கப்ரிலே அடங்கப் பட்டிருக்கின்ற யாரிடமும் நமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’ (திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாறு இருக்கும்? என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’ உலக வாழ்க்கைக்கும் நாம் அனைவரும் எழுப்படும் ‘மறுமை‘ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.

எனவே, உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று ‘யா ரஸுலல்லாஹ்! எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்!’ என்று கேட்டதை ஆதாரமாக கொண்டு நாமும் நமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்க்க முடியாது. காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே அறியமாட்டோம். அதேவேளை பிராத்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது உலமாக்கள் மூலமாகவோ ‘இது பாத்திமா (ரழி) யின் கபுரு, இது அலி (ரழி) யின் கபுரு, இது இன்ன ஸஹாபியின் கபுரு’ என்று நினைத்துக் கொண்டு அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டிவைப்பதும் அல்லது துணிகளில் வைத்து கட்டி வைப்பதையும் காண்கின்றோம்.

(மொழிபெயர்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’ பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழி பெயர்பாலனாக கடமையாற்றிய போது, அல்லாஹ்வை மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிளவு போன்றவற்றை முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது.)

எனவே இது ‘மிகப் பெரும் ஷிர்க்’ என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

2) நபியவர்களின் கபுரு இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது:

அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாறு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க வேண்டும். நபியவர்களுடைய தோழர்கள் நபியவர்களுடைய கபுரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

3) நபியவர்களது கபுரை சூழவுள்ள சுவரை அல்லது ஜன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும்:

இவ்வாறான ஒரு வழிகாட்டளை நபியவர்கள் நமக்கு போதிக்கவில்லை. அதேவேளை நமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது நம்மை ஷிர்க் எனும் இணைவைத்தலுக்கு அழைத்துச் சென்று விடும்.

இவ்வாறு செய்யக் கூடியவர்கள், ‘நபியவர்கள் மீதுள்ள அன்பினால், நான் இவ்வாறு செய்கின்றேன்’ எனலாம். ஆனால் நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்கள் மீது அன்பு வைக்க வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, ஜன்னலை தொட்டு முகர்ந்து வெளிப்படுத்த முடியாது.

அன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றால், ‘நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன்’ மூலம் தான் அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.

அல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகின்றான்:

“(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்! உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்! மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.” ஆல இம்ரான் 31

நபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத் தான் அவர்களது அன்பையும் அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம் விளங்கலாம். நபியவர்களின் மீது அன்பு வைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.

‘ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காத வரை முஃமினாகமாட்டார்.’ புகாரி, முஸ்லிம்.

இதை விட ஒருபடி மேலே சென்று உமர் (ரழி) அவர்களுக்கு,

‘தனது உயிரை விட என்னை நேசிக்க வேண்டும்’ என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள். புகாரி.

காரணம் நாம் இன்று ‘முஸ்லிமாக’ இருக்கின்றோம் என்றால் அதற்கு நபியவர்களைக் கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். உலகில் இருக்கக் கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப் பெரும் அருட்கொடையாகும். எனவே இந்த அருட்கொடையை நபியவர்களின் மூலமாக பெற்ற நாம் அவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தை தூய வடிவில் பின்பற்ற வேண்டும். நமது இபாதத்துக்களை அவர் சொல்லித் தந்த அமைப்பிலே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை ‘நேசிக்கின்றோம்’ என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றுவதாகத் தான் இருக்க முடியும்.

இஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் ‘நல்ல அமல்’ என்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் மேலும் அது ‘அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்’ என்றால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன:

1) செய்யக் கூடிய செயல் ‘அல்லாஹ்வுக்காக மட்டும்’ என்ற தூய எண்ணம் (இஹ்லாஸ்)

2) குறித்த செயல் ‘நபியவர்கள் கட்டித் தந்த அடிப்படையில்’ எந்த கூட்டலும் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)

இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்.

ஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய

“(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.”

இவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள்.

இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் குறிப்பிடும் போது,

‘சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின் மூலம் சோதிக்கின்றான்’ என்றார்கள்.

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது,

‘நபியவர்களின் வழியை பின்பற்றாது ‘அல்லாஹ்வை விரும்புகின்றோம்’ என வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கன்றது. நபியவர்கள் கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலிலும் பின்பற்றாத வரை இவ்வாதம் பொய்பிக்கப்படுகின்றது.’

புகாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும் போது,

“(யார் நமது விஷயத்திலே (மார்க்கத்தில்) நமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்)”

எனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர்,

‘நாம் ஒன்றை விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை) விரும்புவது முக்கியமாகும்’ எனவே ‘அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம்’ என வாதிடுவதை விட்டு விட்டு ‘அல்லாஹ் நம்மை விரும்புவதற்கு’ காரணமாக இருக்கும் ‘நபியவர்களை பின்பற்றுதல்’ நம்மில் வந்தாக வேண்டும்’

என்றார்.

நபியவர்களது கபுரைச் சூழவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம் நவவி அவர்கள் கூறும் போது,

‘இது மார்க்கத்திற்கு முரணான, கண்டிக்கத்தக்க செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்-மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்.

நபியவர்கள் கூறினார்கள்:

“யார் நமது மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலை ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்” புகாரி.

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில்,

“எனது கபுரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கிவிடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள்! உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.” அபூதாவூத்.

இமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது,

‘நேர் வழியை சொற்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு தராது! நீ நேர் வழியை பின்பற்று. அழிவின் பக்கம் (வழிகேட்டில்) பெரும்பாண்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகேட்டை பின்பற்றுவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.

அறியாமையுடன் கபுரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன ‘பரக்கத்தை‘ தந்துவிடாது. இச்செயல் வன்மையாக கண்டிக்த் தக்கவையாகும். மேலும் ‘பரகத்து‘ என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

4) நபியவர்களின் கபுரைச் சுற்றி வலம்வருதல்:

இச்செயல் மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் அல்லாஹ் அவனது முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்) மார்க்கமாக ஆக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும்.” அல் ஹஜ் 29

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த ‘தவாப்’ எனும் வணக்கத்தை மாக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது,

‘அல்லாஹ்வின் ஆலயமாகிய (கஃபாத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.’ என்கிறார்.

5) நபியவர்களது கபுருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது:

நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

“முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் – அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.” (ஹுஜ்ராத் 2,3)

இதிலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும் கண்ணியத்துக்குரியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

6) பள்ளிக்கு வெளியேவோ அல்லது பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது:

இது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும் போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு இட்டுச் செல்லும் என்கின்றார்.

அதேவேளை சில மக்கள் மதீனாவுக்கு வரும் போது அதிகமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள். இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு இவ்வாறு பதில் கூறலாம்.

‘நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள். உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும்’ என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

மற்றும் ஒரு அறிவிப்பிலே,

‘உங்கள் வீடுகளை கபுருகளாக ஆக்கிவிடாதீர்கள். எனது கபுரை பெருநாள் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள் நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்

மேலும் ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதேவேளை மதீனாவை சியாரத் செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட அதற்குறிய நன்மை கிடைத்து விடும்.

ஆனால் ‘ஹஜ், உம்ரா செய்பவர் நபியவர்களின் கப்ரை ஸியாரத் செய்துதான் ஆக வேண்டும்’ என்பதற்கு சில ஹதீஸ்களை ஆதாரமாக கூறுவார்கள்:

‘யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்’

மேலும்

‘நான் மரணித்த பின் யார் என்னை ஸியாரத் செய்கின்றாரோ அவர் நான் உயிரோடு இருக்கும் போது ஸியாரத் செய்ததற்கு சமமாகும்.’

மற்றும் ஒரு செய்தியில்

‘யார் என்னையும் எனது தந்தை இப்ராஹீமையும் ஒரே வருடத்தில் தரிசிக்கின்றாரோ அல்லாஹ்விடம் அருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிக்கின்றேன்.’

மேலும்

‘யார் எனது கபுரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை கடமையாகிவிட்டது.’

மேற்குறிப்பிட்ட ‘எல்லா செய்திகளும் ஆதாரபூர்மற்ற இட்டுக் கட்டப்பட்ட செய்திகளாகும்’ என்பதனை மிகப்பெரும் அறிஞர்களான தாரகுத்னி, உகைலி, பைஹக்கி, இப்னு தைமிய்யா, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை சூரா நிஸாவின் 64ம் வசனமாகிய பின்வரும் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்.

‘அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.’

இந்த வசனம் அநியாயம் செய்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து பாவமன்னிப்பு தேடுவதை குறிக்கவில்லை! மாறாக நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது முனாஃபிகீன்கள் அவர்களிடம் வருவதை குறித்து கூறுகின்றது. காரணம் நபித்தோழர்கள் யாருமே நபியவர்களது கபுருக்கு பாவமன்னிப்பு தேடி வந்தது கிடையாது.

“உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வரட்சி ஏற்பட்ட போது நபியவர்களின் கபுருக்குச் செல்லாமல் அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிருத்தி துஆச்செய்தார்கள். ‘யா அல்லாஹ்! நாம் முன்னர் வரட்சி ஏற்பட்ட போது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம்! அப்போது நீ எங்களுக்கு நீர் புகட்டினாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தையைக் கொண்டு உன்னிடம் பிராத்திக்கின்றோம். நீ எங்களுக்கு நீர்புகட்டுவாயாக’ இந்த துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அம்மக்களுக்கு மழையை இறக்கினான்.” ஆதாரம்: புகாரி.

உண்மையிலேயே நபியவர்களின் மரணத்திற்கு பின் அவர்களிடம் சென்று பிராத்திக்க முடியுமாக இருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதே போன்று புகாரியிலே பதிவு செய்யப்பட்ட மற்றுமொறு அறிவிப்பிலே,

ஆயிஷா (ரழி) ஒரு முறை தலைவழி ஏற்பட்ட போது நபியவர்களிடம் முறையிட ‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் நான் உனக்காக பாலமன்னிப்பு தேடுவேன், மேலும் உனக்காக பிரார்திப்பேன்.’ ஆயிஷா (ரழி) இதைக் கேட்ட பின் நபியவர்களுக்கு முன் நானும் மரணிக்க வேண்டாமா? என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி

‘நபியவர்களது துஆ’ அவர்களது மரணத்திற்குப் பின்னரும் கிடைக்கும் என்றிருந்தால் நபியவர்கள் ‘நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ என செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

உதவி தேடும் நோக்கம் இல்லாமல் பொது மையவாடிகளை தரிசிப்பதை பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன:

“கபுருகளை தரிசியுங்கள், நிச்சியமாக அது மறுமையை நினைவுபடுத்தும்.” என்றார்கள். முஸ்லிம்.

என்றாலும் மையவடியிலே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி சியாரத் செய்யவும் கூடாது. காரணம் இச்செயல் அளவு கடந்த செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லும்.

அவ்வாறே நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவதன் சிறப்பு நிறையவே கூறப்பட்டுள்ளன. இது நபியவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. உம்மத்தினரின் கபுருகளுக்கு அடிக்கடி செல்லுவதற்கு இதனை ஆதாரமாக கொள்ளக் கூடாது. ‘நபியவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது அது மலக்குகள் வயிலாக எத்தி வைக்கப்படும்’ என்கின்ற ஹதீஸ்களை நாம் துவக்கத்திலே அறிந்து கொண்டோம்.

மேலும் பகீஃ மற்றும் உஹத் ஷுஹதாக்களை சியாரத்து செய்வது மார்க்க வரம்புக்குல் இருத்தல் வேண்டும். மார்க்க வரம்பு மீறப்படுகின்ற போது அது பித்அத்தான செயலாகிவிடும்.

கபுருகளை தரிசிப்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பிரயோசனங்கள் என்ன (உயிரோடு இருப்போருக்கும், மரணித்தவருக்கும்) என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டிக் காட்டிள்ளார்கள்.

உயிரோடு இருக்கும் மனிதர் (தரிசிக்கப் போகின்றவர்) மூன்று பிரயோசனங்கள் அடைந்து கொள்வார்:

1) மரணத்தை நினைவு கூர்கின்றார். நல்ல செயல்களைச் செய்து மரணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முடிகின்றது. இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்

‘கபுருகளை தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்’ முஸ்லிம்.

2) இச்செயல் நபியவர்களின் ஸுன்னாவாக இருப்பதால் இதற்கு நன்மை பதியப்படும்.

3) மரணித்த முஸ்லிம்களுக்காக துஆச் செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்ததாகிவிடும்.

மேலும் மரணித்தவரின் கபுருகள் தரிசிக்கப்படுகின்றபோது உயிரோடு இருப்பவரின் பிரார்த்தனையை பெற்றுக் கொள்கின்றார். இது மரணித்தவருக்கு பெரும் பிரயோசனமாகும். ஏனெனில் மரணித்தோர் உயிரோடு இருப்போரின் துஆவின் மூலம் நன்மை அடைகின்றார்.

நபியவர்கள் காட்டித் தந்த அமைப்பிலே கபுருகளில் இருப்போருக்காக நாம் பிராத்திக்க வேண்டும். புரைதத் இப்னு ஹுஸைப் (ரழி) அறிவிக்கும் ஹதிஸில்,

நபியவர்கள் கபுருகளுக்குச் சென்றால் பின்வரும் துஆவை ஒதக்கூடியவாக இருந்தார்கள்:

‘முஃமின்களிலும், முஸ்லிம்களிலும் கபுருகளில் இருக்க கூடியவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். மேலும் நிச்சியமாக நாங்களும் உங்களை சந்திக்க இருக்கின்றோம். எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை வேண்டுகின்றோம்.’ முஸ்லிம்.

கபுருகளை தரிசிப்பது ஆண்களைப் பொருத்தவரையில் ‘விரும்பத்தக்க ஒரு செயலாகும்’ ஆனால் பெண்களைப் பொருத்தவரை அறிஞர்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒருபிரிவினர் இதனை தடைசெய்கின்றனர். மற்றும் சிலர் இச்செயலை அனுமதிக்கின்றனர். என்றாலும் இவ்விரண்டு கருத்துக்களிலும், ‘பெண்களுக்கு கபுருகளை தரிசிப்பதை தடை செய்யக்கூடிய கருத்து மிகவும் வழுவானது’ காரணம் நபியவர்கள் கூறினார்கள்

‘கபுருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கட்டும்.’ திர்மிதியிலே பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.

பெண்களுக்கு ஸியாரத்தை அனுமதிப்பவர்கள் கூறுவது போன்று, ‘அடிக்கடி சியாரத் செய்யக் கூடிய பெண்ணுக்குத்தான் அல்லாஹ்வின் சாபம்’ என கூற முடியாது. கீழ் வரும் அல்-குர்ஆனிய வசனத்திலும் அதிகமான ‘அநியாயம் செய்பவன்’ என்று பெருள்கொள்ள முடியாது.

“உமது இறைவன் அடியார்கள் மீது அநியாயம் செய்பவனாக இல்லை” சூரா புஸ்ஸிலத் 46

எனவே பொதுவாகவே ‘சியாரத் செய்யும் பெண்ணுக்குத் தான் அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது’ என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ‘பெண்கள் பலகீனமானவர்கள்’ என்பதாலும் அவ்வாறே அழுவது, ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனாலும் கபுருகளை சியாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனலாம்.

அவ்வாறே பெண்கள் இதனை விட்டு விட்டாலும் ஒரு விரும்பத்தக்க விடயத்தை விட்டாதாகவே கருதப்படுமே தவிர கடமையான செயலை விட்டதாகிவிடாது. ஆனால் கபுருகளை தரிசிக்கின்ற போது அல்லாஹ்வின் சாபத்திற்கு உரியவளாகிவிடுகின்றாள்.

பித்அத்தான தரிசிப்பை பொருத்த வரையில் இஸ்லாம் ஆகுமாக்காத செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

கபுருகளில் அடங்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, தமது தேவைகளை நிறைவேற்றுமாறு வேண்டுவது போன்ற பல இஸ்லாத்திற்கு முரணான விஷயங்களை உதாரணத்திற்கு கூறலாம்.

பித்அத்தான தரிசிப்பின் மூலம் கபுருகளிலே உள்ளவர்கள் பிரயோசனப் படப்போவதில்லை. அதேவேளை தரிசிக்கச் சென்றவரும் எந்த வித பிரயோசனங்களும் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டு குறித்த இடத்தை விட்டு திரும்பிவர நேரிடும்.

இது தொடர்பாக அஷ்ஷெக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது

‘மேற்படி அடங்கப்பட்டவர்களிடம் உதவி தேடி தரிசிக்கச் செல்வது பித்அத்தான காரியமாகும். மேலும் இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது. நமக்கு முன்னிருந்தவர்கள் யாருமே இவ்வாறு செய்தது கிடையாது. மாறாக நபியவர்கள் கூறியது போன்று ‘கபுருகளை சியாரத்து செய்யுங்கள்! மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’!” முஸ்னத் அஹமத், முஅத்தா மாலிக்)

எனவே இச்செயல் பித்அத்தாக இருந்த போதிலும் சில செயல்கள் ‘பித்அத்’ என்ற அந்தஸ்திலும் மற்றும் சில செயல்கள் ‘ஷிர்க்’ என்ற நிலையிலும் உள்ளன. மேலும் கபுருகளிடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்திப்பது பித்அத்தான செயலாகுவதுடன், கபுருகளில் உள்ளோரிடம் நமது தேவைகளைக் கேட்டுப் பிரார்திப்பது, உதவி தேடுவது இணைவைப்பாகும்.

எல்லம் வல்ல அல்லாஹ் நம்மையும், இந்த மதீனாவிலே வாழக் கூடியவர்களையும், இங்கு தரிசிக்க வருபவர்களையும் பெருந்திக் கொண்டு புகழப்படக்கூடிய நல்ல முடிவை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக! இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக! நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
3 thoughts on “மதீனா ஓர் புனித பூமி”
  1. the article about holy land by moulvi risqan musdeen madani is excellent.and if he noted the number of hadeed it will be useful to readers.

  2. அன்புள்ள சகோதரர் பஷீர் அஹமத் அவர்களுக்கு,
    உங்களது கருத்து உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனாலும் நான் மேற்படி மொழிபெயர்பில் ஹதீஸ் இலக்கங்களை குறிப்பிடாமைக்கு காரணம் இந்த புத்தகத்தை எழுதிய அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் அவர்கள் சமகாலத்தில் ஹதீஸ் துரையில் மிகவும் புலமை பெற்ற பேரறிஞராவார். அவர் தற்போது கூட மதீனா ஹரம் ஷரீபிலே ஹதீஸ் கிரந்தங்களுக்கான விளக்க உரையை தொடர்ந்தும் பல வருடங்களாக வழங்கி வருகின்றார். மேலும் அவர் மேற்படி புத்தகத்தில் ஹதீஸ்களுக்கான இலக்கத்தை குறிப்பிடாத காரணத்தாலும் அடியேன் அதனை தவிர்ந்து கொண்டேன். என்றாலும் நீங்கள் கூறுவதைப் போன்று இலக்கங்களை குறிப்பிட்டிருந்தால் நல்லது. ஜஸாகல்லாஹு ஹைரன்.

Leave a Reply to basheer ahamed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You missed