‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்?

அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்க்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

“அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!” (18:10) என்று கூறினார்கள்.

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக” (2:186)

அல்குர்ஆனின் ஆரம்ப பகுதியாகிய சூரதுல் பகராவின் 186 வது வசனத்திலே ‘யார் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்து, அவனை மட்டும் வணங்கி, அவனிடமே தனது தேவைகளையும் முன்வைக்கின்றாரோ’ அவருக்கு ‘ருஷ்த்’ எனும் ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சி கிடைக்கும்’ என எல்லாம் வல்ல அல்லாஹ் வாக்களிக்கின்றான்:

“என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!” (18:24)

இந்த பிரார்தனையை அதிகமதிகம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். உண்மையான நேர்வழியை காட்டுபவன் அவன் ஒருவனே!

“இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்; எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்” (18:17)

மூஸா நபியவர்கள் ஹில்ர் (அலை) அவர்களிடம் சென்று உங்களுக்கு அல்லாஹ் கற்பித்த நேர்வழியை ‘ருஷ்த்’ ஐ நான் கற்றுக் கொள்ள வந்துள்ளேன் என பின்வருமாறு கூறினார்கள்:

“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்” (18:66)

அல்குர்ஆனின் நடுப்பகுதியாகிய சூரதுல் கஹ்ப் குகைவாசிகளின் வரலாற்றைப் பற்றி பேசும் அத்தியாயத்தின் நான்கு இடங்களில் இந்த ‘ருஷ்தைப்’ பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

ஜின்கள் நபியவர்களிடம் இருந்து அல்குர்ஆனை செவியுற்ற போது என்ன கூறினார்கள்? அவர்களும் நேர்வழியை கேட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்! அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்’ (என்று அந்த ஜின் கூறலாயிற்று)” (சூரதுல் ஜின் 1, 2)

அல்குர்ஆனின் இருதிப் பகுதியாகிய சூரதுல் ஜின் எனும் அத்தியாத்தில் நாம் தேடிக் கொண்டிருக்கும் நேர்வழி இந்த அல்குர்னிலே இருப்பதை ஜின்கள் கண்டு கொண்டதாக அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

அல்குர்ஆனில் நேர்வழியை ஜின்களாலே கண்டு கொள்ள முடிந்தும் கூட மனித சமூகத்தில் எத்தனையே பேர் இன்னும் இந்த நேர்வழியை சரிவர அல்குர்ஆனிலே கண்டு கொள்ளாமல் ‘சிந்திக்கத் தூண்டும் அல்குர்ஆனை வெறும் பரக்கத்துக்காக மாத்திரம் ஓதி விட்டு மூடிவிடும்’ அவல நிலை தொடர்வதை அவதானிக்கலாம்.

எனவே மேற்படி ‘நேர்வழியுடன் கூடிய அறிவு முதிர்சியை’ பெற வேண்டுமென்றால் முதற்கட்டமாக,

– அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்து, அவனை மாத்திரம் வணங்கி, அவனிடமே உதவி தேடுவதனூடாகவும்,

– மூஸா நபியைப் போன்று உண்மையான அறிவு எது என்று தேடிக் கற்றுக் கொள்ளும் பண்பை எம்மிடம் வளர்பதனூடாகவும்,

– அல்குர்ஆனில் நேர்வழி இருக்கின்றது என்பதை உறுதியாக நம்பிக்கை கொண்டு அல்குர்ஆனிய போதனைகளை கற்று அவற்றை எமது வாழ்வில் எடுத்து நடப்பதனூடாகவும்

மேற்படி ‘நேர்வழியுடன் கூடிய அறிவு முதிர்சியை’ அடைந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக!

அன்பர்களே!

‘நேர்வழியை, காரியங்களில் இலகு, காரியங்களில் நல்லது, உறுதியை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்பது மற்றும் அவனுடைய வஹியின் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது’

என்பன நமது இன்மை மற்றும் மறுமை வெற்றியை உறுதி செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Hits: 193

மற்றவர்களுக்கு அனுப்ப...

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *